Latest News

  

ஜெர்மனியில் வேலை ரெடி.. உயர் கல்விக்கும் வாய்ப்பு!


வெளிநாட்டு வேலை என்றாலே நம்மவர்கள் அமெரிக்காவையும் வளைகுடா நாடுகளையும்தான் நினைப்பார்கள். ஆனால், ஜெர்மனியில் பல லட்சம் பேர் வேலைக்குத் தேவையாக இருக்கின்றனர் என்பது லேட்டஸ்ட் செய்தி. அங்கு என்னென்ன வேலைக்கு ஆட்கள் தேவை? அதற்கு என்ன படித்திருக்கவேண்டும்? சம்பளம், வசதி போன்ற சமாசாரங்கள் எப்படி? இந்த எல்லாக் கேள்விகளுக்குமான பதிலைச் சொல்கிறார் மேக்-இட்-இன்-ஜெர்மனி என்னும் இணையதளத்தின் ஆலோசகர் வெங்கட் நரசிம்மன்.
nav64a
”வரும் 2025-க்குள் ஜெர்மனியில் சுமார் ஆறு மில்லியன் வேலை வாய்ப்பு உருவாக வாய்ப்புள்ளது. ஆனால், அங்கு மக்கள்தொகை ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. இதன் விளைவாக இளைஞர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து வருகிறது. அங்கு இருக்கும் இளைஞர்களில் பாதிபேர் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். மீதமிருக்கும் இளைஞர்கள் அரசியல், சமூகம், சட்டம் போன்ற படிப்புகள் படிக்கவே ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் கணிதம், ஐ.டி., தொலைதொடர்பு, இயற்கை அறிவியல், இன்ஜினீயரிங் படிக்க ஆட்கள் இல்லை. எனவே, இந்தத் துறைகளில் வேலை பார்க்கவும் ஆட்கள் கிடைப்பதில்லை.

ஆனால், இந்தியாவில் இத்துறைகளில் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்; அதோடு மக்கள்தொகையும் அதிகம் என்பதால், இந்தியாவின்மீது ஜெர்மனி தனது பார்வையைத் திருப்பி உள்ளது. மேலும், இந்தோனேஷியா, வியட்நாம் நாடுகளிலிருந்து பணியாட்களை கவரும்விதமான முயற்சிகளை ஜெர்மனி எடுத்து வருகிறது.
nav64e
இந்தியாவில் இருக்கும் இளைஞர்களை கவர்ந்து இழுப்பதற்காக தனியாக ஒரு இணையதளத்தையும் தொடங்கி (http://www.make-it-in-germany.com) நடத்தி வருகிறோம். அதில், ஜெர்மனியில் எந்தெந்த நிறுவனத்தில் வேலை உள்ளது, வேலையின் பெயர் என்னென்ன, என்ன தகுதிகள் வேண்டும், எந்தமாதிரியான வேலை என்பதுபோன்ற அனைத்துத் தகவல்களும் இந்த இணையதளத்தில் உள்ளன. மேலும், இதற்கென டெல்லியில் அலுவலகம் அமைத்து உள்ளது ஜெர்மனி.

ஜெர்மனியில் எல்லாத் துறைகளிலும் வேலை கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. மெக்காட்ரானிக்ஸ், கெமிக்கல், ஐ.டி., மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் போன்ற இன்ஜினீயரிங் துறைகளில் அதிகமான ஊழியர்கள்  தேவைப்படுகிறார்கள். ஆனால், சிவில் இன்ஜினீயரிங் துறையில் வேலை இருக்காது. இந்தப் படிப்பை அதிகமான ஜெர்மானியர்கள் படிக்கிறார்கள். அதேபோல தொலைதொடர்பு, அறிவியல், கணிதம் தொழில்நுட்பத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இந்தியர்களை ஈர்க்கும்விதமாக பல சலுகைகளையும் ஜெர்மனி அரசு வழங்குகிறது. இந்தத் துறைகளில் இளைநிலை, முதுநிலை பட்டதாரிகள் யார் வேண்டுமானாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஜெர்மனியில் வேலைக்கு விண்ணப்பிப்பவர்களின் மனைவி அல்லது கணவன் உடன் செல்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கித் தந்துள்ளது. குடும்பமாக வருபவர்கள் சிறப்பாகவும், நீண்டகாலத்திற்கு வேலை பார்ப்பார்கள் என்ற ரீதியில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.  குழந்தைகளின் படிப்புக்குத் தேவையான அனைத்து ஏற்பாட்டையும் செய்து தருகிறது. அதாவது, பள்ளிப் படிப்பை ஜெர்மனியில் துவங்கும் குழந்தைகளுக்கு கல்வியை இலவசமாகவே தருகிறார்கள். மேலும், இங்கு சென்று பாதியில் படிக்க ஆரம்பிக்கும் மாணவர்களுக்கு சிறப்புச் சலுகைகளையும் வழங்குகிறது.
மேலும், ஜெர்மனியில் உற்பத்தித் துறைக்கு தேவைப்படும் ஆட்களுக்கு அடிப்படையாக ஜெர்மன் மொழி தேவை. இதற்காக இந்திய அரசுடன் இணைந்து 1,000 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மனியைத் துணை மொழியாக அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதனால், ஜெர்மன் படிப்பவர்களுக்கு இந்தியாவிலேயே ஆசிரியர் பணி கிடைப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஜெர்மனிக்கு வேலைக்குச் செல்லும்போதே அந்த அரசு புளூ கார்டு வழங்குகிறது. இதை வைத்துக்கொண்டு இங்கு 36 மாதங்கள் வேலை செய்யலாம். அதன்பிறகு ஐரோப்பிய நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம். அதேபோல, அங்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வேலை பார்ப்பவர்களுக்கு அவர்களின் 65 வயது கடந்தபின் ஆயுள் முழுக்க பென்ஷனும் இந்த அரசு தருகிறது. இதற்கு ஜெர்மனியில் கட்டாயம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
அதேபோல, குறைந்தபட்ச ஆண்டுச் சம்பளம் என்பது 34,944 யூரோ (ஒரு யூரோ என்பது இந்திய மதிப்பில் சுமார் 70 ரூபாய்) வரை சம்பளம் இருக்கும். இது, அவர்கள் செய்யும் வேலை, வகிக்கும் பதவிக்கு ஏற்ப அதிகரிக்கும். அதோடு, ஒரு ஜெர்மானியருக்கு வழங்கப்படும் அத்தனை சலுகையும் இந்தியர்களுக்கும் கிடைக்கும்” என்றார் வெங்கட் நரசிம்மன்.
nav64d
”வேலை வாய்ப்பு மட்டுமல்லாமல் ஜெர்மனியில் உயர்கல்வி பயில்பவர்களுக்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன” என்கிறார் ஜெர்மன் அகாடமிக் எக்ஸ்சேஞ்ச் சர்வீஸின் அலுவலக மேலாளர் பத்மாவதி சந்திரமௌலி. அவரே தொடர்ந்து சொன்னார். ”உயர்கல்வி படிப்பவர்களுக்கு ஜெர்மனி அரசாங்கம் பல வசதிகளைச் செய்து தருகிறது. ஐ.டி., இன்ஜினீயரிங், இயற்கை அறிவியல், தொலைதொடர்புகளுக்கான படிப்பைப் படிக்க விரும்புகிறவர்கள் அங்கு போய் படிக்கலாம். முதுநிலைப் படிப்பிற்கு பல சலுகைகளை வழங்குகிறது ஜெர்மனி அரசாங்கம்.

இங்கு, பழைமை வாய்ந்த பல்கலைக் கழகங்கள் பல இருக்கின்றன. மேலும், இங்கு செய்முறைப் பயிற்சிகள் அதிகம் இருக்கும். ஆராய்ச்சிப் படிப்புகள் படிப்பதற்கும் பல வசதிகள் செய்து தரப்படுகிறது. ஜெர்மனியில் தங்கிப் படிக்க ஓர் ஆண்டுக்கு 5.5 லட்ச ரூபாய் செலவாகும். உங்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும்பட்சத்தில் இந்தச் செலவைப் பற்றி நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. அதேபோல, படித்து முடித்தபிறகு 18 மாதங்கள் வரை அங்கு தங்கி வேலை தேடுவதற்கான வசதியையும் செய்து தருகிறது ஜெர்மனி அரசாங்கம். கடந்த வருடம் இந்தியாவிலிருந்து 6,000 மாணவர்கள் ஜெர்மனிக்கு மேல்படிப்பு படிக்கச் சென்றுள்ளனர்.
ஜெர்மனிக்குச் சென்று படிக்க விரும்புகிறவர்களுக்கு செய்முறை அனுபவம் அதிகம் இருந்தாலே எளிதாக அட்மிஷன் கிடைத்துவிடும். கோடை விடுமுறையில் தொழில் நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு அட்மிஷன் கிடைப்பது எளிது” என்று முடித்தார் பத்மாவதி சந்திரமௌலி.
நல்ல கல்வி, நல்ல வேலை, நல்ல சம்பளம் கிடைக்கும் ஜெர்மனிக்குக் கிளம்பலாமே!
நன்றி : சித்தார்கோட்டை

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.