கொத்தகொண்டப்பள்ளி, கிராமத்திற்குச் சென்றபோது, அனைவரது வீட்டு வாசலிலும் தொங்கிய அட்டைப் பெட்டிகளின்மேல் விளையாடிக் கொண்டிருந்த சிட்டுக்குருவிகளின் ‘கீச் கீச்’ சத்தம் நம்மை வரவேற்றது. எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்?
எங்க கிராமத்துல 350 குடும்பத்துக்கும் மேல குடியிருக்கோம். முன்னல்லாம் நாலஞ்சு குருவிங்க மட்டுமே தென்படுற ஊர்ல, இப்போ 1,000 க்கும் மேல சிட்டுக்குருவிங்க சர்வ சாதாரணமா எல்லார் வீட்டுக்குள்ளேயும் வெளியும் சுதந்திரமா பறந்து வாழ முக்கியக் காரணம்,

டி.வி.எஸ். கம்பெனியோட, ‘சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை’யும், எங்களோட ஆர்வம் மிகுந்த பங்களிப்பும்தான். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி, ‘சீனிவாசன் அறக்கட்டளை’யைச் சேர்ந்த நிர்வாகிங்க, எங்க எல்லோருக்கும் ஒரு மீட்டிங் போட்டாங்க. அந்த மீட்டிங்ல ஓடு மற்றும் குடிசை வீடுகளிலிருந்து கான்கிரீட் வீடுகளுக்கு மக்கள் மாறி வருவதாலும், மரங்களை அழித்து பாதுகாப்பு இல்லாத சூழலை ஏற்படுத்துவதாலும் சிட்டுக்குருவிகள் இனமே அழிஞ்சிட்டு வருது. வண்டு, புழு,பூச்சிகளை உணவாக உண்பதால் பூச்சிகளின் தாக்குதல்களிலிருந்து மக்களையும், பயிர்களையும் காக்கும் அரணாக சிட்டுக்குருவிகள்தான் உள்ளன.
அதனால், கிராமம் முழுக்க அனைத்து வீடுகளிலும் சிட்டுக்குருவிகள் வந்து செல்லும்படி அட்டைப்பெட்டிகளைப் பொருத்தி, அதன் பெருக்கத்தை அதிகரிக்க வேண்டும். அட்டைப் பெட்டிகளை நாங்களே இலவசமாக தருகிறோம், நீங்கள் பாதுகாப்பு தந்து உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். ஏற்கெனவே சீனிவாசன் அறக்கட்டளையினர் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஏற்படுத்தி,எங்களுக்குப் பல நல்லது பண்ணியிருந்ததால, அவர்கள் மீதான மதிப்பிலும் சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வு அடைஞ்சதாலும் வீடுகளில் அட்டைப்பெட்டிகளை வைக்க ஒப்புக்கிட்டோம்.
இந்த விஷயத்துல பெரியவங்களை விட குழந்தைகள்தான் ரொம்ப சுறுசுறுப்போட இயங்கினாங்க.அட்டைப்பெட்டிகளை வாங்கி, எல்லா வீட்டு வாசலிலும் கயிறு கட்டி, பாதுகாப்பான இடத்துல தொங்க விட்டோம். ஆரம்பத்துல சிட்டுக்குருவிங்க அட்டைப் பெட்டிக்குள்ள போகாம, மேல உட்கார்ந்து பார்த்துட்டுப் பறந்துடும். குருவிங்களோட நடவடிக்கை இப்படியே ரெண்டு மாசம் போகிட்டிருந்துச்சு. அதுங்க வரும்போது நாங்க எந்தவிதமான தொந்தரவும் கொடுக்காம அரிசி,கோதுமை போன்ற தானியங்களை தொடர்ந்து உணவாகப் போட்டோம்.
என்ன ஆச்சரியம்! கொஞ்ச நாளுலேயே ஒவ்வொரு அட்டைப் பெட்டிக்குள்ளும் சிட்டுக்குருவிங்க தங்கினது மட்டுமில்லாம, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கவும் செஞ்சுச்சு. இதைப் பார்த்துட்டு ஊர்க்காரங்க அடைந்த சந்தோசத்துக்கு அளவே கிடையாதுன்னு சொல்லலாம்.
அட்டைப்பெட்டியில ஓரளவு பெரிய துவாரம் இருக்கிறதால வைக்கோல், சின்ன முட்குச்சிகள் மற்றும் காந்த நாறுகளை எடுத்து வந்து கூடுகளையும் கட்டி வச்சிருக்கு. சிட்டுக்குருவிங்களுக்கு பூனையும் மழையும் எதிரிங்கிறதால, வராண்டாவுல எட்டாத அளவுக்கு கயிறு கட்டி அட்டைப்பெட்டிகளை பொருத்தியிருக்கோம். ஒரு பெட்டியில 4 குருவிங்க வரை தங்குது. இப்போ எங்க வீட்டு அட்டைப்பெட்டியில 36 குருவிங்க இருக்கு. அதுங்களை குழந்தைகளைப்போலப் பார்த்துக்கிறோம். குஞ்சுகளை மட்டும் விட்டுட்டு, காலையில வெளியில போற சிட்டுக்குருவிங்க சுதந்திரமா சுத்திட்டு, இருட்டறதுக்குள்ள அட்டைப்பெட்டிக்கு வந்துடும். எங்க குடும்பத்துல ஒருத்தரா மாறிப்போகவே, ரொம்ப பாதுகாப்பா பார்த்துக்கிறோம். இதுவரைக்கும் நாங்க அதுங்களை கூண்டுல அடைச்சதோ, பறந்து போய்டும்னு வீட்டுக்குள்ளேயே வளர்த்ததோ கிடையாது. அதுங்க விருப்பத்துக்கு சுத்தி வருது.
சீனிவாசன் அறக்கட்டளை முதன் முதலா எங்க கிராமத்துலதான், இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினாங்கங்கிறது பெருமையா இருப்பதோடு, சிட்டுக்குருவி எல்லா வீட்லயும் வசிக்கிறதால, கிராமமே செழிப்பா இருக்குன்னு நம்புறோம்’ என்று நம்பிக்கை வெளிப்படும் குரலில் அழுத்தமாகப் பேசுகிறார், கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அல்போன்சா.
1916ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, ‘சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை’ சுற்றுச்சூழல் பாதுகாத்தல், பெண்களுக்கு சுய உதவிக்குழுக்கள் அமைத்துத் தருதல்,கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை டி.வி.எஸ். கம்பெனியின் நிர்வாக இயக்குநர் வேணு ஸ்ரீநிவாசன் தலைமையின்கீழ் இந்தியாவில் 5மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது. ஏற்கெனவே ஓசூரிலுள்ள டி.வி.எஸ். கம்பெனியிலேயே ஒரு பறவைகள் சரணாலயம் அமைத்துள்ளோம். அதில்100க்கும் மேற்பட்ட பறவைகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் சேர்ந்துள்ள சிட்டுக் குருவி இனத்தைப் பற்றி கவலை கொண்ட வேணு ஸ்ரீநிவாசன் சார், அவற்றை அழிவிலிருந்து மீட்க எங்கள் குழுவிடம் சில யோசனைகள் கூறி செயல்படுத்தச் சொன்னார். இதற்காக நாங்கள் பறவைகள் ஆராய்ச்சியாளர்களிடமும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமும் பல நாட்கள் கலந்தாலோசித்து தகவல்கள் சேகரித்தது மட்டுமல்லாமல், ஓர் உண்மையையும் புரிந்துக்கொண்டோம். செல்போன் டவரிலிருந்து வரும் கதிர் வீச்சுகளால் சிட்டுக்குருவிங்களுக்கு எவ்வித ஆபத்துமில்லை என்ற உண்மைதான் அது. இதையே ஒரு சேலஞ்சாக எடுத்துக்கொண்டு அனைத்து செல்போன் நெட்வொர்க்குகளின் டவர்களிலும், அருகிலேயே உள்ள கிராமமான கொத்தகொண்டப்பள்ளியில் சிட்டுகுருவி இனப்பெருக்கம் அதிகரித்தல் திட்டத்தை 2011ம் ஆண்டு செயல்படுத்தினோம்.
இத்திட்டத்திற்காக பறவை ஆராய்ச்சியாளர்களிடம் கருத்து கேட்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக சிட்டுக்குருவிங்க வளர ஏற்ற அட்டைப்பெட்டிகளை நாங்கள்தான் தயார் செய்தோம். செவ்வக வடிவில் உள்ள இந்த அட்டைப்பெட்டிகள் 30 சென்டிமீட்டர் நீளமும், 25சென்டிமீட்டர் அகலமும், 5 சென்டிமீட்டர் விட்டம் உள்ள துவாரமும் கொண்டவை. மேலும் லாகவகமாக சிட்டுக்குருவிங்க வெளியே சென்று வர ஏற்றதாய் அமைக்கப்பட்டுள்ளது. வீடுகளின் வெளியில் அட்டைப் பெட்டிகள் பொருத்தியதால், கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தில் 2வருடங்களிலேயே சிட்டுக்குருவிங்க அதிகளவில் வரத் தொடங்கி, குஞ்சு பொரித்து தற்போது ஆயிரத்திற்கும் மேல் பெருக்கமடைந்துள்ளன. எங்கள் முதல் முயற்சியே வெற்றியடைந்துள்ளதால்,தமிழகத்தில் கிருஷ்ணகிரி, வேலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 205கிராமங்களிலும் கர்நாடகாவில் 40 கிராமங்களிலும் சிட்டுக்குருவிங்க பெருக்கத்தை ஊக்குவிக்க, 10ஆயிரம் அட்டைப் பெட்டிகளை மக்களுக்கு இலவசமாகவே கொடுத்துள்ளோம்.
ஓர் அட்டைப் பெட்டி தயாரிக்க, 12 ரூபாய் செலவு ஆகிறது. அனைத்து செலவுகளையும் எங்கள் அறக்கட்டளையே ஏற்றுக் கொள்கிறது. சிட்டுக்குருவிகள் பொந்தான பகுதிகளிலும் ஓட்டு வீடுகளிலும்தான் வாழும். கான்கிரீட் வீடுகள் வந்ததால் மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியாமல் அழிந்து கொண்டும் காட்டுப் பகுதிகளுக்குச் சென்று கொண்டும் இருக்கின்றன. நாங்கள் அவற்றிற்கு மறுவாழ்வு தந்திருக்கிறோம்" என்று பூரிப்புடன் பேசுகிறார், முன்னாள் வனத்துறை தலைவரும், ‘ஸ்ரீநிவாசன் சேவைகள் அறக்கட்டளை’யின் டெப்டி சேர்மனுமான சி.கே. ஸ்ரீதரன்.
தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டு அரசுகள் சிட்டுக்குருவி வளர்ப்பை ஊக்குவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
“பறவைகள் இல்லை என்றால், 15 அடி உயரத்திற்கு பூமியில் பூச்சிகளாகத்தான் இருக்கும்”
“உலகில் மொத்தம் 9 ஆயிரத்து 700 வைகை பறவையினங்கள் உள்ளன். அவற்றில் இந்தியாவில் மட்டுமே 40 சதவிகித சிட்டுக்குருவிகள் இனம் அழிந்துவிட்டது. பழைய காலத்து வீடுகல் இல்லாததும், அரிசி தானியத்தி புடைத்துப் போடாததும் அழிவிற்கு முக்கியக் காரணம்.
மைனாக்கள், காக்கைகள் போன்ற பறவைகள் செல்போன் டவர்கள் அருகிலேயே இன்றும் வாழும்போது, கதிர்வீச்சினால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதென்பதில் துளியளவும் உண்மையில்லை. சரியான வாழ்விடம் கிடைக்காததால்தான் அவை அழிந்து போகின்றன. இல்லையென்றால், காடுகளுக்கு இடம் பெயர்கின்றன. பொதுவாக சிட்டுக்குருவியின் உணவு,பூச்சிகள்தான். ஏறத்தாழ 75 விழுக்காடு பூச்சிகளையே உண்கின்றன. பொதுவாகவே பறவைகள் மட்டும் இல்லையென்றால், 15 அடி உயரத்திற்கு பூமியில் பூச்சிகளாகத்தான் இருக்கும். இதனால் மரம், செடிகளை பூச்சிகள் முழுமையாக அழித்து விடும் அபாயம் உள்ளது”.
நன்றி
- முகமது அலி
சுற்றுச்சூழல் ஆர்வலர்
No comments:
Post a Comment