Latest News

  

பாதுகாப்போம் : முதியோர்களை !!!



இளமைக்காலங்களில் இன்பமாய் வாழ்ந்திட்டு முதுமை நிலை அடைந்ததும் தனது உழைப்பில் ஈட்டிய சொத்துக்கள், உடமை, நகை, பணம், வாகனம் என அனைத்தையும் தன் சொந்தங்களுக்காக நம்மை கவனித்துக்கொள்வார்கள் என நம்பி அவர்களிடம் கொடுத்துவிட்டு சொந்தங்களினாலும், உறவாலும், அன்பாலும், பாசத்தாலும், சமூகத்தாலும், தூரமாக்கப்பட்டு நம் நாட்டில் எத்தனையோ முதியோர்கள் தாயாகவும் , தகப்பனாராகவும், தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா, சின்னம்மா, பெரியம்மா, தாய்மாமன், மாமிமார்கள் என அனைத்து உறவார்களும் உறவறுந்த நிலையில் முதியோர் என்ற பட்டத்துடன் அரவணைக்க ஆளின்றி வெறும் ஜடமாக நமது மத்தியில் உலா வந்து கொண்டிருக்கிறாகள். இவர்கள் செய்த தப்பு என்ன...??? முதுமை அடைந்து விட்டார்கள்..!?!?

இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர் ஜீவராசிகளுக்கும் பரிணாம மாற்றங்கள் ஏற்படும். அதை யாரும் மாற்றி அமைக்க முடியாது.அதாவது இனிப்பு கசப்பு, இன்பம் துன்பம்,லாபம் நஷ்டம்,விருப்பு வெறுப்பு, நட்பு பகை, பிறப்பு இறப்பு, இளமை,முதுமை, இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம். நம் வாழ்வில் அனைத்தையும் எதிர்ப்பதமாக சந்தித்தே ஆக வேண்டும். அதுவே நியதி.

முதுமை நிலையை அடைந்து விட்டாலே ஏக்கம் வந்துவிடும். இந்த சமயத்தில் அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதும் தாழ்வு மனப்பான்மையை போக்குவதும் நாம் அவர்களுக்கு கொடுக்கும் சின்னச்சின்ன அங்கீகாரமே...! அந்த ஏக்கத்தை மகிழ்விப்பதே அவர்களுக்கு நாம் கொடுக்கும் நோய் போக்கும் மருந்தாகும். சின்ன சின்ன காரியங்களானாலும் அவர்களிடமும் கலந்து ஆலோசனை கேட்பது அல்லது அவர்களிடம் தெரியப்படுத்துவது அவர்களுக்கு ஒரு வித மகிழ்ச்சியை கொடுக்கும். புத்துணர்வை கொடுக்கும்.

அடுத்து அவர்களின் மனநிலையை புரிந்து கோபப்படாமல் சேவை செய்வது,முகம் சுழிக்காமல் உதவிகள் செய்வது பிரிவினை பாராமல் பாசம் காட்டுவது. அரவணைத்து அன்பு காட்டுவது.ஆகியவையே அவர்களின் ஏக்கத்தன்மையை போக்கி மனம் மகிழ்ச்சியை கொடுக்கும். இதுவே அவர்களின் நீண்ட நாள் வாழ்விற்கும் மகிழ்விற்கும் ஒரு காரணம்.

நம் கண்முன் எத்தனையோ நிகழ்வுகளை பார்க்கிறோம்.வீட்டில் ஏதாவது விசேசம் என்றால் வயதானவர்களை தூர ஒதுக்கி ஒரு ரூமில் அடைத்து வைத்து விட்டு அவர்கள் மட்டும் அனைத்து சொந்த பந்தங்களுடன் மகிழ்வுடன் கொண்டாடுகிறார்கள். தன் மகனோ,மகளோ, பேரனோ, பேத்தியோ ஒரு வாகனமோ, தொழிலோ இன்னும் சொல்லப்போனால் கல்யாணம் செய்து கொண்டாலோ தாத்தா பாட்டியிடம் சொல்வதில்லை.இதை நினைத்து அவர்களின் மனம் வேதனையுரும்போது உடல் ரீதியால் சீக்கிரமே பாதிப்படைந்து விடுகிறார்கள்.

இன்று அவர்கள் முதுமை என்றால் ஒரு நாள் நாமும் முதுமை நிலை அடைந்தே ஆக வேண்டும். அன்று..!?!?! நீங்கள் செய்த தவறைத்தான் நீங்கள் செல்லமாக வளர்த்த உங்களின் அன்பு மகனோ மகளோ, மருமகனோ, மருமகளோ, பேரனோ, பேத்தியோ செய்வார்கள்.ஒரு காலத்தில் நமக்கு பணம் காய்க்கும் மரமாகவும் பக்க துணையாவகவும் இருந்து நம் வாழ்க்கைக்கு வழி வகுத்து கொடுத்தவர்களை நன்றி மறவாது நாம் முடிந்தவரை அவர்களுக்கு கடமை உணர்வுடன் சேவை செய்வதே சிறந்த மனிதப்பண்பு.

ஆக முதுமை நிலை அடைந்து விட்டாலே நாம் இந்நிலைக்குத்தான் ஆளாவோம் என்ற தாழ்வு மனப்பான்மையை மாற்றியமைத்து முதுமையிலும் மகிழ்வுடன் வாழ இன்றே நாம்...

மாற்றிக்கொள்வோம்...!?!?
மாறிக்கொள்வோம்...!?!?
மாற்றியமைப்போம்...!?!?
அதிரை மெய்சா 

e-mail : myshaadirai@rediffmail.com
நன்றி : சமூக விழிப்புணர்வு பக்கங்கள்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.