Latest News

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் விளக்கம்!


அஸ்ஸலாமுஅலைக்கும்.

நமதூர் அதிராம்பட்டினம், மார்க்க ரீதியிலும் இந்தியச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டும் வாழும் மக்களைக் கொண்ட ஊராக இருந்து வருகிறது. நமதூரில் நடக்கும் நிகழ்வுகளில் தேவையானபோது தலையிட்டு, மார்க்க ரீதியிலும் நம் நாட்டுச் சட்ட ரீதியிலும் தீர்வுகளை வழங்க நமது முன்னோர்களால் தோற்றுவிக்கப்பட்ட சம்சுல் இஸ்லாம் சங்கம் கடந்த 92ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.


உள்ளூர் முஸ்லிம் குடும்பங்களிடையே ஏற்படும் சிவில் விவகாரங்களில், குறிப்பாக திருமணம், விவாகரத்து, சொத்துப் பங்கீடு போன்றவற்றில் மார்க்க அறிஞர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்றுத் தீர்வுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், நமதூருக்கு மார்க்கச் சொற்பொழிவுக்காக சித்தார்கோட்டையிலிருந்து அழைத்துவரப்பட்ட கண்ணியத்திற்குரிய ஹைதர் அலி ஆலிம் நமது உள்ளூர் நடவடிக்கைகளுக்கு ஊறு விளைக்கும்படியாக இயக்க சார்பு இளைஞர்களைத் தூண்டி விட்டதால் எழுந்துள்ள அமைதியின்மைக்குத் தீர்வு காண வேண்டியும், அவர் வசிக்கும் பகுதி ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவின் எல்லைக்குள் இருக்கும் காரணத்தாலும், கடந்த 28 ஆம் தேதி அன்று ஷம்சுல் இஸ்லாம் சங்கதிற்கு நேரில் வந்து விளக்கம் தரும்படிக் கோரப்பட்டது.

ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கும் தக்வா பள்ளி செயலாளருக்கும் இடையே வழக்கு நடந்து வருவதாலும், பொதுவில் பேசுவது வழக்கைப் பாதிக்கும் என்பதாலும், தன்னால் கலந்து கொள்ள முடியாதென்றும் தெரிவித்த நிலையில், 29அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் ஹைதர் அலி ஆலிம் அவர்களது வீட்டிலேயே சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றபோது, வீடு தேடி வந்தவர்களை முகமன் கூறிச் சந்திக்கும் இஸ்லாமியப் பண்பாடின்றி, சுமார் 10-20 நிமிடங்கள் வீட்டுக்கு வெளியே காத்திருக்க வைத்துவிட்டு, "சித்தீக் பள்ளியில் போய் இருங்கள், பேசலாம்" என்று தெரிவித்தார்.

அவ்வாறே, சங்க நிர்வாகிகளும் சித்தீக் பள்ளிக்குச் சென்றபோது, இயக்க சார்பு இளைஞர்களையும் உடன் வைத்துக்கொண்டு "இப்போது பேசலாம்" என்று சொன்னார். அதற்கு சங்க நிர்வாகிகள், “இயக்க சார்பு இளைஞர்களை வரவழைத்துக் கொண்டு சங்க நிர்வாகிகளுடன் பேச விரும்புவது சரியல்ல. வெளியூரிலிருந்து எத்தனையோ ஆலிம்கள் கற்கவும், கற்றுக் கொடுக்கவும் வந்துள்ளனர். ஆனால், உங்களைப் போன்று இயக்க சார்பு இளைஞர்களுடன் இணைந்து முஹல்லா சங்கத்தையும் அதன் நிர்வாகிகளான உள்ளூர் பிரமுகர்களையும் அவமதித்ததில்லை” என்று சொல்லி, அவருடன் பேசாமல் திரும்பி விட்டனர்.

அதிரையில் பல்வேறு அரசியல் கட்சி சார்பு இயக்கங்களும் சமுதாய இயக்கங்களும் இயங்கி வந்தாலும், உள்ளூர் அமைதிக்கு ஊறு விளைக்கும் அசாதாரண நடவடிக்கைகளின்போதும் சட்ட ரீதியான வழிமுறைகளில் தலையிட்டுத் தீர்வு காணும் அதிரை முஸ்லிம்களின் அங்கீகாரம் பெற்ற முஹல்லா சங்கங்களில் ஷம்சுல் இஸ்லாம் சங்கமும் ஒன்று. அவ்வகையில், ஜனாப் ஹைதர் அலி ஆலிம் மற்றும் தக்வா பள்ளி கமிட்டியிடையே ஏற்பட்டுள்ள வழக்கு காரணமாக ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைதியின்மை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில், இப்பகுதிக்குட்பட்ட ஆயிஷா மகளிர் மன்றத்தில் நடந்துவந்த ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

உள்ளூர் நடவடிக்கைகளில் பொறுப்புள்ள முஹல்லா சங்கத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட நடவடிக்கையே இது. ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களைப் போன்ற தகுதியுடைய உள்ளூர் மார்க்க அறிஞர்களைஆலோசகர்களாகக் கொண்டுள்ள ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஊர் சார்ந்த நடவடிக்கைகளில் தனி நபர்கள் தலையிடுவது, முஹல்லாவாசிகளை அவமதிக்கும் செயலாகும். முஹல்லாவுடைய கட்டுப்பாடு மற்றும் அமைதிக்கு ஊறு விளைக்கும் எத்தகைய நடவடிக்கையையும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தேவையெனில், மார்க்கம் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் என்பதையும் முஹல்லாவாசிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

***********

கீழ்கண்ட விளக்கங்கள் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களுக்கும், விளக்கம் வேண்டுபவர்களுக்கும் போதுமானதாக இருக்கும் என்றும் நம்புகிறோம்:

1) ஹைதர் அலி ஆலிம் சித்தீக் பள்ளி சொத்து விவகாரத்தில்தலையிட்டதற்காகவா அவர்மீது நடவடிக்கை?

இல்லை. மேலுள்ள விளக்கத்தில் 2,3 & 4 ஆம் பத்திகளில் சொல்லப்பட்ட காரணங்களுக்காகவும், முஹல்லா சங்க நிர்வாகிகளை அவமதித்து, உள்ளூர் இளைஞர்களைத் தூண்டியதற்காகவுமே ஆயிஷா மகளிர் மன்றத்தில் அவரது பயான் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேற்கொண்டு தவறான பிரச்சாரங்களைப் பரப்பாமலிருக்க பெரிய ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

2) ஹைதர் அலி ஆலிம் அவர்களை ஊரைவிட்டு வெளியேறும்படி சங்கம் நிர்ப்பந்தித்ததா?

இல்லை. பிரச்சினை பெரிதாகாமலிருக்க பொதுவில் பயான் செய்வதற்கு மட்டுமே தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இது பொது அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும், பிரச்சினை மேலும் வலுக்காமல் இருக்கவும் எடுக்கப்பட்ட சங்கத்தின் அதிகார வரம்புக்குட்பட்ட நடவடிக்கையே அன்றி,தனி நபர் மீதான வெளியேற்றும் நடவடிக்கை அல்ல.

3) சம்சுல் இஸ்லாம் சங்கம் ஹைதர் அலி ஆலிமை அவமதித்ததா?

இல்லை. மேலே 2 & 3 ஆம் பத்திகளில் சொன்னபடி, அவரது விளக்கம் பெறும் நோக்கத்தில் கண்ணியமாக அழைக்கப்பட்டதை அவர் ஒவ்வாத காரணங்களைச் சொல்லி மறுத்ததால், பொதுவில் அவருக்கு சங்கடம் ஏற்படாமலிருக்க, அவரது இல்லத்திற்குச் சென்ற உள்ளூர் முக்கியஸ்தர்களான சங்க நிர்வாகிகளைச் சந்திக்காமல் அவர்தான் அவமதித்தார். மேலும், ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்களை அதிரைக்கு அழைத்து வந்து, அதன் முஹல்லாவுக்குட்பட்ட சித்தீக் பள்ளி, தக்வா பள்ளி மற்றும் இமாம் ஷாஃபி பள்ளிகளில் பொறுப்பான பதவிகளைக் கொடுத்து கண்ணியப்படுத்தியதும் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்டவர்களே.

4) மார்க்க அறிஞரின் பயானைத் தடுப்பது சரியா?

சில அசாதாரண சந்தர்ப்பங்களில் மஷ்வரா அடிப்படையில் எடுக்கப்படும் அவசர நடவடிக்கையின்படி இது சரியே.

5) ஹைதர் அலி ஆலிமின் பயான்களால் நமதூர் மக்களிடம் மார்க்க விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதே?

ஓரளவு உண்மையே. எனினும், அல்லாஹ் - ரசூல் (ஸல்) அவர்களின் போதனைகளை எடுத்துச் சொல்லும் பல அறிஞர்களும் பேச்சாளர்களும் அதிரையில் உளர். அவர்களை முறையாகப் பயன்படுத்தி இருந்தாலும் அத்தகைய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்ஷா அல்லாஹ் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இவ்விசயத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தும்.


6) சித்தீக் பள்ளி சொத்து விவகாரத்திற்காக ஹைதர் அலி ஆலிமை பலி கடாவாக்குவது நியாயமா?


ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கும் எத்தகைய விரோதமும் இல்லை. சித்திக் பள்ளி சொத்து விவகாரத்தை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திடம் ஒப்படைத்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சியபடி, உலமாக்களின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வோம்.

7) ஹைதர் அலி ஆலிம் அவர்கள்மீது வழக்குத் தொடுத்தவர் மீது சங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?


இரு தரப்பிற்கும் இடையே நீதிமன்ற வழக்கு நிலுவையிலிருக்கும்போது முஹல்லா சங்கம் சமாதான நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட முடியும். அவ்வகையில்தான் இரு தரப்பையும் சுமூகமாகப் பேச வைத்துப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் முதலில் ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சங்கத்திற்கு அழைக்கப்பட்டதும், வர மறுத்தபோது நிர்வாகிகள் அவரது இல்லத்திற்குச் சென்றதும் நடந்தது. ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் நிர்வாகிகளை அவமதிக்காமல் ஒத்துழைத்திருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சியபடி நியாயமான தீர்வு எடுக்கப்பட்டிருக்கும்.


மேலும், சம்பத்தப்பட்ட நபரிடமும் பேசியுள்ளோம், கேசைத் திரும்பப் பெறும்படியும் கூறியுள்ளோம், ஆனால் இது இருட்டடிப்புச் செய்யப்பட்டு, மக்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்கும் எவராக இருந்தாலும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

******************

அன்பிற்குரியவர்களே! நமதூர் அதிராம்பட்டினம் உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் பிழைப்பு தேடிவந்த பலரை ஆதரித்தும், கண்ணியப்படுத்தியுமே வந்துள்ளது. கண்ணியத்துக்குரிய ஆலிம்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும் வணிகர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரையும் ஆதரித்து வருகிறோம். எனினும், அவர்கள் எல்லோரும் முஹல்லா ஜமாத்துகளுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இருந்து வருகின்றனர்.

ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சில வருடங்களாக நமதூர் உலமாக்களின் எத்தகைய ஆலோசனையையும் ஏற்காமல், தன்னிச்சையாகச் செயல்படுவதோடு, சித்தீக் பள்ளியின் சொத்து விவகாரத்தில் இன்னொரு முஹல்லா இளைஞர்களை அழைத்துவந்து அமைதியின்மையை ஏற்படுத்தியதை அனைவரும் அறிவர். அப்பகுதியில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் செயல்பட்டுவரும் நிலையில் உள்ளூர் நடவடிக்கையில் ஹைதர் அலி ஆலிம் செயல்பட்டது வரம்புமீறிய நடவடிக்கை என்பதோடு முஹல்லாவாசிகளின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத தன்னிச்சையான போக்கு என்பதையும் கவனத்தில் கொண்டு, சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஊர் நன்மை நாடிய நடவடிக்கைகளுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை நேரிலோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ வழங்குவதே நன்மை பயக்கும்.

அவ்வகையில், பரபரப்பாகச் செய்தி வெளியிடுகிறோம் என்ற ஆர்வத்தில் வலைத்தளம் மற்றும் இணையதளங்களில் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் பதிவுகளும் தனிநபர் தளங்களும் சட்ட நடவடிக்கைக்குட்பட்டது என்பதை உணர்ந்து பொறுப்பாகச் செயல்படும்படி வேண்டுகிறோம். இவ்விசயம் தொடர்பாக மேலதிக விளக்கம் வேண்டுவோர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

இப்படிக்கு,
ஷம்சுல் இஸ்லாம் சங்கம்
நிர்வாகம் – அதிரை
மீள்பதிவு

நன்றி
அதிரை இஸ்லாமிக் மிஷன்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.