Latest News

மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றார் மம்தா பானர்ஜி!



டெல்லி: டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர்களுக்கு மானியக் கட்டுப்பாடு, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு ஆகியவற்றை திரும்பப் பெற மத்திய அரசு மறுத்துவிட்டதால், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாகவும், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

முன்னதாக இன்று காலை முதல் தனது கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்ட அவர், இரவு தனது முடிவை அறிவித்தார்.

நிருபர்களிடம் பேசிய அவர், நிலக்கரி ஊழல் விவகாரத்தை மறைக்கவே அன்னிய முதலீடு என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஏழை வர்த்தகர்களுக்கு எதிரான இந்த முடிவை ஏற்க முடியாது.

அதே போல டீசல் விலை உயர்வையும், கேஸ் சிலிண்டர்களுக்கான கட்டுப்பாட்டையும் ஏற்க முடியாது என்று மத்திய அரசிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டோம். ஆனால், காங்கிரஸ் எங்களை மதித்ததே இல்லை, எங்களது ஆலோசனைகளை கேட்பதும் இல்லை.

இதனால் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதனால் ஆதரவை வாபஸ் பெறுகிறோம்.

எங்களது மத்திய அமைச்சர்கள் வரும் வெள்ளிக்கிழமை மாலை தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் சமர்பிப்பர் என்றார்.

முன்னதாக மம்தாவை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டது. அவரிடம் பிரதமரே கடந்த 3 நாட்களாக நேரடியாகவும் பேச முயற்சித்தார். ஆனால், அவருடன் மம்தா பேச மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரசுக்கு அடுத்தபடியாக அதிக எம்பிக்களைக் (19 எம்பிக்கள்) கொண்ட கட்சி திரிணமூல் காங்கிரஸ் தான்.

மத்திய அமைச்சரவையில் திரிணமூல் சார்பில் ஒரு கேபினட் அமைச்சர் உள்பட மொத்தம் 6 பேர் உள்ளனர். கேபினட் அமைச்சராக ரயில்வே அமைச்சர் முகுல் ராய் உள்ளார்.

நகர்ப்புற வளர்ச்சித்துறை இணையமைச்சராக செளகதோ ராயும், தகவல் ஒலி-ஒளிபரப்புத்துறை இணையமைச்சராக ஜதுவாவும், ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சராக சிசிர் அதிகாரியும், சுற்றுலாத்துறை இணையமைச்சராக சுல்தான் அகமதுவும், நலத்துறை இணையமைச்சராக உதிப் பந்தோபாத்யாயவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர்களுக்கு மானியக் கட்டுப்பாடு, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு ஆகியவற்றை வாபஸ் பெற மத்திய அரசுக்கு மம்தா 72 மணி நேரம் கெடு விதித்திருந்தார் என்பதும், அந்த கெடு இன்றுடன் முடிந்ததையடுத்து இந்த முடிவை அவர் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் மம்தாவை சமாதானப்படுத்தி அவரை கூட்டணியில் தக்க வைக்கும் வேலைகளை காங்கிரஸ் தொடங்கும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.