Latest News

காஸ்ட்ரோவின் கேள்வியும் உமரின் முன்மாதிரியும்.


1953ஜூலை 26 அன்று மோன் காடாபாரக் தாக்குதல் வழக்கில் 76 நாள்கள் தனிமைச் சிறையில் இருந்துவிட்டு பிறகு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டபோது ஃபிடல் காஸ்ட்ரோ நீதிபதியைப் பார்த்து கேட்டார்:

"நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்யும்போது எத்தனைக் காலமாக அவன் வேலையில்லாமல் இருந்தான் எனக் கேட்பதுண்டா? அவனுக்கு எத்தனைக் குழந்தைகள் என்றும் வாரத்தில் அவன் எத்தனை நாள்கள் உணவு உண்டான்;எத்தனை நாள்கள் பட்டினி கிடந்தான் எனவும் நீங்கள் அவனிடம் கேட்பதுண்டா? நீங்கள் அவனது சமூக சூழ்நிலையைப் பற்றி விசாரிப்பது உண்டா? அதிகம் ஒன்றும் சிந்திக்காமல் அவனை சும்மா சிறையில் தள்ளுவீர்கள்.

ஆனால்,வர்த்தக நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் தீ வைத்து காப்பீட்டுத் தொகையைக் கொள்ளையடிப்பவர்கள்,சில மனித உயிர்களும் இதில் சாம்பலாக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் சிறைக்குப் போகமாட்டார்கள்.இன்சூர் செய்தவர்களிடம் வழக்குரைஞரை நியமிக்கவும் நீதிபதிகளுக்கு இலஞ்சம் கொடுக்கவும் தேவையான பணம் உள்ளது. பட்டினியால் வாடி வதங்கும் ஏழையை நீங்கள் சிறையில் அடைப்பீர்கள்.

ஆனால், அரசின் கோடிக்கணக்கான ரூபாயைக் கொள்ளையடிக்கின்ற கொடியவர்களில் எவரும் ஓர் இரவு கூட சிறைகளில் கழித்திருக்க மாட்டார்கள். ஆண்டின் இறுதியில் ஏதாவது ஒர் உன்னத கேளிக்கை விடுதியில் நீங்கள் அவர்களுடன் சேர்ந்து உணவு உண்பீர்கள்.அதன் மூலம் அவர்கள் உங்களுடய ஆதரவைப் பெறுகின்றனர்."

ஒருமுறை கலீஃபா உமருல் ஃபாரூக் (ரலி) அவர்களிடம் சில கைதிகள் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஹாத்திப் இப்னு அபீபல் தஆ என்பவரது பணியாள்களாக இருந்தனர்.முசைனா குலத்தைச் சேர்ந்த ஒருவரது ஓட்டகத்தைத் திருடி அறுத்து சாப்பிட்டு விட்டனர் என அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அவர்களை விசாரணை செய்தார் உமர்(ரலி) ஐயத்திற்கிடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டது. எனவே அவர்களைத் தண்டிக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் முன்பே கலீஃபா அனைவரையும் திரும்ப அழைத்தார்.திருடியதற்கான காரணம் என்ன என்பதைக் குறித்து விசாரித்தார். கொடிய வறுமை மற்றும் பட்டினி காரணமாகவே இதனைச் செய்தாக அனைவரும் ஒருமித்த குரலில் கூறினார்கள்.

அது உண்மைதான் என்பதை விசாரித்து உறுதி செய்து கொண்ட கலீஃபா உமர் அவர்களின் முதலாளியான ஹாதிப் இப்னு அபீபல் தஆவை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். அவரிடம் கூறினார்:

"நீங்கள் இவர்களிடம் கடினமாக வேலை வாங்கியுள்ளீர்கள். ஆனால் வாழ்வதற்குத் தேவையான கூலியை வழங்கவில்லை.அதுதான் இவர்கள் திருடத் தூண்டுகோலாய் அமைந்தது. எனவே இவர்கள் செய்த குற்றத்திற்கான தண்டனைக்குத் தகுதியானவர் நீங்கள்தாம். நான் உங்கள் மீது பெரும் பாரம் ஒன்றைச் சுமத்தியே தீருவேன்."

உமரூல் ஃபாரூக் 400 திர்ஹம் விலையுள்ள அந்த ஒட்டகத்தின் மதிப்பைவிட இருமடங்கு தொகையை அதன் உரிமையாளருக்குத் தருமாறு ஹாதிப் இப்னு அபீபல் தஆவுக்கு ஆணையிட்டார். திருடிய தொழிலாளிகளைத் தண்டிக்காமல் விடுதலை செய்து விட்டார்.

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு கலீஃபா உமர் நடைமுறைப்படுத்திய நீதிக்காகத்தான் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபா நீதிமன்றத்தில் வாதிட்டார்.

அன்று உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இருந்தார்; உடனடியாக நீதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்று...?

நன்றி : வலையுகம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.