தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி முதல்வர் ஜெயலலிதா, விஜயகாந்த் மீது அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார்.
ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன், சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "விஜயகாந்த் ஆகஸ்ட் 1-ம் தேதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘‘அதிமுக ஆட்சியில் எல்லா தரப்பிலும் ஊழல் நடந்து வருகிறது. அரசு ஊழியர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் தனது அலுவலகத்துக்கு நீண்ட நாட்கள் வராமல் இருக்கிறார். அறிக்கைகள் மூலமே ஆட்சி நடத்துகிறார். ஜெயலலிதா கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு அறிக்கைகளையும் அறிவிப்புகளையும் வெளியிடுவது காகிதத்தில் மட்டுமே உள்ளது’’ என்று கூறியுள்ளார்.
விஜயகாந்தின் இந்த அறிக்கை, முதல்வர் மற்றும் தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. முதல்வர் தமிழகத்தில் எங்கிருந்தாலும் அவரது அலுவலக பணிகளை செய்ய தவறுவதில்லை. உள்நோக்கம் கற்பித்து எந்த விளக்கமும் பெறாமல் தன்னிச்சையாக ஒரு அறிக்கையை விஜயகாந்த் கொடுத்திருப்பது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 500-ன் கீழ் குற்றமாகும். எனவே, விஜயகாந்த் மற்றும் அவரது அறிக்கையை வெளியிட்ட ஹிந்து பத்திரிகை வெளியீட்டாளர் பத்மநாபன், ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் ஓரிரு நாள்களில் தொடங்கும் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment