பொன். தனசேகரன்
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பிளஸ் டூ படித்த மாணவர்களுக்கான ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்பும் பட்டதாரி மாணவர்களுக்கான மூன்று ஆண்டு இளநிலை சட்டப் படிப்பும் உள்ளன. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் இன் லா கல்வி நிலையத்தில் பிஏபில் (ஆனர்ஸ்) ஐந்து ஆண்டு படிப்பில் சேர விரும்பும் பொதுப் பிரிவு மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 20. தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்கள் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள். அதிகபட்ச வயது வரம்பு 22. இங்கு பிஎல் ஆனர்ஸ் மூன்று ஆண்டு பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிஇ, பிடெக், எம்பிபிஎஸ், பிபார்ம் போன்ற ஏதாவது பட்டம் பெற்றிருக்க வேண்டும் பட்டப் பிடிப்பில் பொதுப் பிரிவு மாணவர்கள் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்கள் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 25. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு வயது வரம்பு 27.
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் பிஏபிஎல் பட்டப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இங்கு ஐந்து ஆண்டு இளநிலை சட்டப் படிப்பும் மூன்று ஆண்டு சட்டப் படிப்பும் உள்ளன. வேலூரில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மூன்று ஆண்டு சட்டப் படிப்பு மட்டும் உள்ளது. அரசு சட்டக் கல்லூரிகளில் ஐந்து ஆண்டு இளநிலை சட்டப் படிப்பில் சேர விரும்பும் பொதுப் பிரிவு மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். பொதுப் பிரிவு மாணவர்களுக்கு 20 வயது என்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு வயது வரம்பு 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎல் மூன்று ஆண்டு சட்டப் படிப்புகளில் பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ,பிஇ, பிடெக், எம்பிபிஎஸ், பி.பார்ம் உள்ளிட்ட ஏதாவது இளநிலைப் பட்டப் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப் படிப்பில் பொதுப் பிரிவு மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்களும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் 40 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவு மாணவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35.
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பிசினஸ் லா, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மனித உரிமைகள், இன்டலக்சுவல் புராப்பர்ட்டி லா, இன்டர்நேஷனல் லா அண்ட் ஆர்கனைசேஷன், என்விரான்மெண்டல் லா அண்ட் லீகல் ஆர்டர், கிரிமினல் லா அண்ட் கிரிமினல் ஐஸ்டீஸ் அட்மினிஸ்ட்ரேஷன், ஹியூமன் ரைட்ஸ் அண்ட் டியூட்டிஸ் எஜுக்கேஷன், லேபர் அண்ட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் லா ஆகிய பாடப்பிரிவுகளில் எம்எல் இரண்டு ஆண்டு படிக்க விரும்பும் மாணவர்கள் மூன்று ஆண்டு அல்லது ஐந்து ஆண்டு சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வில் எடுக்க வேண்டிய குறைந்த பட்ச மதிப்பெண்கள் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் பிசினஸ் லா, என்விரான்மெண்டல் லா, இன்பர்மேஷன் டெக்னலாஜி லா, இன்டலக்சுவல் புராபர்ட்டி லா, லேபர் லா, ஹியூமன் ரைட்ஸ் அம்ட் டியூட்டீஸ் எஜுக்கேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுநிலை டிப்ளமோ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஏதாவது பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப் படிப்புக்குப் பிறகு, வேறு படிப்புகளைப் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தொலைநிலைக் கல்வி மூலம் டாக்குமெண்டேஷனில் சான்றிதழ் படிப்பில் சேர பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
இந்த சட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்திலிருந்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களைப் பெறலாம். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகப் பதிவாளர் பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் விண்ணப்பக் கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்ட் எடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு சலுகை உண்டு. இதுகுறித்த விரிவான தகவல்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பிஏபிஎல் ஆனர்ஸ், எம்எல், அரசு சட்டக் கல்லூரிகளில் பிஏபிஎல் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்பு ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 15ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். பிஎல் ஆனர்ஸ், அரசு சட்டக் கல்லூரிகளில் மூன்று ஆண்டு பிஎல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொலைநிலைக் கல்வி மூலம் முதுநிலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் ஜூன் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விவரங்களுக்கு: www.tndalu.ac.in
No comments:
Post a Comment