Latest News

கல்விக்கடன் பெறுவது எப்படி?


யுவகிருஷ்ணா

சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார் கல்விக்கடன் சேவைப்படையின் ஒருங்கிணைப்பாளர் பிரைம் பாயிண்ட் சீனிவாசன்

+2 முடித்து விட்டேன். எனக்கு கல்விக்கடன் வேண்டும். யாரை தொடர்புகொண்டு, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

+2 முடித்த மாணவர்கள் தங்களுக்கு எந்தெந்த வகையில் உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) பெற என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை முதலில் பரிசீலித்து, இறுதியாகவே கல்விக்கடன் பெற முயற்சிக்க வேண்டும். அவரவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் எந்தப் பொதுத்துறை/தேசிய வங்கியிலும் கல்விக்கடன் பெறலாம். வங்கி மேலாளரை அணுகி கல்விக்கடன் பெறுவதற்கான விதிமுறைகள் என்னென்ன என்று தெரிந்துகொண்டு, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தரவேண்டும். கடன் தரமுடியுமா, முடியாதாவென்று விண்ணப்பம் அளித்த தேதியிலிருந்து பதினைந்து முதல் முப்பது நாட்களுக்குள்ளாக வங்கிகள் மாணவர்களுக்கு பதில் அளித்தாக வேண்டும். கல்லூரியில் சேர்ந்தபிறகே வங்கியை அணுகுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். என்னைக் கேட்டால் +2 தேர்வு எழுதியதுமே, மாணவருடன் பெற்றோரும், அருகிலுள்ள வங்கிக்குச் சென்று மேலாளரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு, ஆலோசனை கேட்டு வைத்துக் கொள்வது நலம்.

யார் யாருக்கெல்லாம் கல்விக்கடன் மறுக்கப்படும்?
கல்விக்கடன் பெற எல்லா மாணவர்களுக்கும் தகுதியுண்டு. ஆனால் வேலைவாய்ப்புக்கு வாய்ப்பில்லாத கல்விக்கு கடன் வழங்க வங்கிகள் தயங்குகின்றன. கடன் என்பதால் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்கிற நியாயமான அச்சம் வங்கிகளுக்கு இருக்கிறது. அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் பயில்பவர்களுக்கு கண்டிப்பாக கல்விக்கடன் கிடைக்காது.

என்னென்ன சான்றிதழ்கள்/ஆவணங்கள் தரவேண்டும்?
+2 மதிப்பெண் சான்றிதழ், முகவரி சான்றுக்காக ரேஷன் அட்டை, பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூபாய் நாலரை லட்சத்துக்குள் இருந்தால், தாசில்தார் ரேங்கில் இருக்கும் அரசு அதிகாரி ஒப்பளித்த வருமானச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இத்துடன் கல்லூரியில் சேர்ந்ததற்கு சான்றாக அட்மிஷன் கார்டு, மொத்தமாக எவ்வளவு செலவு ஆகும் என்பதற்கான மதிப்பீடு (estimate) ஆகியவையும் தந்தாக வேண்டும்.

கடனுக்குப் பிணை அல்லது உத்தரவாதம் தரவேண்டுமா?
கடன் தொகை நாலு லட்ச ரூபாய் வரை இருந்தால் பிணையோ, உத்தரவாதமோ தேவையில்லை. நான்கு முதல் ஏழரை லட்சம் ரூபாய் வரை இருந்தால், மூன்றாம் நபர் ஜாமீன் தரவேண்டும். ஏழரை லட்சம் முதல் பத்து லட்ச ரூபாய் வரைக்குமேயானால் சோத்துப்பிணை வைக்கவேண்டியிருக்கும்.

வட்டிக்கு மத்திய அரசின் மானியம் இருக்கிறதென்று கேள்விப்பட்டேன். அதைப் பெற என்ன செய்யவேண்டும்?
தொழில்நுட்பம் மற்றும் பணி சார்ந்த (professional) கல்வி பயில்பவர்களுக்கு வட்டி மானியம் உண்டு. பெற்றோரின் வருமானச் சான்றிதழ் இதற்காகத்தான் கேட்கப்படுகிறது. இச்சான்றிதழை வைத்தே வட்டிக்கு மானியத்தை மத்திய அரசிடம் வங்கிகள் கேட்டுப்பெற முடியும். கல்விக்கடன் பெறும்போதே சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் வட்டிக்கு மானியம் குறித்த விளக்கங்களை கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும் கடன் கொடுக்க மறுக்கும்/தாமதிக்கும் வங்கிகள் குறித்து யாரிடம் புகார் செய்ய வேண்டும்?
வங்கிகளில் எல்லா கிளைகளிலுமே, குறிப்பிட்ட அந்த வங்கிக்கு மண்டல மேலாளர் யாரென்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும். கடன் தர மறுக்கும்/தாமதிக்கும் குறிப்பிட்ட வங்கியின் கிளை குறித்து மண்டல மேலாளரிடம் புகார் தெரிவிக்கலாம். அவரிடமும் நியாயம் கிடைக்கவில்லை என்று தோன்றினால் அந்த வங்கியின் தலைவருக்கு மின்னஞ்சல்/மடல்/தொலைபேசி மூலம் தெரியப்படுத்தலாம். ரிசர்வ் வங்கி இம்மாதிரி கல்விக்கடன் குறித்த புகார்களை விசாரிக்கவென்றே சிறப்பு அதிகாரியை நியமித்திருக்கிறது. எந்த வங்கியாக இருந்தாலும் இவரிடம் புகார் அளிக்க முடியும்.

வட்டி மற்றும் கடனை திருப்பிச் செலுத்தும் முறை என்ன? படிக்கும்போதே செலுத்த வேண்டுமா? படித்து முடித்து வேலை கிடைத்தபிறகு செலுத்திக் கொள்ளலாமா?
படிக்கும்போதே வட்டியையோ, கடனையோ திருப்பிக் கட்டச் சொல்லி எந்த வங்கி மேலாளரும் வற்புறுத்த முடியாது. படித்து முடித்து ஒருவருடம் கழித்து (அல்லது) வேலை கிடைத்த ஆறு மாதங்களுக்குப் பிறகு அசலோடு வட்டியையும் சேர்த்து மாதாந்திரத் தவணையாக கட்டத் தொடங்க வேண்டும். கடனையும், வட்டியையும் திருப்பிச் செலுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் அவகாசம் தரப்படும்.

குடும்பச் சூழலால் பாதியில் படிப்பை விட்டு விட்டேன். நான் வாங்கிய கல்விக்கடனை வட்டியோடு திருப்பிச் செலுத்தியே ஆகவேண்டுமா?
ஏற்கெனவே குறிப்பிட்டது மாதிரி இது உதவித்தொகை அல்ல. கடன். எந்தச் சூழலிலும் கடன் என்றால் அதை திருப்பிச் செலுத்தியே ஆகவேண்டும்.

முதல் ஆண்டுக்கு கடன் கொடுத்துவிட்டு, இரண்டாம் அல்லது ஆண்டுகளில் கடன் கொடுக்க மறுக்கும் பட்சத்தில் நான் என்ன செய்ய வேண்டும்?
இம்மாதிரி நிகழ்வது அபூர்வமானது. மாணவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட நல்ல கல்வியைப் பெறவேண்டும் என்கிற சமூக நோக்கத்துக்காகவே கல்விக்கடன் வழங்கப்படுகிறது. கடன் வாங்கிவிட்டோமே என்று கடனுக்காக கல்லூரிக்குப் போய்வந்தால் அதை பெற்றோர் சகித்துக் கொள்கிறார்களோ இல்லையோ, கடன் கொடுத்த வங்கியால் நிச்சயம் சகித்துக்கொள்ள முடியாது. தங்களிடம் கடன் பெற்ற மாணவர்கள், அதை வைத்து ஒழுங்காக கல்வி கற்கிறார்களா என்று சரிபார்க்கவே வங்கி மேலாளர்கள் மதிப்பெண்களை விசாரித்து தெரிந்து கொள்கிறார்கள். தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத மாணவர்களை அக்கறையோடு கண்டிக்கிறார்கள். தங்களிடம் கடன் பெற்ற மாணவன் நன்றாகப் படிக்க வேண்டும், படித்து நல்ல வேலையில் சேர்ந்து தங்கள் கடனை திருப்பிக் கட்டவேண்டும் என்று வங்கிகள் எதிர்பார்க்கின்றன. முதல் ஆண்டுக்கு கொடுத்து, அடுத்த ஆண்டுக்கு மறுப்பது மாதிரியான விஷயங்கள் மிக மிக அரிதானது.  நியாயமே இல்லாமல் மறுக்கப்படுகிறது என்றால் மண்டல மேலாளரிடமோ, வங்கித் தலைவரிடமோ அல்லது ரிசர்வ் வங்கியின் சிறப்பு அதிகாரியிடமோ புகார் தெரிவிக்கலாம்.

ஒரு குடும்பத்தில் ஒருவர்தான் கல்விக்கடன் பெறமுடியும் என்று சொல்கிறார்கள். அது உண்மையா?
அப்படியெல்லாம் கிடையாது. அண்ணன் கடன் வாங்கியிருந்தால், தம்பிக்கோ, தங்கைக்கோ கடன் தரமுடியாது என்று எந்த வங்கியும் மறுக்க முடியாது. ஆனால் கடன் தொகை அண்ணன், தம்பிக்கும் சேர்த்து நாலு லட்ச ரூபாக்கு மேல் செல்லுமேயானால் பிணை, வைப்பு ஆகிய விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படும்.

கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது வங்கி என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளும்?
மற்ற கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமோ அதே நடவடிக்கைகள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கும் பொருந்தும். போலீஸ் விசாரணை, கோர்ட் நடவடிக்கை, பாஸ்போர்ட் முடக்கம் என்று எல்லா நடவடிக்கைகளையும் வங்கி எடுக்க முடியும். கடன் என்றால், அதைத் திருப்பிக் கட்டத்தானே ஆக வேண்டும்?

கல்விக்கடன் சேவைப்படை
கல்விக்கடன் விஷயத்தில் மாணவர்களுக்கும், வங்கிகளுக்கும் பாலமாக கல்விக்கடன் சேவைப்படை (education loan task force) இயங்குகிறது. சமூக முன்னேற்றத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் தன்னார்வலர்களால் இது நடத்தப்படுகிறது. கல்விக்கடன் பெறுவதில் மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, விளக்கங்கள் தேவைப்பட்டாலோ இந்தப் படையினர் உதவுகிறார்கள். info@elf.in என்கிற மின்னஞ்சல் முகவரியில் இவர்களை தொடர்பு கொள்ளலாம். Eltf.in என்கிற இணையதளத்தில் கல்விக்கடன் குறித்த தகவல்களை பகிர்ந்து வைத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.