ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பேச்சை தூர்தர்ஷனில் ஒளிபரப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் விஜயதசமி விழாவை நடத்தியது. இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசினார்.
அவரது பேச்சை அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பியது. முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக தூர்தர்ஷனில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு ஒளிபரப்பப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சை தூர்தர்ஷன் ஒளிபரப்பியதைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக கோவையில் உள்ள பிரசார் பாரதி இந்திய ஒலிபரப்புக்கழகம் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.
தந்தை பெரியார் தி.க.வின் ஆட்சி குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி தலைமையில் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிரசார் பாரதி அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற ஆறுச்சாமி மற்றும் 25 தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment