Latest News

  

இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் முகாம் தமிழர்கள் சரமாரி புகார்!

வவுனியா முகாம்களில் உள்ள தமிழர்களை இந்திய எம்.பி.க்கள் குழுவினர்  இன்று சந்தித்தபோது, தங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததோடு, பாதுகாப்பற்ற  நிலை காணப்படுவதாகவும் அவர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

இந்திய மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் ஆறு நாள்  பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய எம்.பி.க்கள் குழுவினர்,இலங்கை  நாடாளுமன்றத்துக்கு நேற்று விஜயம் செய்து அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்  அமைச்சர்களை சந்தித்து உரையாடினர்.

அப்போது அபிவிருத்தி பணியை காட்டிலும் இனப்பிரச்னைக்கான உடனடி அரசியல் தீர்வு  அவசியம் என்று சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை அரசு பிரதிநிதிகளை  வலியுறுத்தினார். அத்துடன் இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில்  ராஜபக்சவையும் அவர் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து இந்திய எம்.பி.க்கள் குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசியது.

அப்போது,”மீளக்குடியமர்ந்த தமிழ் மக்களுக்கு இந்தியா உதவிகளை  வழங்குகிறது. ஆனால் அதைவிட முக்கியமான அரசியல் தீர்வு ஒன்றை விரைவில் காண  இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுப்பது அவசரமும்,அவசியமுமான  தேவையாகும்’என்று கூட்டமைப்பினர் இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில்,இந்திய எம்.பி.க்கள் குழு இன்று வடக்கு மாகாண பகுதிகளுக்கு இரண்டு  ஹெலிகாப்டர்களில் சென்றனர்.அங்கு அவர்கள் வவுனியாவில் உள்ள முகாம்களில்  தங்கியுள்ள தமிழர்களை சந்தித்துப் பேசினர்.

அப்போது முகாம் தமிழர்கள் தங்களது அவல நிலைகளை அவர்களிடம்  எடுத்துரைத்தனர். தங்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் ஏதும்  இல்லாததோடு, கூரைகளாகவும், சுவர்களாகவும் இருக்கும் இரும்புத் தகடுகள் காற்றில்  அடித்துச் செல்லப்படுவதால் தாங்கள் பாதுகாப்பற்ற சூழலில் வசிப்பதாகவும் அவர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

இவையெல்லாவற்றையும் விட தங்களை தங்களது சொந்த ஊர்களில் குடியமர்த்த  நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிகை விடுத்ததாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.