தற்பொழுது தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரணமான மின்வெட்டு,தமிழக மக்களின் வாழ்க்கையையே நிலைகுலையச் செய்துள்ளது. சிறு தொழில்கள் நிறைந்த கோவை,திருப்பூர் போன்ற மாவட்டங்களில் ஒரு நாளைக்கு 8 முதல் 9 மணி நேரம் வரை தொடர்ந்தும்.ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இடைவேளி விட்டும் மின்தடை ஏற்படுகிறது.
இதே போல் தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள வேலூர் மாவட்டத்திலும் இதே நிலை. இங்கெல்லாம் குறைந்தபட்சம் இரண்டு ஷிப்டுகள் நடத்தி வந்தவர்கள் தற்பொழுது ஒரு ஷிப்டு கூட நடத்த முடியாத நிலை. குறைந்தபட்சம் குறிப்பிட்ட மணி நேரம் தொடர்ச்சியாக மின்சாரம் கிடைத்தால் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் எனும் நிலையில் பல சிறுதொழில் நிறுவனங்களும், கடுமையான பதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
தொழிற்சாலைகளை தொடர்ந்து விவசாயிகளும் மின்தடையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.பள்ளி கல்லூரிகளுக்கு முழு ஆண்டுத் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் மாணவர்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இப்படிப்பட்ட நிலை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் என்ன? தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன?
தமிழ்நாடு மின்சார வாரியம் 1994- 98 முதல் 2000- 01 வரையிலான காலங்களில் ஆண்டொன்றுக்கு சுமார் 350 கோடி ரூபாய் லாபத்தில் இயங்கி வந்துள்ளது. இடையில் 2000-01 இல் 4851 கோடி நஷ்டமும் மீண்டும் 20001- 2002 இல் 112.5 கோடி லாபமும் அடைந்துள்ளது. அதன் பிறகு 2002- 03 முதல் தொடர்ந்து 1110 கோடியில் ஆரம்பித்து 2010- 11ல் 11,733 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது. வருங்காலத்தில் இந்த நஷ்டம் இன்னும் அதிகமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
31.3. 2011 முடிவு வரை மின்சார வாரியம் அடைந்துள்ள நஷ்டம் 53, 298 கோடி; அத்துடன் 2012-2013 ஆண்டுக்கான நஷ்டம் 14547 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை சரி கட்ட மின்சார வாரியம், மின்கட்டண உயர்வை பயனீட்டாளர்களின் தலையில் சுமத்தவதற்கான அனுமதி வேண்டி மின்சார ஆணையத்திடம் கோரியுள்ளது. 2001- 02 வரை மின்சார வாரியமும், அரசுமே மின்கட்டண உயர்வை நிர்ணயம் செய்து கடந்த 10 ஆண்டுகளில் 8 முறை அறிவித்து வந்துள்ளது. இந்த உயர்வு தொழிற்சாலைகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் மட்டுமே என்றாலும் வாரிய வருவாய் உபரியாகவே இருந்துள்ளது.
ஆனால் 2003 இலிருந்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அது புதிய மின்நிலையங்களை நிறுவுவது, மின்சார உற்பத்தி, விநியோகம், பயனீட்டுக் கட்டணங்களை நிர்ணயம் செய்வது, பற்றக்குறையைப் போக்க தனியாரிடமிருந்து மினசாரம் கொள்முதல் செய்வது, கொள்முதல் விலையை நிர்ணயிப்பது போன்ற அனைத்து நிர்வாகத்திலும் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட சர்வ வல்லமை படைத்த நீதிமன்ற அதிகாரத்துடனான ஓர் அமைப்பாக உருவானது. அதன் பிறகுதான் வாரியத்தின் நஷ்டமும் செழித்து வளந்து இருப்பதைப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.
எனவே மின்வாரியம் அடைந்த நஷ்டத்திற்கும் தற்பொது நிலவும் மின் பற்றாக்குறைக்கும் காரணம் ஆணையத்தின் செயல்பாடுகளே என்று உணர முடியும். 2001- 02 முதல்தான் தனியார் நிறுவனங்கள் மின்சாரத்தை வாரியத்திற்கு விற்கத் தொடங்கின. மின்சார வாரியத்தின் விலை ரூ.2.64 /யூனிட் இருக்கும் பொழுது தனியாரிடம் வாங்கிய மினசாரத்தின் விலை அதிகபட்சம் ரூ.10.48 ஆக உள்ளது. எனவே இதில் தனியார் கொள்ளை லாபம் அடைகின்றனர். சுமார் 1200 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு அவர்கள் கேட்காமலே ரூ.250 மானிய விலையில் மின்சாரம் வழங்கப் பட்டுள்ளது.
மின்வாரியத்தின் புதிய நிலையங்களை அமைப்பதற்கோ, பழைய நிலையங்களைச் சரிவரப்பராமரித்து உற்பத்தியைப் பெருக்குவதற்கோ, உற்பத்தி மின்கடத்தல்,விநியோகம் போன்ற நிலைகளில் ஏற்படும் மினசார இழப்பைச் சரி செய்யவோ ஆணையம் எந்த முயற்சியும் எடுத்தாகத் தெரியவில்லைமாறாக எப்பொழுதெல்லாம் பற்றாக்குறை ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் தனியாரிடமிருந்து அதிக விலையில் கொள்முதல் செய்வதும், தனியாரிடம் போகும் ஒப்பந்தத்தில் மின்சாரம் வழங்கினாலும் இல்லையென்றாலும் குறைந்தபட்சமாக ஒரு தொகையைத் தனியாருக்கு வாரியம் கொடுக்க வேண்டும் என்ற கட்டளையும், தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் அவர்கள் கேட்கும் போதெல்லாம் கொள்முதல் விலையை உயர்த்துவதும் வழக்கமாக உள்ளது.
மின்வாரியம் உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிகளை ஆராயாமல் இழப்புகளைச் சரி செய்யவும் நிர்வாகத்தைச் சீர் செய்வதற்கும் எந்த முயற்சியும் எடுக்காமல் நஷ்டத்தை சரி கட்டுவதற்கு 9741 கோடி மின்கட்டண உயர்வு செய்ய வேண்டி ஆணையத்திடம் முறையீடு செய்துள்ளது. மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான அதிகாரம் அரசிடம் இருந்திருந்தால் பால் விலையையும் பேருந்து கட்டணத்தையும் உயர்த்திய போதே உயர்த்தியிருப்பார்கள்.
தற்பொழுது மின்சார ஆணையமும் இது தொடர்பாக மக்களின் கருத்துகளை அறிய பல்வேறு முக்கிய நகரங்களில் பயனீட்டாளர்களின் கூட்டங்களை நடத்திக் கருத்து கேட்டு வருகிறது. தெருத் தெருவாக ஒவ்வொரு பயனீட்டாளரிடமும் கேட்க முடியாது என்றாலும் குறைந்தபட்சம் ஒன்றிய அளவிலாவது கருத்துக் கேட்பை நடத்த வேண்டும். எனவே இது வேறும் கண் துடைப்பு நாடகம் தான் என்று தெரிகிறது.
எனவே ஆணையம் உடனடியாகத் தலையீட்டு தமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான மின் விநியோகம் செய்ய மின்வாரியத்துக்கு ஆணையிட வேண்டும்.
பல ஆண்டுகளாக அரசு, வாரியம், ஆணையம் ஆகியவற்றின் மெத்தனப் போக்கால் ஏற்பட்ட இழப்பைச் சரிகட்ட மக்கள் தலையில் மின் கட்டண உயர்வைச் சுமத்துவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. எனவே இந்த இழப்பை அரசே ஏற்க வேண்டும்.
மின் வாரியம் மாநிலத்தில் உள்ள மின்நிலையங்களின் பராமரிப்பை மேம்படுத்தி உற்பத்தியைப் பெருக்க வழிவகை செய்ய வேண்டும்.
போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மக்களின் துயரைத் துடைப்பது ஒரு மக்கள் நல அரசின் கடமை. மக்கள் போர்க்கோலம் பூணுவதைத் தவிர்க்க இது ஒன்றே வழி.
மின்வாரியத்தில் நடைபெறும் ஊழலைத் தடுத்து நிர்வாகத்தைச் சீர்செய்து செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
உற்பத்தி, மின்கடத்தல், விநியோகம் ஆகியவற்றில் உயரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மின் இழப்புகளைக் குறைக்க வேண்டும்.
6
தெரு விளக்குகள் சூரிய ஒளியில் இயங்கும் முறையைச் செயல்படுத்த வேண்டும்.
தனியார் மற்றும் அரசு சார்ந்த பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தாங்களே உற்பத்தி செய்துகொள்ள வசதி வாய்ப்புகள் உள்ளவர்கள் ஊக்கமளிக்க வேண்டும்.
நன்றி: ஆ சுப்பிரமணி
(கட்டுரையாளர் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநிலத் துணைத்தலைவர் ஆவார்.)
நன்றி : வலையுகம்
No comments:
Post a Comment