இந்தப் பதிவை நீங்கள் உங்கள் கணினித்திரையிலோ அல்லது பிரிண்ட் எடுத்தோ வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் எனில் அதற்குப் பின்னணியில் மூலகாரணமாக இருந்த ஒருவரைப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். 1980களின் இறுதியில் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளம் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பெரும்பாலான கணினிகளில் ஆங்கிலம் கோலோச்சியபோது,சவூதி அரேபியாவிலுள்ள தமாம் மாநிலத்தின்சட்டத்துறையில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவரின் முயற்சியால் அது முதன்முதலாக சாத்தியமானது என்பது பலருக்கும் வியப்ளிக்கும் செய்தியாகவே இருக்கக்கூடும்.
பிரபல மார்க்க அறிஞர் இக்பால் மதனீ அவர்கள் தலைமையிலான குழு, திருக்குர்ஆனைத் தமிழில் மொழியாக்கம் செய்ததைத் தமிழில் தட்டச்சு செய்யும் பணிக்கு உதவியாக கணினியையும் பயன்படுத்த முனைந்தபோது, கணினிகளில் தமிழ் உள்ளீடு செய்யும் வசதிகள் அக்காலகட்டத்தில் இருந்திருக்கவில்லை. MS-Windows V-1 இல் BITMAP EDITOR என்ற மென்பொருள் உதவியால் சுயமாக தமிழ் எழுத்துருக்களை வரைந்து,மற்றொரு மென்பொருள் உதவியால் WINDOWS இயங்குதளத்தில் செயல்படும் கணினிகளில் வாசிக்கும்வகையில் மாற்றப்பட்டு உருவான முதல் எழுத்துருக்களுக்கு TOPAZ, DIAMOND, SAPPHIRE என்ற பெயர்களிட்டு அழகு தமிழ் கணினியில் முதல் அங்கீகாரம் பெற்ற பெரும் பேறு இவராலேயே கிடைத்தது.
இந்தத் தகவலை துபாயிலிருந்து வெளியாகும் கல்ஃப் ந்யூஸ் (20.11.1993) ஆங்கில நாளிதழ், "Tamil in MS Windows" என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டுப் பாராட்டி இருந்தது. மற்றும் "விண்டோஸில் பவனிவரும் தமிழ்" எனும் தலைப்பில் (ஜென்னி) ஒரு கட்டுரையைத் தமிழ்க் கம்ப்யூட்டர் இதழ் (28.8-10.9.1995) வெளியிட்டது. MS WINDOWSல் இயங்கக் கூடிய பல எழுத்துருக்கள் இப்போது புழக்கத்தில் வந்து விட்டன.ஆனால்90 களின் தொடக்கத்தில் எம் எஸ் விண்டோஸில் இயங்கக் கூடிய எல்லா மென்பொருளையும் தமிழில் காட்டச் செய்தவர் அவர்!.
1995களில் இணையம் பரவலாகப் புழக்கத்திற்கு வரத்தொடங்கியபோது, பல்துறை எழுத்தாளர் சுஜாதா போன்றோர் "மின்னம்பலம்" என்ற தமிழ் இணைய தளத்தில் எழுதி வந்தார்கள்.இங்கொன்றும் அங்கொன்றுமாக ஓரிரு தமிழ் தளங்களே இருந்தன. கணினியில் தமிழ் வாசிக்க அதற்கான எழுத்துருவைத் தரவிறக்கம் செய்தபிறகு, கணினியில் தேவையான மாற்றங்களைச் செய்தால்தான் அந்தந்த நாடுகளுக்கேற்பத் தமிழைத் தெளிவாக வாசிக்க முடியும்.
இந்தச்சூழலில்தான் அகிலத்திற்கே அருட்கொடையாக வந்த திருக்குர்ஆன் தமிழிலும் இணையவலம்வர வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி, http://sites.google.com/site/tamilquraan2/ 'இணையத்தில் இறைமறை' என்ற முதல் இஸ்லாமியத் தளம் மட்டுமின்றித் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பும் முதல்முதலாய் இணையத்தில் இவரால் வலம் வந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இவை மட்டுமின்றி, தமிழகத்தில் வெளியாகும் தினமணி போன்ற நாளிதழ்களில் அவ்வப்போது வெளிவரும் சில கட்டுரைகளில் இஸ்லாத்திற்குப் புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு "அதி.அழகு" என்ற பெயரில் (முஸ்லிம் பெயரில் எழுதப்படும் வாசகர் கடிதங்கள் புறக்கணிக்கப்பட்டதால்) வாசகர் கடிதமாகவும், கட்டுரையாகவும் அனுப்புவதும் இவரது பொழுதுபோக்கு.
கணினி மற்றும் இணைய வல்லுனர்களை உலகத் தரப்படுத்த வழங்கப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் MCSE சான்றிதழைத் தமது 50+ வயதில் பெற்று, நவீன கல்விக்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு முன்மாதிரியாக விளங்கினார். அதிரையர்களின் மின்மடல் குழுமங்களில்,பகிர்ந்து கொள்ளப்பட்ட உரையாடல்களில் சமூக அக்கரை கலந்த கருத்துக்கள் நறுக்குத் தெரித்தாற்போல் 'நச்'சென்று இருக்கும்.
தமிழ் மொழியில் மட்டுமின்றி ஆங்கிலம்,அரபி, உர்தூ, மலையாள மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.தாம் பெற்ற கல்வி ஞானத்தைத் தம்மைச் சுற்றியுள்ளவர்களும் கற்றுபயன்பெற வேண்டுமென்ற ஆவலில் ஷார்ஜாவின் மஸ்ஜித் அல் ஃகலஃப் பழைய கட்டிடத்தில் குர் ஆன் ஓதுவிக்கும் பணியிலும் இளைஞர்களின் பேச்சுத்திறனை வளர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். துபையில் யில் இஸ்லாமிய வினாக்களுக்கு விடையளிக்கும் பொறுப்பும் ஏற்றிருந்தார்.சத்தியமார்க்கம்.காம் தளத்தில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். 2010 கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அதிரையின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவரான மர்ஹூம்.உமர்தம்பி (தமிழ் ஒருங்குரிஎழுத்துக்களை உருவாக்கிய கணிமைக் கொடையாளர்) அவர்களுக்குத் தமிழக அரசின் "தமிழ் இணைய அறிஞர்" என்ற அங்கீகாரம் கிடைப்பதற்கான முயற்சிகளில் இவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் நிச்சயம் நன்றிக்குரியவை.
தமிழகத்தின் பிரபல சமுதாய மற்றும் மார்க்க அறிஞர்கள் இக்பால் மதனீ, கமாலுத்தீன் மதனீ,அப்துல்காதிர் மதனீ, அப்துஸ் ஸமது மதனீ, பி.ஜைனுல் ஆபிதீன், மர்ஹூம்.காயல் S.K. , காயல் ஹாமித் பக்ரீ, பேரா.ஜவாஹிருல்லாஹ், S.M. பாக்கர் என அமைப்புப் பேதமின்றி அனைவருடனும் தொடர்பிலிருந்ததோடு அதிரையின் மார்க்க வழிகாட்டி அமைப்பான 'தாருத் தவ்ஹீதை' உருவாக்கிய மூத்த தவ்ஹீத் பிரச்சாரர். பிரபல எழுத்தாளர் அதிரை அஹமது, "தோழர்கள்" நூருத்தீன் ஆகியோருடனும் தொடர்பிலிருந்து பல்துறை சிந்தனையாளர்களுடன் நட்பிலிருப்பது தற்காலத்தில் அரிய விசயமாகும்.
*******
இத்தனை சிறப்புகளையும் பெற்றிருந்தாலும் கொஞ்சம்கூடப் பெருமையின்றி எளிமையாக,குடத்திலிட்டவிளக்காக, தேனீயாய் உழைத்து ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷார்ஜா எக்ஸ்போ சென்டர் கணினிப்பிரிவில்உயர்பொறுப்பில் இருந்து, இம்மாதம் மார்ச்-2012 முதல் ஓய்வு பெற்றுள்ள நமது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய கடற்கரைத்தெரு @ ஹாஜா நகர் ஜமீல் காக்கா அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அதிரைவாசிகள்,மற்றும் பல ஊர்களைச் சேர்ந்த நண்பர்கள்,அபிமானிகள் இணைந்து இன்ஷா அல்லாஹ் மார்ச்-30,2012 (வெள்ளிக்கிழமை) அன்று துபாய் மம்சார் பூங்காவில் "அதி.அழகுடன் ஓர் அழகிய மாலை" என்ற சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
இச்சந்திப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் nainathambi@live.in /adiraiwala@gmail.com ஆகிய மின்மடல் முகவரியில் அல்லது 055-4212 575 / 050-4737200 என்ற செல்பேசி எண்களில் மார்ச்-28 ,2012 க்குள் தொடர்பு கொள்ளலாம்.
சிஹாத் மாலிக் என என்னை செல்லமாக அழைக்கும் ஜமீல் காக்காவின் சேவைகள் தொய்வின்றி தொடர அல்லாஹ் நீண்ட ஆயுளையும் நிரந்தர பரக்கத்தையும் அளப்பரிய அள்ளி வழங்கிடுவானாக -ஆமீன், நான் தங்களுடன் பல சந்திபில் நான் கலந்து கொண்டுலேன் ஆனால் மாலை சந்திப்பில் கலந்து கொண்டது கிடையாது இப்போது அதற்க்கும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்று நான் கருதுகிறேன், அரபு நாட்டின் நிறைவு மாலை பொழுதில் நான் தங்களை சந்திதாக வேண்டுமென்பது என் ஆவல் நேரில் சந்திப்போம்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteஎனேது மரியாதைகுரிய மாமா ஜமீல் அவர்களக்கு என் அன்பான வாழ்த்துக்கள், நோய் நொடியற்று நீண்ட ஆயுளையும் நிரைந்த செல்வதுடன் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும் ஆமீன்.
தாங்கள் அன்புடன்
மருமகன். ஷேக் ஜலாலுதீன்
I MISS YOU UNCLE.........................