பொன்.தனசேகரன்
நாட்டில் சட்டப் படிப்புகளைப் படிக்க முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாகத் திகழ்பவை நேஷனல் லா ஸ்கூல்கள் என்று அழைக்கப்படும் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள். இந்த முக்கியத்துவம் வாய்ந்த சட்டக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு கிளாட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு இல்லை. பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். எனினும் நாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த நேஷனல் லா ஸ்கூல்களில் சேர விரும்பும் மாணவர்கள் கிளாட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். சட்டப் படிப்பைக் கற்றுத் தரும் முக்கியக் கல்வி நிறுவனங்கள் நேஷனல் லா ஸ்கூல்கள். பெங்களூரில் உள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா சர்வதேச அளவில் புகழ் பெற்ற கல்வி நிறுவனம். இதே வழியில் தரம் வாய்ந்த சட்டக் கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் அகாதெமி ஆஃப் லீகல் ஸ்டடி அண்ட் ரிசர்ச், போபாலில் உள்ள நேஷனல் லா இன்ஸ்டிட்யூட் யுனிவர்சிட்டி, கொல்கத்தாவில் உள்ள வெஸ்ட் பெங்கால் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் ஜுரிடிக்கல் சயின்சஸ், ஜோத்பூரில் உள்ள நேஷனல் லா யுனிவர்சிட்டி, ராய்ப்பூரில் உள்ள ஹிதயத்துல்லா நேஷனல் லா யுனிவர்சிட்டி, காந்தி நகரில் உள்ள குஜராத் நேஷனல் லா யுனிவர்சிட்டி, லக்னோவில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோகியா நேஷனல் லா யுனிவர்சிட்டி, பாட்டியாலாவில் உள்ள ராஜீவ்காந்தி நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் லா, பாட்னாவில் உள்ள சாணக்கியா நேஷனல் லா யுனிவர்சிட்டி, கொச்சியில் உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் அட்வான்ஸ்ட் லீகல் ஸ்டடீஸ், ஒரிசாவில் உள்ள நேஷனல் லா யுனிவர்சிட்டி, ராஞ்சியில் உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் ஸ்டடி அண்ட் ரிசர்ச் இன் லா, அசாமில் உள்ள நேஷனல் லா யுனிவர்சிட்டி அண்ட் ஜுடிசியல் அகாதெமி ஆகிய சட்டக் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த அனைத்துக் கல்வி நிலையங்களிலும் மாணவர்களைச் சேர்ப்பதற்காக கிளாட் (Common Law Admission Test - CLAT) என்ற பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேசியச் சட்டப் பல்கலைக்கழகங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேர்க்கப் படுகிறார்கள். இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் 50 சதவீதத்திற்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த மாணவர்களும், மாற்றுத் திறனாளி மாணவர்களும் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தற்போது பிளஸ் டூ தேர்வு எழுத உள்ள மாணவர்களும், இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவு மற்றும் ஓ.பி.சி. பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த ஆண்டு ஜூலை முதல் தேதியன்று 20 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 22 வயதுக்கு மேல் ஆகி இருக்கக்கூடாது.
இரண்டு மணி நேரம் நடைபெறும் கிளாட் நுழைவுத் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்கள். ஆங்கிலத்துக்கு (காம்ப்ரிஹென்சன் உள்பட) 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் மாணவர்களின் ஆங்கிலத் திறன் சோதிக்கப்படும். ஆங்கில இலக்கணத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். பொது அறிவு மற்றும் நடப்புச் செய்திகள் (கரண்ட் அபயர்ஸ்) குறித்த கேள்விகளுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். 2011ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2012ம் ஆண்டு மார்ச் மாதம் வரை முக்கியப் பத்திரிகைகளில் வந்துள்ள நடப்புச் செய்திகளிலிருந்து கேள்விகள் இருக்கும். கணிதப்பாடத்திற்கு 20 மதிப்பெண்கள் இருக்கும். கணிதத்தில் பத்தாம் வகுப்பு பாடத்துக்குட்பட்ட நிலையில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்படும். லாஜிக்கல் ரீசனிங் பிரிவில் 40 மதிப்பெண்களுக்கான கேள்விகளும், லீகல் ஆப்டிட்யூட் மற்றும் லீகல் அவேர்னஸ் பகுதியில் 50 மதிப்பெண்களுக்கான கேள்விகளும் இருக்கும். இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை நடத்தும் பொறுப்பை ஜோத்பூரில் உள்ள நேஷனல் லா யுனிவர்சிட்டி ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேருவதற்கும் பொது நுழைவுத் தேர்வு (கிளாட்) நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் பொதுப்பிரிவு மாணவர்கள், இளநிலை சட்டப் படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, ஓ.பி.சி. மாணவர்களும் மாற்றுத் திறனாளிகளும் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். சட்டப் படிப்பின் இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களும் இந்த முதுநிலைப் பட்டப் படிப்பில் சேருவதற்கான இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பொது நுழைவுத் தேர்வு இரண்டு மணி நேரம் நடைபெறும். மொத்த மதிப்பெண்கள் 200. லா ஆஃப் காண்டிராக்ட்ஸ், லா ஆஃப் டார்ட்ஸ், கிரிமினல் லா, கான்ஸ்டிடியூஷனல் லா அண்ட் லீகல் தியரி ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து அப்ஜெக்ட்டிவ் முறையில் 100 கேள்விகள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். அத்துடன், குறுகிய விடையளிக்கும்படியான 10 கேள்விகள் கேட்கப்படும். இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் தலா 10 மதிப்பெண்கள்.
இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட நேஷனல் லா ஸ்கூல் பல்கலைக்கழகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர, குறிப்பிட்ட பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம் ரூ.3 ஆயிரம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.2,500. தபால் மூலம் விண்ணப்பங்களைப் பெற விரும்பும் மாணவர்கள், நேஷனல் லா யுனிவர்சிட்டி, ஜோத்பூர் கிளாட் அக்கவுண்ட் என்ற பெயருக்கு விண்ணப்பக் கட்டணத் தொகைக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து ஜோத்பூரில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்துக்கு எழுதியும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பது குறித்த விரிவான விவரங்களை கிளாட் இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 31ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். கிளாட் நுழைவுத் தேர்வு வருகிற மே 13ம் தேதி மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் படிப்பைப் படித்து சட்டத்துறையில் சாதிக்க விரும்பும் திறமையான மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
விவரங்களுக்கு: www.clat.ac.in
No comments:
Post a Comment