கொஞ்சம் விஞ்சி உண்டேன்
என்னுணவைக்கூட என்னால்
சுமந்து செல்ல முடியல….
நான்குமணி நேரம் என்னுணவை
இரைப்பையே சுமக்காத போது
நாற்பது வாரங்கள் எனையுன்
கருப்பை எப்படி சுமந்ததோ?
ஒருவேளை உணவுகூட
உன் உடம்பில் ஒட்டல
வாந்தியாய் வெளித்தள்ளவே
அட்டையாய் ஒட்டிநின்றேன்
பகல் கனவாய் உன்
உறக்கம் இருக்க
இராப்பகலாய் நான்
உறங்கிக் கழித்தேன்.
உன் உயிர் குடித்தாவது
நான் பிறக்கத் துடிப்பதை
என் பிள்ளை உதைக்கிறான் என்று
என் அப்பனுக்கு நீகாட்டி
மடத்தனமாய் மகிழ்ந்திருந்தாய்!
கருச்சிறையில் விடுதலைபெற
உன்னையல்லவா நான்
பணயக் கைதியாக்கினேன்!
வேதனையின்போது காலிரண்டும்
பின்னிக் கொள்ளும் நியதிக்கு
விலக்களித்து நீ மட்டும் எனைப்
புறந்தள்ளும் வேதனையிலும்
விலக்கிவைத்தாய் காலிரண்டை
ஒரு நொடி உனக்குப் போதும்
சப்பையாக்கி எனைக் கொல்ல
என்விடயத்தில் மட்டும் உன்
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?
பார்க்க முடியாத குருடனாய்
கேட்க முடியாத செவிடனாய்
பேச முடியாத ஊமையாய்
நடக்க முடியாத முடவனாய்
மொத்த ஊணத்தின் குத்தகைக்
காரனாய் எனை நீ கண்டபோதும்
வாரியணைத்து முத்தமிட்டு
மாரிழந்து பாலூட்டி மகிழ
எப்படி உன்னால் முடிந்தது?
என்னிலையில் நீ இருந்திருந்தால்
எட்டியுதைக்கத் தோனாதா?
என்விடயத்தில் மட்டும் உன்
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?
மூத்திரத்தை முகத்தில் கழித்தால்
ஆத்திரம் வருவது அறிவு
என் மூத்திரத்தை மட்டும்
நேத்திரம் மூடி நீ ரசித்திருந்தாய்
என்விடயத்தில் மட்டும் உன்
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?
என்னை மிஞ்ச இன்னொருவன்
இருக்கலாமா என நினைப்பது
ஈனப்பிறவிக்கும் தன்மனதில்
இயல்பாய் உள்ள உள்ளுணர்வு!
என்னை மிஞ்சி என்மகன்
படிப்பாளியாய் இருக்கனும்
என்னை விட பலபடிமேல்
என்மகன் சிறக்கனும்
என்றல்லவா எனக்கு நீ
பாலூட்டும்போது பாடினாய்
என்விடயத்தில் மட்டும் உன்
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?
உன்னைவிட ஒருபடிமேல்
வீரனாகக் கற்றுத் தந்தாய்
செல்வம்கூட பெற்றுத் தந்தாய்
சுகாதாரம் சொல்லித் தந்தாய்
வாழ்வாதாரம் அள்ளித் தந்தாய்
இத்தனையும் கொட்டிவிட்டு
ஒன்றைமட்டும் விட்டுவிட்டாய்
எனக்கு நீ காட்டும் பாசம்போல்
உன்மீதும் நான் பாசம் காட்ட
கற்றுத்தர ஏன் மறந்தாய்
நன்றி
எழுதியவர் நண்பர் ரூஹுல் றஸ்மி...
No comments:
Post a Comment