Latest News

பர்தா ” அணிவதைப்பற்றி அமெரிக்க கல்லுரி மாணவியின் அனுபவம் !



ஒரு நேரத்தில், பர்தா அணிவதைப் பற்றி மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். பெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிகின்றனர் ?’  என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.


தென் கலிஃபோர்னியா இஸ்லாமிய மையத்திலுள்ள மஸ்ஜிதுக்குச் செல்லும்போது மட்டும் பர்தா அணிவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அத்துடன் கைகளையும், கால்களையும் மறைக்கும் நீண்ட உடைகளையும் அணிந்து வந்தேன். பிறகு படிப்படியாக தோழிகளின் வீடுகளுக்குச் செல்லும்போது பர்தாவுடன் சென்றேன். கடைசியாக, வசந்தகால விடுமுறைக்குப் பிறகு கல்விக்கூடத்திநற்குச் செல்லும்போது பர்தாவைத் துணிந்து அணிந்து சென்றேன். பள்ளிக்கூடத்திற்கு பர்தாவுடன் செல்வதைப் பற்றித்தான் மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். ஆனால், இப்புதிய அனுபவம் மிகவும் உற்சாகம் மிகுந்த அனுபவமாக அமைந்துவிட்டது. எல்லோரும் என்னை வியப்புடன் பார்ப்பது எனக்குள் மிகுந்த பரபரப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

வகுப்பு இடைவேளையின் போது சகமாணவிகள் பர்தாவைப் பற்றி பல கேள்விகளை எழுப்பினர். நான் பர்தா அணிந்திருப்பதைப் பார்த்த எனது ஆசிரியையும் அதன் காரணங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். ஆகவே, வரலாறு பாட வகுப்பின் போது அது பற்றி உரையாடலாம் எனக் குறிப்பிட்டார். இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்பு. திருமறை வலியுறுத்தும் பர்தாவின் பல நன்மைகளை எனது அனுபவத்தில் கண்டு கொண்டேன். முதலாவதாக, நான் பெண் என்று மரியாதை காட்டப்படுகிறது. ஒரு பால் பொருள் (Sex Object) என்று நோக்கப்படுவதில்லை.

இரண்டாவதாக, நான் ஒரு இஸ்லாமியப் பெண் என்று மக்களால் அறியப்படுகிறது. பர்தா அணிவதன் மூலம் நான் மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், மற்றவர்கள் என்னைத் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. நான் பர்தா அணியவில்லை என்றால், அதைப்பற்றி கேள்விகள் யாரும் கேட்கப்போவதில்லை. ஆகவே, எனது நெறியான இஸ்லாம் பற்றிய செய்திகளை விளக்குவதற்கு கடைசியில் வழிவகுக்கும். பர்தாவைப் பற்றிய ஐயங்கள் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடக்கூடும்.

பர்தா பற்றிய வியத்தகு அனுபவங்கள் எனக்கு ஏற்பட்ட போதிலும், மற்றவர்கள் எவரும், எவரையும் வற்புறுத்துவது கூடாது எனக் கருதுகிறேன். அடிக்கடி பர்தா அணிவது பற்றிய தவறான, வழிதவறிய அழுத்தம் தரப்படுகிறது. பர்தா அணியாதவர்கள் ஏதோ பெரும் தவறிழைத்துவிட்டனர் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து விடக் கூடாது. மாறாக, பர்தா ஏன் அணிய வேண்டும் என்பதை மென்மையாக எடுத்துச் சொல்ல வேண்டும். மக்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை எடுத்துச் சொல்ல வேண்டுமேயல்லாது, அவைகள் பற்றி கட்டாயப்படுத்தக் கூடாது.

பர்தா அணிதல் என்பது ஒருவரின் நெறியை பகிரங்கமாகப் பறைசாற்றுவதாகும். அதன் மூலம், ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடும்.
ஏனையவற்றைவிட மதத்தைப் பின் பற்றுதல் மிகவும் எளிதானது என்பதை உணர்த்துவதாக பர்தா அமைந்துள்ளது. வீண் பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்பதை நான் நிச்சயமாக அறிந்து விடுவதைக் காட்டிலும், எனது தலைமுடிகள் பர்தாவினால் மறைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து விடுவது மிகவும் எளிதாகும். பர்தா அணிவதன் மூலம் ‘எனது குணநலன்களில் சிறந்த மாற்றங்கள்’ ஏற்பட்டுள்ளன. பர்தாவைப் பற்றி தவறான கருத்துக்களே மக்களிடம் இன்னும் நிலவி வருகிறது. ஏனெனில் மற்றவர்களை மதிப்பிடுவது என்பது மிகவும் எளிதாகும். பர்தா அணிந்த பெண்மணி ஒருவர் தனக்கு எதிரில் வரும் ஒருவரைப் பார்க்க நேரிடின், அவர் ‘நல்லவரா ?’ அல்லது ‘கெட்டவரா ?’ என்பதை எளிதில் மதிப்பிட்டு விடலாம்.

( இக்கட்டுரையாசிரியர் லைலா அஸ்கர், வெஸ்டர்ன் பிரிட்ஜ் (Western Bridge) பள்ளி மாணவி. அமெரிக்காவின் ‘லாஸ் ஏன்ஜல்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையாகும் இது. கட்டுரையின் தமிழாக்கம்: டாக்டர், பீ. ஹாமிது அப்துல்லாஹ் அவர்கள். )

நன்றி : சேக்கனா M. நிஜாம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.