Latest News

இவர்களை யார் என்கௌண்டர் செய்வது? .

விழுப்புரம் மாவட்டம் தி.மண்டபம் எனும் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் காசியை வழக்கு ஒன்றில் பிடித்துச் சென்ற காவல்துறையினர், இரவு நேரத்தில் காசியின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி லட்சுமி, அண்ணன் மனைவி கார்த்திகா, காசியின் சகோதரிகள் வைகேஸ்வரி மற்றும் ராதிகா, காசியின் தாயார் ஆகியோரையும் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.


விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி தங்களை அழைத்துச் சென்ற காவல்துறையினர், ஒரு தோப்பில் வைத்து தங்களை வன்புணர்ச்சி செய்ததாக புகார் கொடுத்துள்ளனர் காசியின் மனைவி லட்சுமி, அவரது கணவரின் அண்ணன் மனைவி கார்த்திகா, நாத்தனார்கள் வைகேஸ்வரி மற்றும் ராதிகா ஆகியோர். வன்புணர்ச்சி செய்யப் பட்ட நான்கு பெண்களில் இருவர் திருமணமானவர்கள். லட்சுமி 3 மாத கர்ப்பிணி.

வேலியே பயிரை மேயும் அவலம் ஆங்காங்கே நடந்தாலும் வேறு வழக்கு ஏதாவது போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என்ற மிரட்டலுக்குப் பயந்து பாதிக்கப்பட்ட யாரும் புகார் அளிக்க முன்வருவதில்லை. முன்வந்தாலும் விசாரணை என்ற பெயரில் அந்தப் பெண்களின் மானம்தான் சூறையாடப் படுமே தவிர குற்றம் செய்தவர்களுக்குப் பெரிய அளவில் தண்டனை வழங்கப் படுவதில்லை.

காவல்துறையினரின் மிரட்டலையும் மீறி சமூகத்தில் உள்ள சில நல்லவர்களின் துணையோடு பாதிக்கப் பட்ட பெண்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு முதல்கட்ட விசாரணையில், பெண்களை இரவு நேரத்தில் காவல்துறை வாகனத்தில் வைத்து இருந்தது உறுதிபடுத்தப்பட்டதால் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீநிவாசன், ராமநாதன், தலைமைக் காவலர் தனசேகரன் மற்றும் காவலர்கள் கார்த்திகேயன், பக்தவச்சலம் ஆகியோரைப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர்.

பாதிக்கப் பட்ட பெண்களுக்கு தலா ரூ 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் விசாரணை முடிவில் காவல்துறையினர் குற்றம் செய்தது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் தெரிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அப்படி என்ன கடும் நடவடிக்கை எடுத்து விடுவார் முதல்வர் என்று தெரிய வில்லை.

கேட்பதற்கு நாதியில்லை; புகார் கொடுக்க மாட்டார்கள் என்ற அலட்சியத்தாலும் புகார் அளித்தாலும் இந்திய தண்டனைச் சட்டம் பெரிதாக என்ன தண்டனை கொடுத்து விடப் போகிறது என்ற இறுமாப்பிலும் படிப்பறிவில்லாத பாமர அப்பாவிப் பெண்களைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கும் இது போன்ற கயவர்களைக் கோவையில் முஸ்கன் மற்றும் ரித்திக் ஆகியோரைக் கடத்தி பாலியல் கொடுமை செய்து படுகொலை செய்த மோகன கிருஷ்ணனை என்கௌண்டர் செய்தது போன்று என்கௌன்டரில் சுட்டுக் கொல்ல முதல்வர் ஜெயலலிதா உத்தரவிடுவாரோ என்னமோ!

காவல்துறையில் வேலை பார்க்கும் கடைநிலை பெண் காவலர்களே தங்கள் துறையில் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகளை மிரட்சியுடன் பார்க்கும் நிலையில், பொது மக்களின் நிலை பரிதாபம்தான். ஒரு பெண்ணே முதல்வர் பதவியில் அமர்ந்துள்ள நிலையில் இது போன்ற செயல்கள் அரசுக்கு வெட்கக் கேடே!

பொதுமக்கள் குற்றமிழைத்தால் விசாரணை செய்து தண்டனை வாங்கிக் கொடுக்கும் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. அப்பொறுப்பில் உள்ள காவல்துறையினர் தவறு செய்தால்? சாதாரண மக்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளைவிட, இரு மடங்கு அதிகப்பட்ச தண்டனைகள் பாதுகாப்புத்துறையிலுள்ளோர் தவறிழைக்கும்போது வழங்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும்!

வேலியே பயிரை மேய்வது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல. காவல்துறையில் உள்ளவர்கள் இனி மேலும் இது போன்ற குற்றம் புரிவதற்கு அஞ்சும் வகையில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் பொதுமக்களே இவர்களை என்கௌண்டர் செய்யும் காலம் விரைவில் வரக்கூடும்.
நன்றி: இந்நேரம்.காம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.