கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஜோசப். இவர் கடந்த 2003-ம் ஆண்டு ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் இருந்து 24 ஆயிரம் ரூபாய் கொடுத்து நவீன செல்போன் ஒன்றை வாங்கினார். அந்த செல்போன் இணைப்புக்கு குறிப்பிட்ட காலத்துக்கு ஏராளமான வெளி அழைப்புகளையும், எஸ்.எம்.எஸ்களையும் இலவசமாக பெறலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் கூறி இருந்தது.ஆனால் சொன்னபடி அந்த இலவச சலுகைகள் ஜோசப்புக்கு கிடைக்கவில்லை. இலவச சேவைகளை பெற ஜோசப் பல தடவை முயன்றும் பலன் கிடைக்கவில்லை. இதனால் அவர் கடந்த 2005-ம் ஆண்டு திருச்சூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஜோசப்புக்கு செல்போன் விலையான ரூ.24 ஆயிரத்தை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டது.
மேலும் 5 ஆண்டுக்கான 12 சதவீத வட்டித் தொகையையும் சேர்த்து கொடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையும் ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. இதனால ஜோசப் மீண்டும் திருச்சூர் நுகர்வோர் கோர்ட்டை நாடினார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி பத்மினி, தவறான செல்போன் இணைப்பு கொடுத்து விட்டு, பதில் அளிக்காத ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியை கைது செய்ய வேண்டும் என்று வாரண்ட் பிறப்பித்தார். பிப்ரவரி மாதம் 15-ந் தேதிக்குள் முகேஷ் அம்பானியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment