முல்லை பெரியாறு பிரச்சினையில் கேரள அரசை கண்டித்து தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் 13 வழித்தடங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தின் தென் எல்லையான குமரி மாவட்டம் களியக்காவிளையில் இன்று காலை ம.தி.மு.க.வினரின் மறியல் போராட்டம் நடந்தது.
இதற்கு மாநில துணைப் பொதுச்செயலாளர் நாசரேத் துரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தில்லை செல்வம், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் குழித்துறை ஜெயராஜ், தனிக்கை குழு உறுப்பினர் கோட்டார் கோபால், சட்டத்துறை செயலாளர் வக்கீல் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் சாகுல்ஹமீது, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜ்குமார், மாணவரணி துணை அமைப்பாளர் மணிகண்டன்,
நாகர்கோவில் நகர செயலாளர் ஜெரால்டு ஹெக்டர், பொதுக்குழு உறுப்பினர் மணி, ஜெரோம், ஆன்றனிராஜ், ஆஸ்டின், மகாராஜன், குளச்சல் நகர செயலாளர் ஸ்டார்வின் தம்பிராஜ் மற்றும் ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குழித்துறை சந்திப்பில் இருந்து ம.தி.மு.க.வினர் பேரணியாக களியக்கா விளைக்கு புறப்பட்டனர். அவர்கள் களியக்காவிளை எல்லையை அடைந்ததும் அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி தலைமையில் 4 டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்குவரத்தை மாற்று வழியில் திருப்பிவிட்டனர். மேலும் மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ம.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க. மாநில துணை பொருச்செயலாளர் நாசரேத் துரை பேசும் போது, முல்லை பெரியாறு அணையை உடைக்க விடமாட்டோம். இதற்கு கேரள அரசு முயற்சி செய்தால் இந்திய ஒருமைப் பாட்டுக்கு ஊறு ஏற்படும். கேரளாவுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக இன்று மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.கேரளா தொடர்ந்து அணை கட்டுவோம் என்றால் அந்த மாநிலத்திற்கு பொருளாதார தடையை ஏற்படுத்த தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் அனைத்து சாலைகளையும் முற்றுகையிட்டு போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
மறியல் போராட்டம் காரணமாக களியக்காவிளையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. சரக்கு லாரிகள் மற்றும் வாகனங்கள் எதுவும் அந்த வழியாக செல்லவில்லை. பேரணியில் பங்கேற்ற சிலர் திடீரென கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் கொடும் பாவியை எரித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment