Latest News

தலையங்கம்:இது நீலிக்கண்ணீர்!


2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2006-ல் சேவையைத் தொடங்கிய கிங் ஃபிஷர் விமான நிறுவனம் இன்றுவரை ஓராண்டில்கூட லாபம் காட்டியதே இல்லை. இந்நிலையில் தற்போது, மொத்தம் ரூ.8,200 கோடி நிதிநெருக்கடியில் தத்தளிப்பதாகவும், தங்கள் நிறுவனத்தை நிதிநெருக்கடியிலிருந்து மீட்க வேண்டும் என்றும் அதன் தலைவர் விஜய் மல்லையா அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்தக் கோரிக்கையில் நியாயம் இருப்பதாகவும், கிங் ஃபிஷர் போன்ற தனியார் விமான நிறுவனம் மூடப்படுமேயானால் அதனால் பலரும் வேலைவாய்ப்பை இழக்கக்கூடும் என்றும், விமானத் துறையே பின்னடைவைச் சந்திக்கும் என்றும் அதனால் அரசு அந்தத் தனியார் விமான நிறுவனத்துக்கு உதவ வேண்டும் என்றும், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வயலார் ரவி பரிந்துரைக்கிறார்.

 ஏற்கெனவே, பீர் மற்றும் மதுபான உற்பத்தி விற்பனையில் இந்தியாவில் முக்கால் பங்கு வர்த்தகத்தை விஜய் மல்லையா தனது ஆளுகைக்குள் வைத்திருக்கிறார். இது தவிர, ஐபிஎல் விளையாட்டுகள் மூலமும், அண்மையில் தொடங்கப்பட்ட கிராண்ட் பிரி கார் பந்தயங்கள் மூலமும் அவருக்குப் பணம் கொட்டுகிறது. மும்பையில் அம்பானி கட்டிவரும் மிகப்பெரும் சொகுசு மாளிகைபோல பெங்களூரிலும் மல்லையா கட்டுவதாகச் செய்திகள், கட்டடத்தின் மாதிரிப் படத்துடன் வெளியாகின்றன. இதெல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, இந்த விமான நிறுவனத்தால் நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று, ஆண்டுதோறும் அரை நிர்வாணக் கோலத்தில் உலக அழகிகளின் படத்துடன் பல கோடி ரூபாய்க்குக் காலண்டர்கள் அச்சிட்டு இலவசமாக விநியோகிக்கும் விஜய் மல்லையா புலம்புகிறார்.

 இந்திய விமான நிறுவனங்களில் ஏர் இந்தியா 135 விமானங்கள் வைத்துள்ளது. அடுத்த இடத்தில் ஜெட் ஏர்வேஸ் 97 விமானங்கள் வைத்துள்ளது. அதற்கு அடுத்து மூன்றாவதாக கிங் ஃபிஷர் 66 விமானங்களை வைத்துள்ளது. இதில் ஏர்இந்தியா தனது அரசுநிறுவனத்துக்கே உரிய மெத்தனத்தால், தவறுகளால் இழப்பைச் சந்தித்து வருகிறது. அதற்கு மத்திய அரசும் நிதியுதவியை ஒவ்வோராண்டும் சுமார் ரூ. 3,000 கோடி வரை அளித்து வருகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
 இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நஷ்டத்தைச் சந்திக்கவில்லை. இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்துக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை முறையாகச் செலுத்தக்கூடிய அளவுக்கு வருவாய் பெறும் நிறுவனமாகத் தொடர்ந்து செயல்படுகிறது ஜெட் ஏர்வேஸ். 2008-09-ம் நிதியாண்டில் ரூ. 379 கோடியை அரசுக்குக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதில் ரூ.368 கோடி செலுத்தியுள்ளது. 2009-10-ம் நிதியாண்டில் ரூ.354 கோடி செலுத்த வேண்டும். இதில் ரூ.346 கோடி செலுத்தியுள்ளது.

 2010-11-ம் நிதியாண்டில் ரூ.344 கோடி செலுத்த வேண்டும். இருப்பினும் ரூ.333 கோடி செலுத்தியுள்ளது. ஒவ்வோராண்டும் அரசுக்குக் கொஞ்சம் நிலுவை வைப்பதற்கு காரணம், தாங்கள் ஏதோ சிரமத்தில் இருப்பதைப்போல ஒரு பாவனையே தவிர, இவர்கள் உண்மையில் நஷ்டத்தில் இயங்கவில்லை. இவர்களது விமான எண்ணிக்கையைப் பெருக்கும் முதலீட்டுக்காக வருவாய் திருப்பப்படுகிறது என்பதே உண்மை.
 இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் மட்டுமல்ல, 34 விமானங்களுடன் நான்காவது இடத்தில் இருக்கும் இன்டிகோ விமான நிறுவனமும் அரசுக்குச் சென்ற ஆண்டு கூடுதலாகவே பழைய பாக்கியைக் கழிக்கும் வகையில் ரூ.10 கோடி செலுத்தியது. இந்த ஆண்டு ரூ.200 கோடி செலுத்த வேண்டும். இருப்பினும் 190 கோடியைச் செலுத்திவிட்டது.

 இன்டிகோ நிறுவனமும், ஜெட் ஏர்வேஸýம் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களில் சில கோடி ரூபாயைத் தவிர, 99 விழுக்காடு தொகையை முறையாகச் செலுத்தும் அளவுக்குச் சிறப்பாகச் செயல்படும்போது, கிங் ஃபிஷர் நிறுவனத்தால் மட்டும் கட்டணத் தொகையைச் செலுத்த முடியவில்லை என்றால், தவறு அந்த நிறுவனத்தைச் சேர்ந்ததாகத்தான் இருக்க முடியும். தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், அரசில் செல்வாக்குடையவர் என்பதால் நஷ்டக் கணக்குக் காட்டி, அரசுக்குத் தரவேண்டிய கட்டணத் தொகையை ரத்து செய்து கொள்ளலாம் என்கிற எண்ணம்கூட இருக்கக்கூடும்.

 இப்போது நிதிநெருக்கடியிலிருந்து கிங் ஃபிஷரை மீட்கும் திட்டம் ஏதும் இல்லை என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினாலும்கூட, இந்த விவகாரத்தில் மற்ற விமான நிறுவனங்களும் கூட்டு ஒப்பாரி வைக்கும் என்பது வெளிப்படை. ஜெட் ஏர்வேஸ் களத்தில் இறங்கிவிட்டது. அதாவது, இந்திய விமான ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணங்களைக் குறைக்க வைப்பதற்காக இந்த முதலைக்கண்ணீர் வடிக்கப்படும்.
 இரண்டாவதாக, இந்திய விமான நிறுவனங்களில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையையும் அரசுக்கு விஜய் மல்லையா முன்வைத்துள்ளார் என்பதை மிகவும் உன்னிப்பாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

 இந்தியாவில் விமான சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் பல மடங்கு பெருகிவிட்டது. தனியார் விமான நிறுவனங்களும் நுழையத் தொடங்கிவிட்டன. இப்போது இவை அனைத்தும் சர்வதேச விமான சேவையைத் தொடங்க வேண்டும் என்பதிலும் ஆர்வம் காட்டுகின்றன.

 இதற்காக புதிய விமானங்கள் தேவை. ஒரு 180ஏ-320 விமானம் வாங்க குறைந்தது 15.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை. வெளிநாட்டினரின் நிதியைப் பெற வழிகோலும் அன்னிய நேரடி முதலீட்டை விமானத் துறையில் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்துத் தனியார் விமான நிறுவனங்களுமே தொடர்ந்து முன் வைக்கின்றன. கிங் ஃபிஷர் போடும் கோடு அதை நோக்கிப் போடப்படும் ரோடாகக்கூட இருக்கக்கூடும்.

 அரசுத் துறை விமான சேவையால் மக்கள் வரிப்பணம் பாழாகிறது என்பதால்தானே தனியார் சேவையை அனுமதித்தோம். தனியாரும் நஷ்டம் என்று கூறினால், கிங் ஃபிஷர் நிறுவனத்தை அரசுடைமையாக்கி விடலாமே என்று விஜய் மல்லையாவிடம் கேட்கும் துணிவு நமது ஆட்சியாளர்களுக்கு இல்லையே, ஏன்?

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.