அரசியல் என்பதே மிக ஆபத்தான ஆட்டம். இப்போதுள்ள கூட்டணி அரசியலில் ஆபத்து இன்னும் அதிகம். பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று அரசு அமைப்பது என்பதெல்லாம் இப்போது முடியவே முடியாது.
வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அரசியல் தலைவர்களும் கிடையாது. அப்படி ஒன்றிரண்டு பேர் இருந்தாலும் அவர்கள் மாநிலத்துக்குள்ளேயே முடங்கிவிட்டார்கள். தேசியத் தலைவர் என்று யாரும் இல்லை. இந்திரா காந்தியுடன் எல்லாம் முடிந்து போனது. அவருக்கு ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 30-ம் தேதி கடனே என அஞ்சலி செலுத்துகிறோமேயொழிய, அவரிடமிருந்து நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றுதான் கூற வேண்டும்.
1977-ம் ஆண்டு தேர்தலில் அவர் படுதோல்வி அடைந்தார். அதற்கு மேல் அவரால் அரசியலுக்குத் திரும்ப முடியாது; ஆட்சியமைக்க முடியாது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், 1980-ம் ஆண்டிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். தேசிய அரசியலில் அவர் எப்போதும் சூறாவளிதான். பரபரப்பாக திட்டமிட்டுக் கொண்டே இருப்பார்.
அவரது மறைவுக்குப் பிறகு நடந்த தேர்தலில் அவரது பெயரை மட்டும் வைத்துக் கொண்டே நாடு முழுவதும் 409 இடங்களில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. அது இந்திராவின் வெற்றி.
கூட்டணி ஆட்சிக்குள் நமது நாடு நுழைந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. எந்தக் கட்சியாவது பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துவிடாதா என்று எதிர்பார்த்து மக்களுக்குச் சலித்துப் போய்விட்டது. கடந்த தேர்தலில் காங்கிரஸýக்கு 206 இடங்கள் கிடைத்ததால், மீண்டும் பெரும்பான்மை ஆட்சிக்கு வழி ஏற்படும் என்கிற நம்பிக்கை பிறந்தது. ஆனால், அடுத்தடுத்த ஊழல்கள், நிர்வாகச் சீர்கேடுகள் போன்றவை இந்த நம்பிக்கையைத் தகர்த்துவிட்டன.
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கடுமையான கருத்துகளை பிரதமர் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததாலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்து போனதாலும் விலை உயர்த்தப்பட வேண்டியதாயிற்று என்றார். பெட்ரோலுக்கு மானியம் அளிக்கவே முடியாது என்று கைவிரித்தார்.
அதன் பிறகு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்தது. கச்சா எண்ணெய் விலையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. ஆனாலும் அடுத்த வாரமே ரூ.2 ரூபாய்க்கும் மேல் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் முதலில் அறிவிக்கப்பட்ட விலை உயர்வின் நோக்கம்தான் என்ன?
ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி அலை எல்லாத் தேர்தல்களின்போதும் வெளிப்படும். இதில் உத்தரப் பிரதேசம் எந்த வகையிலும் விதிவிலக்கானதல்ல. ஆனால், மம்தா பானர்ஜியையும், ஜெயலலிதாவையும் போல தனது அரசியல் நோக்கத்தில் மிகத் தெளிவாக இருக்கும் மாயாவதியை இந்த அதிருப்தி அலையால் ஒன்றும் செய்ய முடியாது என்றுதான் தோன்றுகிறது.
மாயாவதியின் நடவடிக்கைகளைப் பலரும் குறை கூறலாம். பிற்போக்குத்தனமானவர் என்று அவரை விமர்சிக்கலாம். ஆனால் மாயாவதிக்குத் தெரியும், அரசியலில் என்ன செய்தால் என்ன நடக்கும் என்று. அதனால்தான் எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் தனது முடிவுகளில் உறுதியாக இருக்கிறார். கட்சியில் உள்ள கோஷ்டிகள், கீழ்நிலைத் தலைவர்கள், அதிகாரத் தரகர்கள், ஆலோசகர்கள் என எவர் நினைத்தாலும் மாயாவதியின் முடிவில் தலையிட முடியாது. பின்வாங்க வைக்கவும் முடியாது. அதுதான் மாயாவதியின் பலம்.
மாயாவதியின் அதிரடிக்கு சமீபத்திய உதாரணம் - உத்தரப் பிரதேசத்தை 4 மாநிலங்களாகப் பிரிக்கும் அவரது அறிவிப்பு. அவரை தொடக்கத்திலிருந்து கவனித்து வந்தவர்களுக்கு இது ஒன்றும் பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்காது. முன்பே பல முறை இதுபற்றி அவர் வலியுறுத்தியிருக்கிறார். பகுஜன் சமாஜ் கட்சியும் கூறியிருக்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதுதான் இதில் அடங்கியிருக்கும் சாணக்கியம். இந்த அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் ஆடிப்போயிருக்கின்றன.
இதை எதிர்ப்பதா, ஆதரிப்பதா என்று காங்கிரஸýக்கு தடுமாற்றம். எதிர்த்தால் வாக்குகளை இழக்க நேரிடும். ஆதரித்தால் மாயாவதிக்கு செல்வாக்குப் பெருகிவிடும் என்பதால், அந்தக் கட்சி குழம்பிப் போயிருக்கிறது. சமாஜவாதி கட்சி திக்குத் தெரியாமல் தவிக்கிறது. பாஜக கிளீன் போல்டு. அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தளம் மட்டும் மாநிலங்களைப் பிரிப்பதற்கு ஆதரவளித்திருக்கிறது.
உடனடியாக உத்தரப் பிரதேசத்தை 4 மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்பது மாயாவதியின் லட்சியமில்லை. சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அவரது உடனடி இலக்கு.
மாநிலப் பிரிப்பு விவகாரத்தில் ஒவ்வொரு கட்சியும் என்ன செய்வது எனக் கையைப் பிசைந்து கொண்டிருக்கும் நிலையே மாயாவதிக்குத் தேவை. இப்படி அணுகுண்டைத் தூக்கிப் போட்டு அரசியல் நடத்துவதுதான் மாயாவதியின் பாணி.
அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களில் பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்தன. நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி லாலு பிரசாத்தையும் காங்கிரûஸயும் படுதோல்வியடையச் செய்தது. தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தியது. மேற்கு வங்கத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த இடதுசாரிகளின் கோட்டையை மம்தா பானர்ஜி தகர்த்தார். இதே போலத்தான் கடந்த முறை உத்தரப் பிரதேசத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சமாஜவாதி கட்சியை வீட்டுக்கு அனுப்பினார் மாயாவதி. அதை மீண்டும் நடத்திக் காட்டுவதற்குத்தான் அவர் மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்.
ஒரேயொரு பிரச்னையால் மட்டும் தேர்தலில் வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படுவதில்லை. இப்போதைய நிலையில், பணவீக்கம், ஊழல் போன்றவை குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. வாக்களிக்கும்போது மக்கள் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என்றாலும், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் ஜாதி, மதம் போன்றவைகூட இன்னமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உத்தரப் பிரதேசத் தேர்தல் நிலவரத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. மாயாவதி வழக்கம்போல முந்தியிருக்கிறார். காங்கிரஸýம் சமாஜவாதியும் போட்டியிடுவது இரண்டாமிடத்துக்குத்தான். இருந்தாலும் ராகுலின் வருகையால் காங்கிரஸýக்கும் அகிலேஷின் வருகையால் சமாஜவாதிக் கட்சியும் உற்சாகமடைந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. நம்பிக்கையளிக்கும் எந்தத் தலைவரும் இல்லாத பாஜக, போட்டியில் கடைசியாக இருக்கிறது. தேர்தல் மிக நெருக்கமாக வரும்போது இந்த நிலைமை மாறக்கூடும்.
இப்போது ஏற்பட்டிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடியால், அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு அரசியல் சமூக, நிதி நடவடிக்கைகளில் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. இவையெல்லாம் எங்கோ நடக்கின்றன என்று நாம் அசட்டையாக இருந்துவிட முடியாது.
நாமும் உலகப் பொருளாதாரத்திலும், அரசியலிலும் அங்கமாகிவிட்டோம். அதனால் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வர வேண்டும். தேவையான தருணங்களில் எதிர்வினையாற்ற வேண்டியதும் அவசியம்.
அணுசக்தி விஷயத்தில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நல்ல சேதி ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டிடம் இருந்து வந்திருக்கிறது. அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்பாடு செய்து கொண்ட பிறகும் நமக்கு யுரேனியம் வழங்குவதற்கு மறுத்துவந்த ஆஸ்திரேலியா, இப்போது அந்தத் தடையைத் தளர்த்தியுள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளைக் கணக்கில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜூலியா கூறியிருப்பது மிகச் சரியானதே!
ஐரோப்பிய யூனியனில் இல்லாத பிற நாடுகளில் இருந்து குடியேறுவோருக்கான விசா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியிருக்கும் பிரிட்டன் குடியேற்றத்துறையின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. இந்தியர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வளர்ச்சியடைந்த நாடுகள் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும்போது, நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.
இராக் போரால் சதாம் உசேன் சாய்க்கப்பட்டார். அது மேற்கத்திய நாடுகளுக்கு வெற்றி என்று வைத்துக் கொள்வோம். அதே நேரத்தில் இந்தப் போரில் தொடர்புடைய அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் தோற்றுப் போய்விட்டார்கள். முக்கிய அதிகாரிகள் காணாமல் போய்விட்டார்கள் அல்லது ஓய்வு பெற்றுவிட்டார்கள். இராக் போரைப் போன்று மேற்கத்திய நாடுகளுக்கு வந்திருக்கும் புதிய பிரச்னை பொருளாதார நெருக்கடி. அது பலரைச் சாய்த்துக் கொண்டிருக்கிறது. வால் ஸ்ட்ரீட் முற்றுகைப் போராட்டம் அந்த நாடுகளுக்குச் சவாலாக உருவெடுத்திருக்கிறது. இந்தப் போராட்டம் தாற்காலிகமாக ஒடுக்கப்பட்டிருந்தாலும், மேலை நாடுகளில் உள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்களின் மனதில் எழுந்திருக்கும் அக்கினியை எளிதில் அணைத்துவிட முடியாது.
ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளிலும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்திருக்கின்றனர். இதுபோன்ற போராட்டங்கள், இத்தாலியிலும் கிரேக்கத்திலும் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்திருக்கின்றன. ருமேனியா, போலந்து, பல்கேரியா, செக் குடியரசு, ஸ்லோவாகியா போன்ற நாடுகளில் வளர்ச்சி வேகம் குறைந்திருக்கிறது. பணவீக்கம் கடுமையாக அதிகரித்திருக்கிறது. இந்த நாடுகள் நெருக்கடியை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்தப் பிரச்னைகளெல்லாம் இந்தியாவுக்கும் இருக்கின்றன. நமது வளர்ச்சி வீதம் 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதத்துக்கும் கீழாகக் குறைந்துவிட்டது. பணவீக்கம் அதிகரித்து, அத்தியாவசிப் பொருள்களின் விலைகள் விண்ணை முட்டுகின்றன.
நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் நலனுக்காகவும் இந்த நெருக்கடியான தருணத்தை சமாளிப்பதைத் தவிர, நமக்கு வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை.
No comments:
Post a Comment