Latest News

கோபத்தை கட்டுப் படுத்துபவனே சிறந்த வீரன்


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

وَذَا النُّونِ إِذ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي  كُنتُ مِنَ الظَّالِمِينَ

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். ''அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்'' என்று நினைத்தார். ''உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிரிருந்து அவர் அழைத்தார். திருக்குர்ஆன். 21:87.



கோபத்தை கட்டுப் படுத்துபவர்களை சிறந்த வீரன் என்று பெருமானார்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 

மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான். என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்:புகாரி 6114...


இன்றுக் கோபத்தைக் காட்டுவதே வீரத்தின் வெளிப்பாடு என்று மாற்றப்பட்டு விட்டது. காட்டுக் கூச்சல் இடுவதும் கை,கால்களை உதறுவதும் கோபம் வரவில்லை என்றாலும் வரவழைக்க முயற்சி செய்வதும்  இன்றைய மக்களிடத்தில் சகஜமாகி விட்டது,

இவ்வாறு செய்வது அவரது அமலையும், ஆரோக்கியத்தையும் சீர்குலைப்பதை அவரகள்; அறிவதில்லை அறிந்தால் அடக்கத்துடன் நடந்து கொள்ளத் தவற மாட்டாரகள்;. 

கோபத்தில் எடுக்கக் கூடிய சில முடிவுகள் வாழ்வையே தலை கீழகாப் புரட்டி எடுத்து விடும் அல்லது வாழ்ந்த சுவடுத் தெரியாமல் அழித்தும் விடும்.  

ஒவ்வொரு முறையும் கோபம் கொள்ளும் பொழுது நரம்பு மண்டலம் விரிவடைந்து கோபம் தனிந்தப் பின் நரம்புகள் சுருங்கத் தொடங்குகின்றன சுருங்கிய நரம்புகள் பழைய நிலையை அடையாமல் தளர்ந்து விடுவதுண்டு அவ்வாறுத் தளர்ந்து விட்ட நரம்புகளில் ஓடும் இரத்தம் பழைய படி மிதமாக ஓடாமல் வேகமாக ஓடத் தொடங்கும். இதன் மூலமாகவே இரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய், கொழுப்புச் சத்துப் போன்ற உடலை ஆக்ரமித்துக் கொண்டு அகலாத நோய்கள் உருவாகின்றன. 

இரத்தத்தில் கலக்கக் கூடிய, இரத்த வேகத்தை அதிகரிக்கக் கூடிய இரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்புப் போன்ற  நோய்களை கட்டுப்படுத்த மருத்துவர்கள் ஹெவிடோஸ் கொடுக்கின்றனர் இந்த ஹெவிடோஸ்கள் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்து வெகுவிரைவில் மரணத்திற்கு இழுத்துச் செல்கின்றதை அவர்கள் அறிவதில்லை அறிந்தால் அடக்கத்துடன் நடந்து கொள்ளத் தவற மாட்டார்கள். 

பாதிக்கும் அமல். 
கோபத்தின் வாயிலாககத் தான் ஷைத்தான் மனிதனை நெருங்குகிறான் கோபம் வரும்பொழுது வார்த்தைகள் வரைமுறை இல்லாமல் வந்து எதிரில் இருப்பவர்களை திட்டும் பொழுது அவர்களை கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாக்கி விடுகிறது எதிரில் இருப்பவர் சிறியவரா ?பெரியவரா ? மரியாதைக்குரியவரா ? என்றெல்லாம் பார்க்க விடாது. 

திட்டித் தீர்த்து விட்டு கோபம் தனிந்தப்பின் சிலர் வருந்தி வருத்தம் தெரிவிப்பார்கள், பலர் வருந்தவும் மாட்டார்கள் வருத்தம் தெரிவிக்க மாட்டார்கள். 

வருந்தி வருத்தம் தெரிவித்தாலும் அது சிலருக்கு (சிறிய வயதுக் காரருக்கு)ப் பொருந்தும், பலருக்கு (மூத்த வயதை உடையவர்களுக்கு,கட்டாயம் மரியாதை செலுத்தப் பட வேண்டியவர்களுக்கு)ப் பொருந்தாமல் உறவே முறிந்து விடும்.  

வரைமுறை இல்லாமல் திட்டியவர் மன்னிப்புக் கேட்பதற்கு முன் அவர் இறந்து விட்டாலோ அல்லது இவர் இறந்து விட்டாலோ மறுமையில் அவர் இவரிடமுள்ள நன்மைகளைப் பறித்துக் கொள்வார். 

காரணம் அங்குப் பணமோ, தங்கக் காசுகளோப் பயன் தராமல் நன்மைகள் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்பதால் நன்மைகளைப் பறித்துக் கொள்வார்.  

கோபம் ஏற்படுவதால் அமலும் பாதிக்கிறது, ஆரோக்கியமும் பாதிக்கிறது என்பதால் மனித சமுதாயத்தின் நலவுக்காக இறக்கி அருளப்பட்ட இஸ்லாம் மனித சமுதாயத்திற்கு கோபம் கொள்வதை தடை செய்கிறது. இஸ்லாம் தடை செய்த ஒவ்வொன்றின் மீதும் கவர்ச்சி கொள்ளச் செய்து அதன் பால் ஈர்ப்புக் கொள்ளச் செய்வது ஷைத்தானின் வேலை. 
பாதிக்கும் ஆரோக்கியம்.
உலகம் முடியும் காலம் வரை பிறக்கும் ஒவ்வொரு மனிதனையும் ஷைத்தான் விட்டு வைக்க மாட்டான் இணைவைப்பு, விபச்சாரம், வட்டிப் போன்றக் கொடியப் பாவங்களிலிருந்து விலகி இருப்பவர்களில் கூடப் பலர் ஷைத்தான் விரிக்கும் இந்த கோப வலையில் வீழ்ந்து அமல்களைப் பாழாக்கிக் கொள்வதிலிருந்து  தடுத்துக் கொள்ள முடிவதில்லை. 

படிப்பினைத் தரும் யூனுஸ்(அலை) அவர்களின் கோபம்
கோபம் என்றதும் திருக்குர்ஆனைப் புரட்டக் கூடியவர்களுக்கு யூனுஸ்(அலை)அவர்களின் சம்பவம் நினைவுக்கு வரும். யூனுஸ்(அலை) அவர்களுடைய சமுதாயத்து மக்கள் சத்தியத்தை ஏற்க மறுத்து இறுதியாக அவர்கள் அழிக்கப்படும் நேரம் நெருங்கியதும் அவர்களை விட்டு யூனுஸ்(அலை) அவர்கள் விலகிச் சென்று விடுகிறார்கள்;. 

சிறிது நாட்கள் கழிந்து நகருக்குள் திரும்பிவந்து பார்த்தபொழுது அவர்களில் யாரும் அழிக்கப்படாததுக் கண்டு இறைவன் மீது கோபம் ஏற்பட்டுவிடுகிறது யூனுஸ்(அலை)அவர்களுக்கு. இறைவன் நல்லதொரு முடிவையே மேற்கொண்டிருப்பான் என்று அவர்களை நிதானமாக சிந்திக்க விடாமல் கோபம் தடுக்கிறது.  

கோபம் கொப்பளிக்க நடையைக் கட்டுகிறார்கள் கடல் குறுக்கிடுகிறது கடலைக் கண்டப் பிறகுக் கூட ஊரை நோக்கித் திரும்ப விடாமல் கோபம் தடுக்கிறது.  

இனி இந்த மக்களுடைய முகத்தில் விழிப்பதை விட இவர்களின் கண் காணாத திசைக்கு சென்று விடலாம் என்ற எண்ணத்தையே கோபம் மேலோங்கச் செய்கிறது.

எதிரில் கப்பல் ஒன்று தென்பட கால்களை கோபம் தண்ணீரில் இறக்கி விடுகிறது. தண்ணீரில் இறங்கி நின்று கொண்டிருந்த யூனுஸ்(அலை) அவர்கள் நீந்திச் சென்று எதிரில் நின்று கொண்டிருந்த கப்பலைப் பிடிக்கிறார்கள் ஆனால் கப்பலில் இருந்தவர்களோ அவரை ஏறவிடாமல் தடுக்கின்றனர்.

இவரை ஏற்றிக் கொள்ளலாமா ? வேண்டாமா ? எனும் எண்ணத்தை அல்லாஹ் அவர்களுடைய உள்ளத்தில் விதைத்து விடுகிறான் இறைவனின் மீது கோபம் கொண்ட இறைத்தூதரின் பயணம் இது என்பதால் இறையருள் தடுக்கப்பட்டு விடுகிறது.

குழப்பத்தில் ஆழந்த பயணக் காரர்கள் இறுதியாக சீட்டுக் குலுக்கிப் போட்டு அனுமதி கிடைத்தால்  ஏற்றிக்கொள்வோம் எனும் முடிவுக்கு வர சீட்டும் குலுக்கப்படுகிறது அனுமதி மறுக்கப்பட்டு ஏற்ற வேண்டாம் என்ற முடிவு வரவே அவர்களால் யூனுஸ்(அலை) அவர்கள் கடலில் தள்ளி விடப்படுகிறார்கள் மீன் விழுங்கி விடுகிறது.

நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடிய போது அவர்கள் சீட்டுக்குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி விட்டார். இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது. திருக்குர்ஆன். 37: 140, 141 142.  

ஒரு வழியாக மீன் அவரை விழுங்கியப் பிறகு யூனுஸ்(அலை) அவர்களின் கோபம் முற்றுப் பெறுகிறது தவறை நினைத்து யூனுஸ்(அலை)அவர்கள் வருந்துகிறார்கள். 

''உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிரிருந்து அவர் அழைத்தார். திருக்குர்ஆன். 21:78

இவ்வாறுத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு  சர்வ சக்தி வாய்ந்த ஏகஇறைவனின் வல்லமையைப் புகழ்ந்தும் தொடர்ந்து துதித்துக்கொண்டே இருந்தக் காரணத்தால் தடுக்;கப்பட்ட இறையருள் யூனுஸ்(அலை) அவர்களுக்கு மீண்டும் இறைவனால் திருப்பப்படுகிறது மீனுடைய வயிற்றில் அவரை அல்லாஹ் பாதுகாப்பாக தங்கச்செய்து விடுகிறான்;. கப்பலில் ஏறுவதற்கு கிடைக்காத இறையருள் மீன் வயிற்றில் இருக்கும் போது கிடைத்து விடுகிறது.

அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார். திருக்குர்ஆன்.68:49.

யூனுஸ்(அலை) அவர்கள் கோபத்தால் எடுத்த முடிவை அல்லாஹ் மன்னித்து மீன் வயிற்றிலிருந்து அவர்களை வெளியேற்றி விடுகிறான். 

அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிரிருந்து அவரைக் காப்பாற்றினோம்... திருக்குர்ஆன்.21:88.

ஒரு வெட்ட வெளியில் கொதிக்கும் மணலில் அவர்கள் வீசப்படுகிறார்கள் எழுந்து நடக்க முடியாத பலஹீனமான நிலையில் அவர்கள் இருந்ததால் உடனடியாக அவர்களின் அருகில் சுரைச் செடி ஒன்றை முளைக்கச் செய்து அவர்கள் மீது நிழல் படரச் செய்து விடுகிறான் கருணையாளன் அல்லாஹ் அதில் அவர்கள் இளைப்பாறி எழுந்து நடக்கத் தொடங்கினார்கள். 

அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம். அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக் கொடியை முளைக்கச் செய்தோம். திருக்குர்ஆன். 37: 145. 146.

யார் தனது தவறை நினைத்து தவ்பா செய்து விட்டாலும் அவர்களது கடந்த காலத் தவறை பட்டியலிட்டுப் பார்த்துக் கொண்டிருக்காமல் மொத்தத் தவறையும் அப்பொழுதேக் கழுவித் தூய்மையாக்கி விட்டு அவரை தனது சிறந்த அடியார்களில் ஒருவராக ஆக்கி விடுவதுடன் அவர் கேட்டதையும் கொடுப்பான் கேட்காததையும் கொடுப்பான் கொடையாளன் அல்லாஹ்.

இருள் சூழ்ந்த மீன் வயிற்றிலிருந்து பலஹீனமான நிலையில் கொதிக்கும் சுடுமணலில் வீசப்பட்டதும் யூனுஸ்(அலை)அவர்கள் இறைவனிடம் நிழல் கேட்க வில்லை. ஆனால் அவருக்கு இப்பொழுது நிழல் அவசியம் தேவை என்பதை அறிந்து அவனாகவே அந்த இடத்தில் சுரைச் செடியை முளைக்கச் செய்து நிழல் கொடுத்தான் கருணையாளன் அல்லாஹ்.

கோபத்திற்கு காரணம் என்ன ?
யூனுஸ்(அலை)அவர்களுடைய சமுதாயத்து மக்கள் அழிக்கப்படவேண்டும் என்பது இறைவனின் வாக்காக அமைந்து அதற்கான நேரமும் யூனுஸ்(அலை) அவர்களுக்கு இறைவனால் அறிவிக்கப்பட்டக் காரணத்தால் தான் அங்கிருந்து அவர்கள் வெளியேறினார்கள் வெறியேறிய உடன் அந்த மக்கள் இறைவனிடம் தவ்பா செய்து இறையருளை அடைந்து கொண்டனர் இது அவர்களுக்குத் தெரியாது.

என்ன நடந்தது என்பதை அல்லாஹ்விடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கோபம் மிகைத்து விட்டது இது தான் நடந்தது.

அல்லாஹ்விடமிருந்து நேரடியாக செய்தியை பெறக்கூடிய வாய்ப்பிருந்ததால் யூனுஸ்(அலை) அவர்கள்  அல்லாஹ்விடம் கேட்டிருந்தால் அல்லாஹ் பதிலளித்திருப்பான். ஏற்கனவே நூஹ் (அலை) அவர்களின் மகனை அலை இழுத்துச் சென்ற பொழுது அவர்களுக்கும் இறைவன் மீது கோபம் ஏற்பட்டது ஆனால் இவர்களைப் போன்று அவர்கள் கோபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அவசர முடிவை மேற்கொள்ளாமல் தனது வருத்தத்தை இறைவனிடம் அடக்கத்துடன் தெரிவித்தார்கள் அதற்கு இறைவனும் பதில் கொடுத்தான் அந்த பதிலில் திருப்தி கொண்டு இறைவனின் வாக்குறுதியின் மீது அவநம்பிக்கைக் கொண்டதற்காக இறைவனிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்கள். 

இனிமேல் யூனுஸ்(அலை)அவர்களுடைய வாழ்நாளிலும் இதுப்போன்ற கோபம் வரக்கூடாது என்பதற்காகவும், இனி வரக்கூடிய நபிமார்களுக்கும் இதுப்போன்றக் கோபம் வரக்கூடாது என்பதற்காகவும் சில நெருக்கடியை இறைவன் அவர்களுக்கு ஏற்;படுத்திக்கொடுத்து விட்டு அந்த சம்பவத்தை இறுதி நபிக்கு வழங்கிய திருக்குர்ஆனிலும் இடம் பெறச்செய்ததுடன் மீன் வயிற்றில் இருந்தவரைப்போன்று நீரும் ஆகிவிடாதீர் என்று அவ்வப்பொழுது முஹம்மது(ஸல்) அவர்களையும் எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தான் நீதியாளன் இறைவன்.

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர்(யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார். திருக்குர்ஆன். 68:48.

நமக்குள்ளப் படிப்பினைகள்
திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள யூனுஸ்(அலை)அவர்கள் கோபத்தில் எடுத்த முடிவினால் அவர்கள் அடைந்த துயரத்தை நினைத்துப் படிப்பினைப் பெற வேண்டிய நம்முடைய சமுதாயத்து மக்களிலும் கூடப் பலர் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சிலக் காரியங்கள் செய்வதற்கு முன் கோபம் முக்கியப் பங்கு வகிக்கிறது.   

கோபத்தின் மூலமாக எடுக்கும் எந்த அவசர முடிவிலும் இறையருள் அறவே இருக்காது மாறாக இறைவனின் கோபமே நிறைந்திருக்கும் என்பதற்கு யூனுஸ்(அலை) அவர்களின் நிகழ்வு சிறந்த எடுத்துக் காட்டாகும்.   

யூனுஸ்(அலை) அவர்களின் நிகழ்வு நபி மார்களுக்கு மட்டும் உள்ளதல்ல மாறாக ஏகஇறைவனை நம்பிக்கைக் கொண்ட அனைத்து மக்களுக்கும் உள்ளதாகும்.

அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிரிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம். திருக்குர்ஆன். 21:88.

எதற்கெடுத்தாலும் கோபம் கொள்பவர்களாக இருந்தால் கோபம் கொள்வதை தவிர்த்துக் கொண்டு அல்லாஹ்விடம் தவ்பா செய்து விட்டால் வல்ல ரஹ்மான் யூனுஸ்(அலை) அவர்களுக்கு செய்த உதவியைப் போல் நமக்கும் செய்வதாக வாக்களிக்கிறான்.

அடிக்கடி கோபப் பட்டு அதனால் நற்செயல்களின் நன்மைகளையும்,ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொண்டு மறுமையில் தோல்வியாளர்களின் வரிசையில் நிற்காமல் நிதானத்துடனும், அடக்கத்துடனும் நடந்து கொண்டு கேட்க வேண்டியவர்களிடம் முறையாக் கேட்டறிந்து நிதானமாக ஒரு முடிவை மேற்கொண்டு நமக்கும் எதிராளிக்கும் யாதொரு பாதிப்பும் ஏற்படாமல் நடந்து கொண்டால் ஆரோக்கியத்திந்கும் சிறந்தது அமல்களினால் கிடைக்கும் நன்மைகளும் வீண் போகால் மறுமையில் வேறெவருடைய நன்மையும் தேவையில்லாத அளவுக்கு நம்முடைய நன்மைகளைக் கொண்டு வெற்றியாளர்களின் வரிசையில் அணிவகுக்க வல்ல அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்கி ஆருள் புரிவானாக ! 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.