Latest News

அமெரிக்கக் கடன் சிக்கலும், இந்தியாவும்

எஸ். கோபாலகிருஷ்ணன்

அமெரிக்க அரசு வாங்கக்கூடிய கடன் உச்சவரம்பை உயர்த்தும் மசோதாவில் அதிபர் பராக் ஒபாமா ஆகஸ்ட் 2-ம் தேதி கையெழுத்திட்டார். முன்னதாக, அந்த நாட்டுப் பிரதிநிதிகள் சபை மேற்கூறிய மசோதாவுக்கு ஆகஸ்ட் முதல் தேதியன்றுதான் ஒப்புதல் அளித்திருந்தது. செனட் சபை மறுநாள் ஒப்புதல் அளித்தது. சில மணி நேரங்களில் அதிபர் ஒபாமா மசோதாவில் கையெழுத்திட்டார்.  இந்த மசோதா சட்டமாக்கப்படுவதற்கு கடைசி நாள் ஆகஸ்ட் 3-ம் தேதி என்பது பல மாதங்களுக்கு முன்பே அனைவருக்கும் தெரியும். இருந்தாலும், கடைசி இரண்டு நாள்களில்தான் இரு அவைகளின் ஒப்புதலைப் பெறமுடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  இதன்மூலம் அமெரிக்காவின் கடன் பெறும் வரம்பு 14.3 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. அதேசமயம், செலவு வரம்பு அடுத்த 10 ஆண்டுகளில் 2.4 லட்சம் கோடி டாலராகக் குறைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.  ஆகஸ்ட் 5-ம் தேதி அன்று பணச்சந்தைகள் முடிவடைந்த பிறகு, சர்வதேசத் தர நிர்ணய அமைப்பான "ஸ்டாண்டர்டு அண்டு பூல்' நிறுவனம், அமெரிக்க அரசின் கடன் பெறும் திறன் தொடர்பான தரத்தை ஏஏஏ-விலிருந்து ஏஏ பிளஸ் என குறைத்தது.  கடன் கொடுக்க மிக மிகத் தகுதியான நாட்டுக்கு "ஏஏஏ' என்றும், மிகத் தகுதியான நாட்டுக்கு "ஏஏ பிளஸ்' என்றும் தகுதிகள் வரிசைப்படுத்தப்படுகின்றன...

 ஆக, அமெரிக்காவின் தகுதி ஒருபடி இறங்கியுள்ளது என்பதுதான் "எஸ் அண்டு பி' செயல்பாட்டின் சாரம்.  1941-வது ஆண்டிலிருந்து 70 ஆண்டுகளாக ஏஏஏ தரத்திலிருந்து வந்த அமெரிக்கா, சரித்திரத்தில் முதல்முறையாக, தர இறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, சீனா, ஜப்பான், இந்தியா, சிங்கப்பூர், ஹாங்காங் என உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் சடசடவெனச் சரிந்தன. ஒருநாள், இரண்டு நாள் அல்ல, பல நாள்கள் சரிந்தவண்ணம் உள்ளன.  பொதுவாக, பங்குச்சந்தைகளைப் பொறுத்தவரை அவை, ஒன்றைப் பார்த்து ஒன்று செயல்படக் கூடியவை. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் சந்தைகள் சரிவு என்றால், அது இந்தியப் பங்குச் சந்தையையும் பாதிக்கத்தான் செய்கிறது. 

2008 - 09-ல் அமெரிக்க நிதி நெருக்கடியின்போதும், அதன் பிறகு ஐரோப்பிய நாடுகளில் மந்த நிலை ஏற்பட்டபோதும் இந்தியப் பங்குச்சந்தை சந்தித்த சரிவை நாம் பார்த்தோம்.  அதேநேரம், 2008-ல் ஏற்பட்ட நிதி நெருக்கடியும், 2011-ல் ஏற்பட்டுள்ள நிலைமையும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. 2008-ல் நிகழ்ந்த நிதி நெருக்கடி, கடந்த காலங்களில் அமெரிக்கா மேற்கொண்ட தவறான பொருளாதாரக் கொள்கைகள், அமெரிக்க வங்கிகளின் போக்கு, நிதி அமைப்புகளின் மோசமான செயல்பாடுகள் ஆகியவற்றால் ஏற்பட்ட ஒன்று.

  அண்மையில் நிகழ்ந்துள்ள சிக்கலுக்குக் காரணம், 2008-ல் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளின் விளைவு. அதேபோல் தற்சமயம் நிகழ்ந்திருப்பது புதிய சிக்கல் அல்ல, பழைய சிக்கலின் தொடர்ச்சி. அமெரிக்காவில் 2008-ல் நிகழ்ந்ததைப் பார்த்து, உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்தன.  அப்போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அந்த நாடு இன்னமும் மீளவில்லை என்பதையே இப்போதைய தர இறக்கம் எடுத்துக்காட்டுகிறது. அதேநேரம், "தர இறக்கமே' நூற்றுக்கு நூறு அப்பழுக்கற்ற செயல்பாடுதானா என கேட்பவர்களும் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

  சர்வதேச அளவில் நிலையற்ற தன்மையை அமெரிக்க நெருக்கடி ஏற்படுத்தியுள்ளபோதிலும், அமெரிக்க டாலருக்கும், அமெரிக்கப் பொருளாதாரத்துக்கும் இருக்கும் தனிப்பட்ட மதிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது என்று பாரத ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருப்பது சிந்தனையைத் தூண்டுவதாகும்.  சர்வதேச வர்த்தகத்திலும் சரி, ஒவ்வொரு நாடும் தன் கையிருப்பை முதலீடு செய்வதற்கான சாதனமாகவும் சரி, அமெரிக்க டாலரே தகுதி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. டாலரின் இடத்தைப்பிடிக்க வேறு எந்த ஒரு நாட்டின் நாணயமும் தயார் நிலையில் இல்லை என்பதே நிதர்சனம்.

 உதாரணமாக, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா போன்ற நாடுகள் ஏஏஏ தரம் பெற்றிருக்கும் நாடுகள். ஆனாலும், சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் மிக அதிக அளவில் அமெரிக்காவில் முதலீடு செய்துள்ளன. அவ்வளவு பெரிய தொகையை முதலீடாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் மேற்கூறிய ஏஏஏ தரம் பெற்றுள்ள நாடுகள் இல்லை என்பதுதான் உண்மை.  இந்நிலையில், சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் இரண்டு அணுகுமுறைகளை மேற்கொள்ளக்கூடும். ஒன்று, அமெரிக்கா பணத்தைத் திரும்பத் தருவதற்கு கூடுதல் கால அவகாசம் தரக்கூடும். இரண்டாவது, வங்கிகள் வழக்கமாகச் செய்வதுபோல், வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும்.

  இன்னொருபுறம், அமெரிக்காவுக்குப் புதிய முதலீடுகள் வருவது குறையலாம். இந்த நிலை ஏற்படுமானால், அதை எதிர்கொள்வதற்கு, அமெரிக்கா தன் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.  இதைவிட முக்கியமான விஷயம்: அமெரிக்க அரசுக்கு இப்போது நிகழ்ந்துள்ளது வெறும் பொருளாதாரப் பின்னடைவு மட்டுமல்ல, பொருளாதாரச் சிக்கல்களைத் திறம்பட எதிர்கொள்ளும் மனோதிடமும், மதிநுட்பமும் கொண்ட அரசியல் தலைமை இல்லையோ என்ற எண்ணம் பலருக்கு ஏற்பட்டுள்ளது என்பதுதான்.  ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, உலகிலேயே அமெரிக்கா மட்டுமே ஒரு மிகப்பெரிய பொருளாதார வல்லரசு என்ற நம்பிக்கை சற்றே ஆட்டம் கண்டுள்ளது. அதேநேரம் இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவின் பொருளாதாரத் தலைமைக்கு இப்போதைக்கு அச்சுறுத்தல் இல்லை எனலாம்.

 ""யானை படுத்தாலும் குதிரை மட்டம்'' அல்லவா? அமெரிக்கா என்ற யானை மீண்டும் எழுந்து நிற்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பரவலாக உள்ளது. காரணம், அமெரிக்க நாட்டுக்குச் சமாளிக்கும் திறன் இருக்கிறது என்றே பெரும்பாலான வல்லுநர்கள் கருதுகிறார்கள்.  அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவைப் பாதிக்குமா? பாதிக்கும் என்றால் எந்த அளவுக்குப் பாதிக்கும்? இவைதான் நம் முன் உள்ள முக்கிய வினாக்கள்.  நமது பொருளாதார அடிப்படைகள் மிகவும் வலிமையாக உள்ளன. எனவே, இது பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது. மிகுந்த கவனத்துடன் நிலைமையைக் கவனித்து வருகிறோம்'' என மக்களவையில், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.

 ஆனால், இந்தியப் பொருளாதாரத்துக்கு ஒரு சில பாதிப்புகள் ஏற்படத்தான் செய்யும் என்பது வெளிப்படை.  முதலில், ஏற்றுமதியை எடுத்துக்கொள்வோம். 2010-11-ல் ஏற்றுமதி 38 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மதிப்பு 250.5 மில்லியன் டாலர் ஆகும். (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி). நடப்பாண்டிலும் ஏற்றுமதி ஏறுமுகத்தில் இருக்கிறது. ஆனால், அடுத்துவரும் மாதங்களில் இது சரியக்கூடும்.  ஜவுளி, ஆயத்த ஆடைகள், ஆபரணக் கற்கள், ஃபேஷன் ஆபரணங்கள், தோல் பொருள்கள், கைவினைப் பொருள்கள் உள்ளிட்டவை கணிசமான அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

 இந்த நாடுகளில் பொருளாதார மந்த நிலை மேலும் நீடித்தால், இந்திய ஏற்றுமதி கணிசமாகப் பாதிக்கப்படும்.  அதேநேரம், 2008-ம் ஆண்டு கிடைத்த அனுபவத்தின் பயனாக, இந்திய ஏற்றுமதியாளர்கள், ஆப்பிரிக்கா, லத்தீன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் சந்தைகளுடன் வர்த்தகத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இந்தப் புதிய முயற்சி நமது ஏற்றுமதியாளர்களுக்கு இப்போது ஓரளவு கைகொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.  இரண்டாவதாக, தகவல் தொழில்நுட்பத் துறையைக் குறிப்பிட வேண்டும். கணினி மென்பொருள் ஏற்றுமதிக்கு இந்திய நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களைப் பெரிதும் சார்ந்துள்ளன. மந்தநிலை தவிர, ஒபாமா அரசின் சில புதிய சட்டங்களாலும் நமது தகவல் தொழில்நுட்பத்துறை ஏற்கெனவே சிறிது பாதிக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில், மந்தநிலை நீடித்தாலோ மேலும் கடுமையானாலோ, இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்று சொல்லத் தேவையில்லை.  அதேநேரம், என்னதான் மந்தநிலை இருந்தாலும் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் கணினி சார்ந்த பணிகளுக்கும், பி.பி.ஓ. எனப்படும் அமெரிக்க அலுவலகங்களின் அன்றாடப் பணிகளை இந்தியாவில் செய்து வாங்கிக்கொள்ளும் பணிகளுக்கும் இந்திய நிறுவனங்கள் அல்லது வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் துணையில்லாமல், இப்போதைக்கு அமெரிக்கா தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாது. ஆகையால், இந்தியாவுக்கு இத்துறையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஓரளவு பாதிப்பு ஏற்பட்டாலும், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள புதிய நிறுவனங்களை வாடிக்கையாளர்கள் ஆக்கிக்கொண்டு தங்களது இழப்பை ஈடுசெய்து கொள்ள முடியும்.  இதுகுறித்து, இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான "இன்ஃபோசிஸ்' நிறுவனத்தின் தலைமை மேலாண்மை அதிகாரி எஸ்.டி. ஷிபுலால் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

  ""இது மாதிரியான சிரமமான காலங்களை நாங்கள் ஏற்கெனவே - 2003-ம் ஆண்டிலும் 2008-ம் ஆண்டிலும் - சந்தித்து இருக்கிறோம்.  குறிப்பாக 2008-ம் ஆண்டுக்குப் பிறகு, இதுபோன்ற நிலைமையை எதிர்கொள்வதற்கு எங்களைத் தயார்படுத்திக் கொண்டு இருக்கிறோம். பூகோள அடிப்படையிலும், சேவைகள் அடிப்படையிலும் எங்கள் பணிகளை விரிவாக்கம் செய்து கொண்டு இருக்கிறோம். அதைத்தவிர, எங்கள் "ரிங்க் மேனேஜ்மெண்ட்' இலாகாவையும் வலுப்படுத்தி உள்ளோம்''.  இவர் கூறுவது அனேகமாக எல்லா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பொருந்தும். பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு நாளடைவில் சரியாகிவிடும் என்று நம்பலாம்.  அதேநேரம், இந்தியப் பொருளாதாரத்துக்கு சில நன்மைகளும் ஏற்படக்கூடும். 

அமெரிக்காவில் முதலீடு செய்துள்ள பணத்தை எடுக்கும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், அந்தப் பணத்தை வேறு நாடுகளில் முதலீடு செய்வார்கள். அதுசமயம், அந்தப் பெரும் முதலீடுகளில் ஒரு பகுதியாவது இந்தியாவுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.  ""கோல்டுமேன் ஸôக்ஸ்'' என்னும் பிரபல சர்வதேச முதலீட்டு நிறுவனம், இந்தியாவின் பொருளாதார வலிமைக்கான தரவரிசையை அண்மையில் உயர்த்தியுள்ளது. இதன் பயனாக, பல வெளிநாட்டு "பென்ஷன் ஃபண்டுகள்'' மற்றும் நீண்டகால முதலீடுகளின் ஒரு பகுதியாவது இந்தியாவுக்கு வர வாய்ப்பு உள்ளது.  எது எப்படி இருந்தாலும், 2008-ம் ஆண்டு நிகழ்ந்த சர்வதேச பொருளாதார வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவின் இப்போதைய கடன் நெருக்கடி, இந்தியாவைப் பெரிய அளவில் பாதிக்கக்கூடியது அல்ல என்பது மட்டும் தெளிவு
 Mohamed Ismail

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.