அண்ணா ஹசாரே ஆதரவுக் குரல்கள் இந்தியா முழுவதும் ஒலிக்கும் அதேநேரத்தில், நாடாளுமன்ற வாசலில் இந்திய மக்களின் உணவைக் கெடுக்காதே என்கிற எதிர்ப்புக்குரலுடன் கிரீன்பீஸ் ஆர்வலர்கள் கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள மசோதாக்களில் ஒன்றுதான் "இந்திய உயிரி-தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம்' மசோதா. தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக உழவர் பாதுகாப்பு என்ற பெயரில் திமுக அரசால் சட்டப்பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு, பிறகு இயற்கை வேளாண் ஆர்வலர்கள் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது நினைவு இருக்கலாம்...
அந்த மசோதாவுக்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளில் முக்கியமான ஒன்று வேளாண் பயிற்சி தொடர்பானது. விவசாயிகளுக்கு வேளாண் முறைகளை யார் வேண்டுமானாலும் சொல்லித்தரும் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசு அனுமதி பெற்ற நபர் அல்லது நிறுவனம்தான் செய்ய முடியும் என்கிற வகையில், நுட்பமாக வரையறுக்கப்பட்ட அந்த மசோதாவை இயற்கை வேளாண் ஆர்வலர்கள் எதிர்த்தார்கள்
. ÷இப்போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வைக்கப்போகும் இந்திய உயிரி - தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணைய மசோதா, தமிழக அரசு மசோதாவில் இருந்த ஆட்சேபத்துக்குரிய பகுதிகளை இன்னும் கடுமையாக, ஆனால் வேறுவிதத்தில் முன்வைக்கிறது. இந்த மசோதாவில் மிகப்பெரும் ஆட்சேபத்துக்குரியதாக இரண்டு பகுதிகளை கிரீன்பீஸ் ஆர்வலர்கள் முன்வைக்கிறார்கள்: ÷""....... உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள் அல்லது தாவரத்தின் பாதுகாப்பு தொடர்பாக எந்தவிதமான அறிவியல் ஆதாரங்கள் இல்லாமல், மக்களிடம் தவறான கருத்துகளைக் கொண்டுசெல்லும் நபர் யாராக இருந்தாலும், அவருக்கு 6 மாதங்கள் அல்லது ஓராண்டுவரை நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதமும் அல்லது இரண்டும் ஒரேநேரத்தில் விதிக்கப்படும்.....'' என்கிற இந்த நிபந்தனை மக்களிடம் மரபீனி மாற்றப்பட்ட விதைகள், காய்கனிகள், வேளாண் விளைபொருள்கள் குறித்த தீமைகளைப் பேசுவதையே மறைமுகமாகத் தடைசெய்கிறது.
÷அறிவியல் ஆதாரங்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு ஆய்வுக்கூடத்துக்கும் மாறுபடுபவை. பன்னாட்டு மென்பானங்களில் நச்சுத்தன்மை உள்ளது என்று இயற்கை ஆர்வலர்கள் சொல்லும் முடிவுக்கு, "அனுமதிக்கப்படும் அளவு'க்கு உள்ளாகத்தான் இருக்கிறது என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது அரசு. இந்த அனுமதிக்கப்பட்ட அளவு அமெரிக்காவில் ஒரு விதமாகவும், இந்தியாவில் வேறு விதமாகவும் இருக்கிறதே, அது ஏன் என்று கேள்வி கேட்பாரில்லை. இப்போதுள்ள கருத்துரிமைப்படி ஒரு வேளாண் பொருளில் நச்சுக்கலப்பு உள்ளது என்று சொல்வதற்காவது உரிமை உள்ளது. அதனை முற்றிலுமாக இந்த மசோதா பறித்துவிடும். மரபீனி மாற்றப்பட்ட உற்பத்திப் பொருள்களால் விளையும் எல்லா தீமைகளும் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் இருக்கிறது என்பதாக அரசு சொல்லும்போது, இதைப்பற்றி பேசுவதே தண்டனைக்குரியது. அப்படியானால், எப்படி மக்களிடம் இதைக் கொண்டுசெல்வது? தவறுகளைத் தட்டிக் கேட்கக் கூடாதா? மாற்றுக் கருத்துக்கு இடமே கிடையாதா? வல்லான் வகுத்ததுதான் சட்டமா?
÷""......அரசு அனுமதித்துள்ள தாவரம் அல்லது உயிரி - தொழில்நுட்பம் சார்ந்த பொருளை அனுமதியின்றி பரிசோதனைக்கு உள்படுத்துவது (கிளீனிக்கல் டிரையல்) தண்டனைக்குரியது. இக்குற்றத்தைச் செய்பவருக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் ஒரேநேரத்தில் தண்டனையாக விதிக்கப்படும்.....'' என்கிற நிபந்தனைகள், யாருக்காக, யாரைத் திருப்திப்படுத்த அல்லது பாதுகாக்கச் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது புரியவில்லை. அரசின் அனுமதி பெற்ற பிறகுதான் இந்தப் பொருள்களைத் தனியார் அமைப்புகளும் இயற்கை ஆர்வலர்களும் பரிசோதிக்க முடியும்.
ஒரு விளைபொருளை அல்லது உயிரிப் பொருளைப் பரிசோதிக்கவும் அரசின் அனுமதி பெற வேண்டும் என்றால், இந்தியாவில் மக்களாட்சிதான் நடக்கிறதா என்கிற சந்தேகமல்லவா எழுகிறது. இவர்கள் தொழுதடிமை செய்து வணங்கும் அமெரிக்கத் திருநாட்டில் இப்படி எல்லாம் தடை இல்லையே. அங்கே தரப்படும் சுதந்திரமும் உரிமையும் இங்கே மட்டும் தட்டிப் பறிக்கப்படுகிறதே, ஏன்? ÷மசோதாவின் இத்தகைய பிரிவுகள் முழுக்கமுழுக்க, மரபீனி மாற்றுப்பயிர்களில் (ஜி.எம். புராடக்ட்ஸ்) ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்களின் வற்புறுத்தலால் செருகப்பட்ட நிபந்தனைகள்தான் இவையெல்லாம் என்பதுதான் போராட்டம் நடத்தும் இயற்கை ஆர்வலர்களின் கருத்து. ஆனால், இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தாகிவிட்டது.
இப்போது, அண்ணா ஹசாரே விவகாரத்தால் மக்களின் மனமும், ஊடகங்களின் கவனமும் வேறுதிசையில் இருப்பதால், நாடாளுமன்றத்தில் சந்தடி சாக்கில் விவாதம் இல்லாமலேயே இந்த மசோதா நிறைவேறும் அபாயம் நிறையவே இருக்கிறது. இந்த மசோதா மாநில அரசுகளின் அதிகாரத்தில் குறுக்கிடுகிறது என்பதுடன் சுகாதாரத் துறை, சுற்றுச்சூழல் துறை தலையிட முடியாததாகவும் உள்ளது. ÷ஏற்கெனவே பி.ட்டி. பருத்தி உற்பத்தியில் மரபீனி விதைகள் இந்திய மண்ணில் வேரூன்றிவிட்டன. 2009-10-ம் நிதியாண்டில் 2.43 லட்சம் குவிண்டால் பி.ட்டி. பருத்தி சந்தைக்கு வந்தது, 2010-11-ம் நிதியாண்டில் 2.60 லட்சம் குவிண்டாலாக உயர்ந்துள்ளது
. இப்போது வடமாநிலங்களில் பி.ட்டி மக்காச்சோளம் விதைகள் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்கின்றன மரபீனி மாற்றுப்பயிர் நிறுவனங்கள். பி.ட்டி. கத்திரிக்காய் விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. இந்தப் பிரச்னையைப் பற்றி அண்ணா ஹசாரேயிடம் எடுத்துச் சொல்லக்கூடியவர்கள் அவரைச் சுற்றி யாரும் இல்லையே, என்ன செய்வது? விவசாயியான அவரிடம் எடுத்துச் சொன்னால் ஒருவேளை "லோக்பால்' மசோதாவைக் கைவிட்டுவிட்டு இதற்கு முன்னுரிமை கொடுத்தாலும் வியப்பில்லை. ÷இந்த நேரத்தில் இப்படியொரு மசோதா. கேள்விக்கு ஒருவர் இல்லை. நம்மைக் கீழ்மக்கட்கு ஆளாக்கினான்
நன்றி :
Mohamed Ismail
No comments:
Post a Comment