Latest News

தமிழக முதல்வருக்கு முஸ்லிம்களின் வேண்டுகோள்!



அனுப்புனர்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்
129/64 தம்புச் செட்டித் தெரு,
மண்ணடி, சென்னை – 1.
பெறுநர்
மாண்புமிகு தமிழக முதல்வர்
சகோதரி ஜெ. ஜெயலலிதா அவர்கள்,
தலைமைச் செயலகம், சென்னை.
பொருள் : வக்ஃபு நிலங்கள் மீட்பு
அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் சகோதரி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு, தமிழக மக்களின் மகத்தான ஆதரவோடு மூன்றாவது முறையாக தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு இறைவனுடைய அன்பும் அருளும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக என்று தமிழக முஸ்லிம்கள் சார்பில் நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகின்றோம்...
கண்ணியம் நிறைந்த சகோதரி அவர்களே, கடந்த ஆட்சியில் அப்பாவி மக்களின் நிலங்கள் அநியாயமாக அபகரிக்கப்பட்டு வருகின்றன என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு எச்சரிக்கை செய்தீர்கள். ஆட்சி மாறிய உடன் அவை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று உறுதியளித்தீர்கள்.
இதனால் மக்கள் நம்பிக்கையோடு உங்களுக்கு வாக்களித்து உங்களுக்கு மகத்தான வெற்றியை தந்தனர். முதல்வராகப் பொறுப்பேற்றதும் விரைந்து நடவடிக்கை எடுத்து 2006இல் இருந்து 2011 வரை நடைபெற்ற நில அபகரிப்பு தொடர்பான அனைத்துப் புகார்களையும் விசாரித்திட காவல்துறையில் தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தி  பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளங்களில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளீர்கள்.
இதற்காக மனதாரப் பாராட்டுகின்றோம். நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகின்றோம். உங்களின் இந்த முயற்சிக்கு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் துணை நிற்கும் என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம்.
அன்புச் சகோதரி அவர்களே, தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது இதேபோன்ற ஒரு வாக்குறுதியை முஸ்லிம்களுக்கும் அளித்தீர்கள். தமிழகத்தில் உள்ள வக்ஃபு நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் என்று அறிவித்தீர்கள். அதைக் கேட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் தாங்களுக்கு ஆதரவாக மாறி தேர்தலில் வாக்களித்தது.. இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் யாரும் அறிவிக்காத உத்திரவாதம் அது. இதற்காக  தாங்கள் வெற்றி பெற்று முதல்வராக அமரவேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்த முஸ்லிம்கள் ஏராளம்.
இறை நம்பிக்கை இருக்கின்ற தங்களுக்குத் தான் இறைவனுடைய சொத்துக்களின் மகத்துவமும் அவை இறைவனின் படைப்புகளில் தேவையுடையோர்க்கு முறையாகச் செலவிடப்பட வேண்டிய அவசியமும் விளங்கும். இறை நம்பிக்கை இல்லாதவர்களிடம் இதை எதிர்பார்க்க இயலாது.
முஸ்லிம்களின் வறுமையைப் போக்கிட, கல்லாமையைக் களைந்திட, ஆதரவற்றோர்க்குச் சொந்தமான, விதவைகளின் மறுமணத்திற்கு பயன்பட வேண்டிய வக்ஃபு சொத்துக்கள், இத்தகைய பயன்பாட்டிற்காகவே முஸ்லிம் முன்னோர்களாலும் இந்து மத அரசர்களாலும் வாரி வாரி வழங்கப்பட்ட சொத்துக்கள், இன்று சில அடாவடி முஸ்லிம்களாலும் அரசியல்வாதிகளாலும், அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்களாலும் ஓய்வு பெற்ற நீதிபதிகளாலும் அநியாயமாக அபகரிக்கப்பட்டு கேட்க நாதியில்லாமல் கிடக்கிறது.
இந்தச் சொத்துக்களைப் பாதுகாத்து முறையாகப் பராமரித்திட வேண்டிய வக்ஃபு வாரியமோ ஊழலில் ஊறித் திளைக்கிறது.
63 ஆண்டுகளாக அநீதியிழைக்கப்பட்ட மக்களாக வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றார்கள்  முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மையான மக்கள்.
இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் அதே நேரம் சட்டத்தாலும் ஆட்சியின் அதிகாரத்தாலும் வக்ஃபு சொத்துக்களை மீட்கும் ஆற்றலும், வக்ஃபு வாரியத்தை ஊழலிலிருந்து து£ய்மை படுத்தும் அதிகாரமும் உள்ள தங்களிடம் கோரிக்கை வைக்கின்றோம்.
1. கடந்த 63 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பறிபோன வக்ஃபு நிலங்களை மீட்டு முஸ்லிம்களில் தேவையுடைய மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
2. வக்ஃபு வாரியத்தினை அடியோடு கலைத்துவிட்டு தற்போது அங்கே பணியாற்றுவோருக்குப் பதிலாக புதிய நேர்மையான அலுவலர்களை நியமித்து முறைப்படுத்தப்பட்ட நிர்வாகத்தின் மூலமாகவும், ஊழல் அற்ற முறையிலும் வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்கும்படி மிகுந்த நம்பிக்கையோடு தங்களிடம் கோருகின்றோம்.
இறைவனுடைய சொத்துக்களை மீட்டெடுக்கும் இந்த உயரிய பணியில் தாங்கள் கனிவோடு அக்கறை செலுத்துவீர்கள் என்று மனதார நம்புகின்றோம். இறைவனுடைய அன்பும் அருளும் உங்களுக்கு என்றென்றும் நிலைத்திட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.
நன்றி
இப்படிக்கு
நிறுவனர்,
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்
சென்னை.

- நன்றி: 'சமூக நீதி முரசு' மாத இதழ்
http://www.samooganeethi.org/?p=1025

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.