Latest News

  

வேலைதேடும் பட்டதாரிகளிடம் தொழில் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது என்ன? - சவாலே சமாளி!


வேலைதேடும் புதிய பட்டதாரிகளிடம் தொழில் நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கின்றன? எத்தகைய தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்?...என்பது குறித்து வேலைதேடும் இளைஞர்களுக்கு சுரேகா கோத்தாரி கூறும் யோசனைகள் :

மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலையில் எத்தகைய பணியில் சேருவது என்பது குறித்து இளைஞர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும். பல சமயங்களில் ஒரு பணியில் சேர்ந்த பிறகு அதுகுறித்து மறுபரிசீலனை செய்யும் நிலைக்குப் பல இளைஞர்கள் ஆளாகிறார்கள். திறனறிவு (APTITUDE), விருப்பம், அர்ப்பணிப்பு உணர்வு போன்றவற்றின் அடிப்படையில் எத்தகைய பணியில் சேருவது என்று தொடக்கத்திலேயே முடிவு செய்வதில்லை. பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப, கவர்ச்சிகரமானது என்று அவர்களால் கருதப்படும் பணிகளில் சேரும்போது இதுபோன்ற நிலை ஏற்படுகிறது.
ஒவ்வொரு துறையும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக மாறி வருகிறது. இன்றைக்கு உள்ள நோக்கும் தொழில்நுட்பமும் சில ஆண்டுகளிலேயே காலாவதியாகிவிடும். அதனால் காலத்தின் தேவைக்கேற்ப தங்களைத் தொடர்ந்து தரம் உயர்த்திக் கொள்ளாதவர்கள், நடு வாழ்க்கையில் பணிகளில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இல்லாவிட்டால் ஸ்தம்பித்துப் போய்விட நேரிடும். இன்றைய உலகில் பொருட்கள் சர்வதேசத் தரத்தில் இருக்க வேண்டும். எனவே, தனிப்பட்ட பணியும் ஒரு பொருளைப் போல சர்வதேசத் தரத்தில் இருக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் எத்தகைய தரத்தில் கல்வி பெறுகிறோம் என்பதுடன் தலைமைப் பண்பு, குழுவுடன் இணைந்து செயல்படுதல் போன்ற ஆளுமைப் பண்புகளையும் பெற்றிருக்க வேண்டும். திறமையான செயல்பாடு முக்கியம். வெற்றிக்கு குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது. பணியில் அர்ப்பணிப்பு உணர்வு, கடுமையாக உழைக்கும் திறன், நம்பகத்தன்மை ஆகியவற்றின் மூலம்தான் வெற்றியை ஈட்ட முடியும்.
ஊழியர்கள் சிறப்பாக உழைப்பதையே வேலை வழங்குபவர்கள் விரும்புகிறார்கள். விருப்பப் பணி ஓய்வோ அல்லது கட்டாயப் பணி ஓய்வோ இன்றைய நடப்புகளாகிவிட்டன. எனவே, இளம் பருவப் பணிக்காலத்திலேயே அதிக அளவில் சேமிக்க வேண்டியது குறித்து இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டும். வயது வளர வளர, செயல்பாட்டையும் திறமையையும் தொடர்ந்து உயர்நிலையில் தக்க வைத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைக் காண வேண்டும். இந்தியாவில், சமூகத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். புதிய பொருளாதாரக் கொள்கை குறித்துக் கூக்குரல் எழுப்பப்படுகிறது. அதைவிட, பழைய பொருளாதார முறையில் இன்றைக்கும் நிறையப் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். உலகளாவிய அளவில் போட்டி போட வேண்டிய சூழ்நிலையில் கடும் நெருக்கடி ஏற்படுகிறது.
பெருமளவு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு இடம் அளிக்கும் வகையில் பழைய பொருளாதாரத்தை அரசு தாராளமயமாக்க வேண்டியுள்ளது. வீட்டுக் கடன்களுக்கு வரிச் சலுகை அளித்ததன் மூலம் கட்டடத் தொழிலுக்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளது. திறமை, திறனறிவு, சிறப்புச்சாதனைக்கான ஊக்கம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இன்றையப் பணி அமைகிறது. தொழிலுக்குத் தேவையான படிப்பைப் பெறுவதன் மூலம் மட்டுமே வெற்றிகரமான பணிக்கு உத்தரவாதமாக இருக்காது. உலகளாவிய அரசியல் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக, குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் பணிக்குச் செல்வதற்குச் சாதகமான சூழ்நிலை இருக்காது.
சேவைத்துறைகள் நிறுவனமயமாக்கப்பட்டு, பல்வேறு நிலைகளில் தொழில்திறன்மயமாக்கப்படும் சூழ்நிலையில், நாட்டில் சிறு தொழில்முனைவோர் என்பது கெட்டகனவாகி வருகிறது. எனவே, பெரிய நிறுவனங்களில் அனுபவம் பெற்ற பின்னர் தொழில் முனைவோராவது நல்லது. வெற்றி என்பது ஒரு நாள் கனவு நிறைவேறுவதுடன் முடிந்து விடுவதல்ல. வாழ்க்கை என்பது சவால். துணிச்சலாகச் சிந்திக்க வேண்டும். "க்ரியேட்டிவ்வாக' இருக்க வேண்டும். இப்போதையச் செயல்பாடுகள் முந்தையச் செயல்பாடுகளைவிட மேம்பட்டு இருக்க வேண்டும். கற்பது என்பது முடிவற்றதாக இருக்க வேண்டும். இப்படி இருந்தால் தான் வெற்றியாளராக இருக்க முடியும். சரியான அணுகுமுறையும் விடாப்பிடியான உணர்வும் இதற்குத் தேவை.

நன்றி: இந்நேரம்.காம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.