Latest News

பாபரி பள்ளிவாசல் தீர்ப்பு வரலாற்றை சிதைத்துள்ளது-ரோமீலா தாப்பர்

(ரோமீலா தாப்பர் இந்தியாவின் மதிப்பு மிக்க வரலாற்றாசிரியர். பாபர் பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று உண்மைகளை சிதைத்துள்ளது என்று கோபகணலுடன் குமுறுகிறார். தி ஹிந்து நாளிதழில் (அக்டோபர் 2) அவர் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கத்தை நன்றியுடன் இங்கே தருகிறோம்)

பாபரி மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வழங்கியுள்ள தீர்ப்பை ஒரு அரசியல் தீர்ப்பு என்றே கருதவேண்டும். இத்தகைய தீர்ப்பை வழங்குவதற்கு நீதிமன்றம் தேவையில்லை. அரசே இப்படிப்பட்ட ஒரு முடிவை நீண்ட நாட்களுக்கு முன்பே எடுத்திருக்க இயலும். இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்க நீதிமன்றம் தேவையில்லை.

இடிக்கப்பட்ட பள்ளிவாசல் இருந்த இடத்தை கையகப்படுத்தி அங்கு ஒரு புதிய கோயிலை கட்டுவது தான் இந்த தீர்ப்பின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. பாபரி மஸ்ஜித் பிரச்னையில் அரசியல் மட்டுமின்றி வரலாறு ஒரு முக்கிய அம்சமாக அமைந்தது. ஆனால் இந்த தீர்ப்பில் வரலாற்று உண்மைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் ஸ்ரீராமர் பிறந்தார் என்றும் அவரது பிறப்பை நினைவு கூறும் வகையில் அங்கு கோயில் கட்டப்பட வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மதநம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற ராம பக்தர்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மதநம்பிக்கைக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் ஒரு நீதிமன்றத்தில் இத்தகைய தீர்ப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை. 



ஸ்ரீராமரை ஹிந்துக்கள் மிகுந்த மரியாதையுடன் வழிப்பட்டு வருகின்றார்கள் என்பது உண்மை தான். ஆனால் இதை அளவுக்கோளாக வைத்து ஸ்ரீராமரின் பிறந்த இடம் இது தான் என்றும் எனவே அந்த இடத்தை எங்களுக்கு தர வேண்டும் என்ற கோரிக்கையை சட்டரீதியாக ஏற்க இயலுமா? இந்த அடிப்படையில் வேண்டுமென்றே ஒரு மிக முக்கிய வரலாற்று சின்னம் அழிக்கப்படுவதற்கு உதவிட இயலுமா?
பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் 12ம் நூற்றாண்டில் ஒரு கோயில் இருந்தது என்றும் அதனை இடித்து விட்டு தான் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்றும்  எனவே அந்த இடத்தில் புதிதாக கோயில் கட்டப்பட வேண்டும் என்று இத்தீர்ப்பு கூறுகின்றது.
 

பல்வேறு தொல்லியல் நிபுணர்களும் வரலாற்றாசிரியர்களும் மிக வன்மையாக எதிர்த்த இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சியின் முடிவுகளை முழுமையாக நீதிபதிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அகழ்வாராய்ச்சி என்பது மிகுந்த நிபுணத்துவம் வாய்ந்த துறையாகும். இதில் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே இதில் ஒரு தரப்பு கருத்தை மட்டும்  நுனிப்புல் மேய்ந்தது போல் ஏற்றுக் கொண்டு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அதன் மீது நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

நீதிபதிகளில் ஒருவர் (எஸ்.யூ. கான்) தான் ஒரு வரலாற்றாசிரியர் இல்லை என்றும் எனவே வரலாற்று விஷயங்களுக்கு ஆழமாக செல்லவில்லை என்று சொல்லி விட்டு இந்த வழக்கில் தீர்ப்பு சொல்வதற்கு வரலாறும் தொல்லியியல் ஆய்வுகளும் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிரச்னைகள் வரலாற்றுடன் தொடர்புடையதாகவும் 10 நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட கட்டடங்கள் தொடர்புடையதாகும்.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிவாசல், நமது கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்த பள்ளிவாசல் ஒரு அரசியல் தலைமையின் கீழ்  வன்கும்பலால் வேண்டுமென்றே தகர்க்கப்பட்டது. நமது பாரம்பரிய கலாச்சாரத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட இந்த குற்றச்செயலைப் பற்றி இத்தீர்ப்பின் சாரம்சத்தில் எவ்வித குறிப்பையும் காணமுடியவில்லை. புதிய கோயிலின் கர்ப்பகிரகம் -ராமர் பிறந்த இடம் என்று சொல்லப்படுகின்ற- பள்ளிவாசல் இருந்த இடத்தில் அமைக்கப்படுமாம். இருந்ததாக சொல்லப்படும் கோயில் இடிக்கப்பட்டதை கண்டனம் செய்து புதிதாக கோயில் கட்டப்படுவதற்கு இத்தீர்ப்பில் நியாயம் கற்பிக்கப்படுகின்றது. அதே நேரத்தில் பள்ளிவாசல் இடிப்பு கண்டிக்கப்படாமல் அதனை இந்த வழக்கின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்ற கருதியுள்ளார்கள்.

இந்த தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணத்ததை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் எந்த ஒரு குழுவும் தங்கள் கடவுள் இந்த இடத்தில் பிறந்தார் என்று கூறி தாங்கள் ஒரு பெரும் மதநம்பிக்கையாளர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு  (அதாவது ராமர் பிறந்த இடம் குறித்து சங் பரிவார் ஒத்துமொத்த ஹிந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொன்னது போல்) பிறருக்கு சொந்தமான சொத்துகளை கோருவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. இனி தேவையான சொத்துகளை சுட்டிக்காட்டி சண்டையை ஏற்படுத்துவதற்காக இது போல பல ஜன்மஸ்தானங்கள் உருவாக்கப்படும். திட்டமிட்டு வரலாற்றுச் சின்னம் (பாபரி பள்ளிவாசல்) இடிக்கப்பட்டது கண்டிக்கப்படாத நிலையில் இது போன்ற இடிப்பு செயல்களை எப்படி தடுத்து நிறுத்த இயலும்? வழிப்பாட்டு இடங்களில் நிலையை மாற்றக் கூடாது என்று 1993 இயற்றப்பட்ட சட்டம் நாம் கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருவது போல் பயனற்றதாக தான் இருக்கின்றது.

வரலாற்றில் நடந்தது நடந்தது தான். அதனை மாற்ற இயலாது. ஆனால் என்ன நடந்தது என்பதை முழுமையாக எப்படி புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் கற்க இயலும். நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் அதில் பாடங்களை கற்க இயலும். தற்கால அரசியலை நியாயப்படுத்துவதற்காக நாம் கடந்த காலத்தை மாற்றிவிட இயலாது. இந்த தீர்ப்பு வரலாற்றின் மீதான மரியாதையை சிதைத்துள்ளது. வரலாற்றின் இடத்தில் மதநம்பிக்கையை புகுத்தியுள்ளது. இந்த நாட்டின் சட்ட பரிபாலனம் மதநம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமில்லாமல் சான்றுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்படும் போது தான் உண்மையான நல்லிணக்கம் ஏற்படும்.

தமிழில் - சுவனத்தின் செல்வன்
நன்றி  - சமுதாய ஒற்றுமை மாத இதழ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.