
தெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே லட்சியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் தொழில்துறை நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், 17 ஆயிரத்து 141 கோடி ரூபாய் முதலீட்டில் 55 ஆயிரத்து 54 பேருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும், 4 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 21 ஆயிரத்து 630 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான 9 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர், 7 ஆயிரத்து 117 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 ஆயிரத்து 798 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான 5 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன்படி, இன்று தொடங்கப்பட்டுள்ள 49 திட்டங்களின் மூலம் 28 ஆயிரத்து 508 கோடி ரூபாய் முதலீட்டில் 83 ஆயிரத்து 482 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பண்பாட்டின் முகவரியாக உள்ள தமிழ்நாட்டை முதலீட்டாளர்களின் முகவரியாக மாற்றும் முயற்சி இது என தெரிவித்தார். மேம்படுத்தப்பட்ட ஒற்றைச்சாளர முறை 2.O-வை தொடங்கி வைத்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், மார்ச் மாதத்துக்குள் மேலும் 210 சேவைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். தெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே நமது லட்சியம் எனவும், ஏற்றுமதி கொள்கைகளை வெளியிட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment