
மதுரையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தனி மருத்துவமனை திறக்க வேண்டும் என மத்தியசுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தனை மத்திய அரசு ஓய்வூதியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மதுரையில் ஓய்வு பெற்றவர்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் வசிக்கின்றனர். இவர்களின் மருத்துவ வசதிக்காக மதுரையில் தனி மருத்துவமனை திறக்க வேண்டும் என மத்திய அரசை பல ஆண்டுகளாக மதுரை மத்திய அரசு ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
இந்தியா முழுவதும் மதுரை, கோவை உட்பட 20 இடங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கான தனி மருத்துவமனை அமைக்க முடிவு செய்து, இந்த நகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் குறித்து கணக்கெடுப்புநடத்தப்பட்டது.
இதில் தமிழகத்தில் கோவையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான தனி மருத்துவமனை அமைக்க பணியாளர்கள் தேர்வு தொடர்பாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மருத்துவமனை குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
இதையடுத்து மதுரையில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான தனி மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனை மதுரை மத்திய அரசு ஓய்வூதியர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர்எஸ்.எம்.ஜெயக்குமார் கூறியதாவது: மத்திய அரசின் சுகாதாரத் திட்ட உறுப்பினர்களில் 6,000 பேர்ஒரு பகுதியில் வசிக்கும் நிலையில், அங்கு தனி மருத்துவமனை தொடங்கலாம் என மத்திய சுகாதாரத் துறை விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் 20-க்கும்மேற்பட்ட மத்திய அரசு அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணிபுரிபவர்கள், ஓய்வூதியர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் மதுரையில் உள்ளனர். இதனால் மதுரையில் தனி மருத்துவமனை தொடங்கலாம்.
திருச்சி, நெல்லையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான தனி மருத்துவமனை செயல்படுகிறது. கோவையிலும் தொடங்கப்பட உள்ளது. ஆனால் சென்னைக்கு அடுத்த பெரிய நகரமான மதுரையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான தனி மருத்துவமனை இன்னும் தொடங்கப்படவில்லை.
மதுரையில் மருத்துவமனை திறப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத் திட்டத்தின் சென்னை கூடுதல் இயக்குநர் மத்திய இயக்குநர் ஜெனரலுக்கு பரிந்துரை அனுப்பி ஓராண்டாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மதுரையில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான தனி மருத்துவமனை திறக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment