
திண்டுக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து எல்லை தாண்ட முயன்ற மதுப்பிரியர்களை எஸ்பி தலைமையில் போலீஸார்மடக்கினர். போலீஸாருக்கு போக்குகாட்டி அமராவதி ஆற்றில்குதித்து நீந்தி எல்லை தாண்டிச் சென்ற மதுப்பிரியர்கள் பலர்,காலை 11 மணிக்குள் மதுபானங்கள் விற்று தீர்ந்ததால் ஏமாற்றமடைந்தனர்.
தமிழக அரசின் உத்தரவால் அதிக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டமும் ஒன்று. அருகில் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகமுள்ளதால் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இம்மாவட்டத்தின் எல்லையான மடத்துக்குளத்தை ஒட்டி திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. எல்லை மதுக்கடைகளில் மது வாங்க ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அங்கு எஸ்பி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மடத்துக்குளம் வழியாக செல்லும் அமராவதி ஆறு இரு மாவட்ட எல்லையாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி, சாமிநாதபுரம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை அறிந்து நேற்று அதிகாலை முதலே மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மடத்துக்குளம் சுற்று வட்டாரத்தில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டனர். இதனால் 2 கி.மீ., நீளத்துக்கு வரிசை நீண்டது.
திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் இருந்து சென்று மது வாங்கி வந்தவர்களை போலீஸார் மடக்கி பிடித்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையறிந்தமதுப்பிரியர்கள் பலர் அமராவதிஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையும் பொருட்படுத்தாது இக்கரையில் இருந்து மறுகரைக்கு நீந்திசென்று மது வாங்க துணிந்தனர். மேலும் சிலர் ஆற்றின் நடுவேசெல்லும் ரயில் தண்டவாளத்தின்மீது நடந்து சென்றனர். இதனால் ஏதேனும் அசம்பாவிதம் நேருமோ என்ற அச்சம் எழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷசாங்க் சாய் நேரில் ஆய்வு மேற்கொண்டார். துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீஸார் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, 'ஊரடங்கு தளர்வால் இதுபோன்று நிகழும் என கருதி கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனாலும் போலீஸார் எதிர்பார்க்காத வகையில் ஆற்றில்நீந்தியும், ரயில் தண்டவாளத்தில் நடந்தும் சென்ற மதுப்பிரியர்களால் பதற்றம் நிலவியது. இது தொடர்பாக விதி மீறியதாக 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன' என்றனர். எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று காலை 11 மணிக்கே மொத்த மதுபாட்டில்களும் விற்று தீர்ந்து விட்டதால் மது பிரியர்கள் பலர் சோகத்துடன் திருப்பூர் மாவட்டத்துக்கு திரும்பினர்.
No comments:
Post a Comment