
தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். இவர்கள் விசைப்படகு, ஃபைபர் படகு உள்ளிட்டவற்றின் மூலம் மீன் பிடிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீன் வளத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, கிழக்கு கடற்கரைப் பகுதிகளான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரையுள்ள பகுதிகளில் கடந்த ஏப்ரல்15-ம் தேதி மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதனால், கடந்த 2 மாதங்களாக விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. சென்னைகாசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் விசைப்படகுகளை கரையோரம் கட்டி வைத்திருந்தனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் மீன்பிடித் தடைக்காலம் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இன்று நள்ளிரவு முதல் மீன்பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் விசைப் படகுகளில்ஐஸ் கட்டிகளை நிரப்பி வைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். மேலும், படகு மற்றும் வலைகளில் சிறிய பழுதுகளை நீக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல உள்ளதால், மீன்களின் வரத்து அதிகரித்து, தடைக்காலத்தில் அதிகரித்த மீன்களின் விலை, இனி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment