Latest News

  

மாணவர்கள் மற்றும் மாநில நலனுக்கு ஆபத்தானது; 'நீட்' பாதிப்பு குறித்து ஏ.கே.ராஜன் குழுவுக்கு கடிதம் அனுப்புங்கள்: மாணவர்கள், பெற்றோருக்கு நடிகர் சூர்யா, இயக்குநர் தங்கர் பச்சான் வேண்டுகோள்

மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை. நீீட்தேர்வு எதிர்ப்புக்கான காரணங்களை நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு மாணவர்கள், பெற்றோர் அனுப்ப வேண்டும் என்று நடிகர்சூர்யா, இயக்குநர் தங்கர் பச்சான் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

நடிகர் சூர்யா: ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும் பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியை தீர்மானிக்க ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. 12 ஆண்டுகள் பள்ளிக்கல்வி படித்த பிறகும் நுழைவுத் தேர்வு மூலமாகவே உயர்கல்வி செல்ல முடியும் என்பது கல்வித் தளத்தில் அவர்களை பின்னுக்குத் தள்ளும் சமூக அநீதி. அது ஏற்படுத்திய காயத்தின் வடுக்கள் காலத்துக்கும் மறையாது. மாணவர் நலனுக்கும் மாநில நலனுக்கும் நீட் போன்றதேர்வுகள் ஆபத்தானவை.

தமிழக அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, நீட் தேர்வின் பாதிப்புகள் பற்றி மக்கள் கருத்து தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறது. அகரம் பவுண்டேஷன், மாணவர்களுக்கான பாதிப்புகளை முறையாக அக்குழுவிடம் பதிவுசெய்கிறது. நமது பிள்ளைகளின்எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய நீட் தேர்வின் பாதிப்பின் தீவிரத்தை உரியவர்களுக்கு உணர்த்த வேண்டும். மாணவர்களும் அவர்தம் குடும்பங்களும் அனுபவிக்கிற துயரங்களை தவறாமல் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிடம் neetimpact2021@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு வரும் ஜூன் 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இயக்குநர் தங்கர் பச்சான்: மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வை மத்திய அரசு அமல்படுத்தியது. வசதி படைத்தவர்கள் பணம் கொடுத்து மருத்துவப் படிப்புகளில் சேர்வதை தடுக்கவே நீட் தேர்வை நடைமுறைப்படுத்தியதாக காரணம் தெரிவித்தனர். ஆனால், நீட் தேர்வால் கிராமப்புற ஏழைமாணவர்கள்தான் மருத்துவக் கல்வி வாய்ப்பை இழந்துவருகின்றனர்.

அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நீட் தேர்வை நடத்துவது ஏற்புடையது அல்ல.

எனவே, பெற்றோர், மாணவர்கள் என அனைவரும் நீட்தேர்வை எதிர்ப்பதற்கான காரணங்களை உடனே எழுதி மின்னஞ்சல் அல்லது 'ஏ.கே.ராஜன் ஆணையம், மருத்துவக் கல்வி இயக்குநரகம், கீழ்ப்பாக்கம், சென்னை- 600010' என்ற முகவரிக்கு ஜூன் 23-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அனைவருக்கும் ஒரேமாதிரியான தரமான கல்வியை வழங்கிவிட்டு நீட் தேர்வை நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும். அதுவரை நீட் தேர்வு நடத்துவது அநீதியாகும் என்பதை அனைவரும் 50 பைசா அஞ்சல் அட்டை வாங்கி எழுதி அனுப்புங்கள்.

நமது எதிர்ப்பை பதிவு செய்து,நீதி கிடைக்க விரைந்து செயல்படுங்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source : www.hindutamil.in

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.