
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பரவல் காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லை.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகை மளிகைப்பொருட்கள் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி சென்னையில் இந்த நலத்திட்டங்களை வழங்கும் விழா மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான கபாலீசுவரர் கற்பகம்பாள் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது. தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பூசாரிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு விடுத்த செய்திக்குறிப்பில் "கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் இதுபோன்று ஒரே நேரத்தில் இவ்வளவு தொகையும், அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கியது அறநிலையத்துறை வரலாற்றிலேயே இது முதன் முறை" எனத் தெரிவித்துள்ளார்.அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் கூறும்போது ,"சென்னை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் பணியாற்றும் 14 ஆயிரம் பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment