
சென்னை: பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97.69-க்கு விற்பனை ஆனது. கடலூரில் 2-வது முறையாக பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, ஒரு சில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது.
இதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் விலையை படிப்படியாக உயர்த்த தொடங்கின. இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதம் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது.
தேர்தல் முடிவடைந்ததும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்த தொடங்கின. இதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.97.69-க்கும், டீசல் விலை 28 காசுகள் அதிகரித்து லிட்டர்ஒன்றுக்கு ரூ.91.92-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 100 ரூபாயை கடந்த நிலையில், குமராட்சி என்ற இடத்திலும் நேற்று ரூ.100-ஐ கடந்து விற்பனை ஆனது. இரு தினங்களுக்கு முன்பு கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment