
அதிமுக தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் அதிமுக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர். மொத்தம் 163 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அம்மா வாஷிங் மெஷின், விலையில்லா சோலார் அடுப்பு, வீடுதேடி வரும் ரேஷன் பொருள் போன்ற பல திட்டங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
அதிமுக தேர்தல் அறிக்கையின் 163 அறிவிப்புகள் வருமாறு:
1. அனைவருக்கும் வீடு "அம்மா இல்லம் திட்டம்" குடியிருப்பதற்கு சொந்தவீடு இல்லாதவர்களுக்கு, கிராமப்புறங்களில் அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். நகர் பகுதிகளில் அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி "அம்மா இல்லம் திட்டம்" மூலமாக விலையில்லாமல் வழங்கப்படும்.
2. மகளிர் நலன் (குல விளக்கு திட்டம்) சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட குல விளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும், உதவித்தொகையாக ரூ.1,500/- வழங்கப்படும். இந்த தொகை குடும்பத் தலைவியின் வங்கி கணக்கிலும், ஆண்கள் மட்டுமே உள்ள குடும்பத்தில் உள்ள ஆண்களின் வங்கி கணக்கிலும் செலுத்தப்படும்.
3. மகளிருக்கு பேருந்து பயணச்சலுகை நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு பேருந்து கட்டணத்தில் 50சதவீதம் கட்டணச்சலுகை வழங்கப்படும்.
4. சட்டம் ஒழுங்கில் "தமிழகம் அமைதிப்பூங்கா" தமிழகம் அமைதிப் பூங்காவாக தொடர்ந்து திகழ்ந்திடும் வகையில், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு, மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் தொடர்ந்து பேணி காக்கப்படும்.
5. ஜெயலலிதாவின் தொலைநோக்குத் திட்டம் 2023 அவர் உருவாக்கிய தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் கீழ் கண்டறியப்பட்டுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு விரைந்த பொருளாதார வளர்ச்சி எய்தப்படும். * அரசால் வெளியிடப்பட்ட மாநில சுற்றுச்சூழல் கொள்கை, மின் ஆளுமை கொள்கை, சுற்றுலாக் கொள்கை, தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை, மாநில வனக்கொள்கை, மாநில இளைஞர் நலன் கொள்கை, உணவுப்பதப்படுத்தும் கொள்கை, வானூர்தி பாதுகாப்பு கொள்கை, சூரிய சக்தி கொள்கை, மின்சார வாகன கொள்கை, சிறு, குறு தொழில் நிறுவன கொள்கை, புதிய தொழில் கொள்கை-2021 ஆகிய அனைத்து கொள்கைகளையும் திறம்பட செயல்படுத்தி தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ நடவடிக்கை எடுக்கப்படும்.
6. ரேஷன் பொருட்கள் வீடுதேடி பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களின் வீடுகளுக்கே நேரிடையாகச் சென்று வழங்கப்படும்.
7. வாழ்வாதார உதவியாக வீட்டிற்கு ஆண்டிற்கு விலையில்லா 6 கேஸ் சிலிண்டர்கள் வாழ்வாதார உதவியாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டிற்கு ஆறு (6) விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.
8. உழவு மானியம் விவசாயிகளின் உற்பத்தியை பெருக்கவும், அதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7,500/- உழவு மானியம் வழங்கப்படும்.
9. அனைவருக்கும் சூரியசக்தி சமையல் அடுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் விலையில்லா சூரியசக்தி சமையல் அடுப்பு வழங்கப்படும்.
10. அம்மா வாஷிங்மிஷின் வழங்கும் திட்டம் பெண்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்குடன் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு அம்மா வாஷிங்மிஷின் வழங்கப்படும்.
11. கல்விக்கடன் தள்ளுபடி மாணவர் / பெற்றோர் நலன் காக்க கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
12. கல்லூரி மாணாக்கர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜிபி டேட்டா கல்லூரி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 2 ஜிபி டேட்டா ஆண்டு முழுவதும் வழங்கப்படும்.
13. உயர்கல்வி மற்றும் இளைஞர் நலனுக்கான திட்டங்கள். * திறன் வளர்ப்புக்கென (Skill Development) தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் *. புதிய தொழில்நுட்பத்துடன் ஆன்லைனில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க 3500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தமிழக திறன் மேம்பாட்டு நிதி அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் தொழில் வழிகாட்டும் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்திடும் வகையில் அம்மா தொழில் வளர்ச்சி மூலதன நிதியம் மற்றும் தமிழ்நாடு தொழில் ஊக்குவிப்பு உதவி நிதியம் தொடங்கப்படும். * உலகளவில் புகழ்பெற்ற ஹார்வேர்டு, ஆக்ஸ்போர்டு, ஏல், கேம்பிரிஜ், எம்.ஐ.டி. போன்ற பல்கலைக் கழகங்களுடன் இணைந்து 10 சர்வதேச தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்படும். *தனியார் கூட்டு முயற்சியுடன் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள பிரத்யேக நிதி உருவாக்கப்படும்.
இதன்மூலம் அனைத்து துறைகளிலும், தமிழ்நாடு ஆராய்ச்சிக்கான இருப்பிடமாக உருவாகும். *. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கைவினை கலைஞர்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட சிறு வணிக வளாகம் மற்றும் திறன் மேம்பாட்டு வளாகங்கள் உருவாக்கப்படும். *. உலகத் தரத்தில் விளையாட்டுப் பயிற்சி மற்றும் விளையாட்டு அரங்கங்கள் மண்டலம் வாரியாக அமைக்கப்படும். *. கிழக்கு கடற்கரையில் கடல்நீர் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
*அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு இரண்டு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படும்.
14. UPSC, NEET, IIT-JEE, TNPSC ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி மையம் UPSC, NEET, IIT-JEE, TNPSC போன்ற போட்டித் தேர்வுகளில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் வெற்றி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், உயர்தர பயிற்சி மையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படும்.
15. வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி அரசு பணிகளில் இடம் பெறாத குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி உறுதியாக வழங்கப்படும்.
16. முதியோர் உள்ளிட்ட ஓய்வூதியங்கள் ரூ.1000/-லிருந்து ரூ.2000/- ஆக உயர்வு சமூக ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஆண் வாரிசால் புறக்கணிக்கப்பட்ட முதியோருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். மேலும், முதியோர், விதவைப்பெண்கள்,
முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு "ஓய்வூதியம் ரூ.1,000/-லிருந்து ரூ.2,000/-ஆக இருமடங்காக" உயர்த்தி வழங்கப்படும்.
17. அ. திருமண தம்பதிகளுக்கு அம்மா சீர்வரிசை திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், ஏழை மணமக்களுக்கு அழகிய பட்டாடை, வெள்ளிக் கொலுசு, வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட அம்மா சீர்வரிசைப் பரிசு வழங்கப்படும் *. திருமண உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், தாலிக்கு வழங்கப்பட்டு வரும் தங்கத்தோடு, பட்டதாரி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ. 50,000/- ரூ.60,000/- ஆகவும், பட்டதாரி அல்லாத பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ. 25,000/- ரூ.35,000/- ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
18. விலையில்லா அரசு கேபிள் இணைப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் விலையில்லா கேபிள் இணைப்பு வழங்கப்படும்.
19. நோய் தடுப்புக்கு கொசுவலைகள் நலிந்த மக்களை தொற்று நோயிலிருந்து பாதுகாக்க ஏழை குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கொசுவலைகள் வழங்கப்படும்.
20. மின்மிகை மாநிலம்-தொலைநோக்குப்பார்வை தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற நிலை தொடர, தொலைநோக்கு பார்வையுடன் மின்உற்பத்தி மென்மேலும் பெருக்கப்படும்.
21. மத்திய அரசுப் பணிக்கு மாநில அளவிலான தேர்வு தமிழ் நாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு மத்திய அரசுப் பணியாளர் தேர்வுகளில், மையப்படுத்துதல் தேர்வு ((Centralized Exam / Test) முறைக்குப் பதிலாக, மாநில ரீதியான தேர்வு (State Level Exam / Test) முறையை தமிழ்நாட்டில் கடைப்பிடித்து, மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்திட, மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
22. இந்திய ஆட்சி மொழியாக தமிழ் இந்திய அரசின் ஆட்சி மொழியாக உயர்தனி ஆதிமொழியான தமிழ் மொழியினை அறிவித்து நடைமுறைப்படுத்திட மத்திய அரசினை அ.இ. அண்ணா தி.மு.கழகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்தும்.
23. தமிழ் கட்டாயப்பாடம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழிப்பாடம் கட்டாயப் பாடமாக்கபடும்.
24. வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தனித்துறை வெளிநாடு வாழ் தமிழர் நலன் காக்க தமிழ்நாடு அரசு "தனித்துறை" அமைத்திட நடவடிக்கை எடுக்கும்.
25. உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
26. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம். சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ள தீர்மானத்தின் படி, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்திட மைய அரசை வலியுறுத்துவோம்.
27. தமிழ் வளர்ச்சி அ. இருமொழிக் கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் ஆ. திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இ. மத்திய அரசு போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் தமிழில் நடத்த வலியுறுத்தப்படும். ஈ. தமிழ்நாட்டில் இயங்கும் மைய அரசு / அரசு சார் நிறுவனங்களில், "தமிழ் மொழியில் அறிவிப்புகளை" (Announcements) வெளியிடவும், தமிழ் மொழியை அலுவல் மொழியாக்கவும் வலியுறுத்தப்படும். உ. தற்போது உள்ள நடைமுறைப்படி பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழங்களில் தமிழ் இருக்கை ஏற்படுத்த நிதியுதவி வழங்கப்படும். மேலும், 25 சர்வதேச பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஊ. தமிழரின் தொன்மையை பறைசாற்றும், சிவகங்கை மாவட்டம் - கீழடி, தூத்துக்குடி மாவட்டம் - ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகலை, ஈரோடு மாவட்டம் - கொடுமணல், அரியலூர் மாவட்டம் - கங்கைகொண்ட சோழபுரம், திருவள்ளூர் மாவட்டம் - பட்டறை பெரும்புதூர், இராமநாபுரம் மாவட்டம் - அழகன்குளம், கிருஷ்ணகிரி மாவட்டம் - மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
28. ஈழத் தமிழர் உட்பட எழுவர் விடுதலை மைய அரசு தாமதமின்றி, உடனடியாக ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய தக்க ஆணையிட வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உணர்வு பூர்வமாக தொடர்ந்து வலியுறுத்தும்.
29. ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை இலங்கையில் 13வது அரசியல் சாசன சட்ட திருத்தத்தின்படி ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை கிடைத்திட - ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மைய அரசு மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
30. ஈழத் தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நிரந்தர நீதி கிடைக்க வழிகாணுதல் இலங்கையில் நடந்த இனப்படுகொலை, கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைத்திடவும், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைத்திடவும், தமிழ் ஈழ மக்கள் சுதந்திரமாக வாழ தனி ஈழம் அமைந்திடவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court-IC) அல்லது புதிய சர்வதேச நடுநிலை சுதந்திரத் தீர்ப்பாயம் ((International Impartial Independent Mechanism-IIIM) மூலம் தக்க நடவடிக்கை எடுக்கும்படி ஐக்கிய நாடுகள் சபைக்கும் மத்திய அரசுக்கும் அ.இ. அண்ணா தி.மு.கழகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்தும்.
31. இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை / குடியிருப்பு அனுமதி இந்திய வாழ் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு "இரட்டைக் குடியுரிமை" ((Dual Citizenship) மற்றும் "குடியிருப்பு அனுமதி" ((Residential Permit) வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
32. காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு விவசாய மின் இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு உடனடியாக வழங்கப்படும்
33. முக்கிய விவசாய விளைபொருள்களுக்கு தமிழ்நாடு அரசின் குறைந்தபட்ச ஆதார விலை. மஞ்சள், வெங்காயம், மரவள்ளிக்கிழங்கு, வாழை, சிறுதானியங்கள் உள்ளிட்ட முக்கிய விளை பொருட்களுக்கு தமிழக அரசின் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.
34. வேளாண் விளைபொருள் இலாபகரமான விற்பனைக்கு வழிகாட்டும் அமைப்பு வேளாண் விளைபொருள் உற்பத்தி மற்றும் இலாபகரமான விவசாய விற்பனை நெறிமுறை மற்றும் வழிகாட்டும் அமைப்பு ஏற்படுத்தித் தர உறுதியளிக்கப் படுகிறது.
35. வாழை நூலில் இருந்து ஆடை செய்யும் தொழிற்கூடங்கள் வாழை விவசாயிகளின் வாழ்வு சிறக்க வாழையிலிருந்து நூல் எடுத்து ஆடை நெய்யும் தொழிற்கூடங்கள் அமைக்கப்படும். இதனால் கிராமப்புற வேலை வாய்ப்புகள் பெருகும்.
36. பனை மரம் வளர்ப்பு அனைத்து நீர்நிலைகளின் கரைகளிலும், குறிப்பாக குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட நீர் நிலைகளின் கரைகளிலும், அரசு புறம்போக்கு நிலங்களிலும், கடலோர மாவட்ட சாலை ஓரங்களிலும் தமிழ்நாட்டின் சின்னமான பனை மரங்கள் வளர்க்கப்படும்.
37. ஒருங்கிணைந்த குளிர்சாதனக் கிடங்கு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த குளிர்சாதனக் கிடங்கு மற்றும் பதப்படுத்தப்படும் கூடங்கள் அமைக்கப்படும். இக்கூடங்களை கண்டறிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டு 10 கிலோ மீட்டர் தொலைவிற்குள் விவசாயிகள் கிடங்கை சென்றடையும் வகையில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
38. சூரிய சக்தி மின் மோட்டார் மானியம் தொடரும். சூரிய சக்தியின் மூலம் இயங்கும் மின் மோட்டார் பம்புகளின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும். மேலும் தற்போது வழங்கப்பட்டு வரும் அதற்கான மானியம் உயர்த்தி வழங்கப்படும்.
39. மாநில வேளாண்மை ஆணையம் உருவாக்கப்படும். வேளாண் துறையில் உள்ள சவால்களை ஆராய்ந்து, அவற்றை எதிர்கொள்ள தேவையான உத்திகளையும், திட்டங்களையும் உடனுக்குடன் தீட்டி, வேளாண் தொழிலை மேலும், இலாபகரமாக ஆக்கி, வேளாண் பெருமக்களின் நலன் காக்க மாநில வேளாண்மை ஆணையம் அமைக்கப்படும்.
40. நெல் மற்றும் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை அ கோதுமைக்கு வழங்கி வரும் ஆதார விலைக்கு இணையாக நெல்லுக்கும் உயர்த்தி தரவேண்டும் என்று மைய அரசை வலியுறுத்துவோம். ஆ நெல்லுக்கான உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கு வழங்கி வரும் ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும். இ கரும்பு உற்பத்திக்கு ஆகும் செலவை கவனத்தில் கொண்டு, கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, கரும்புக்கு தற்போது வழங்கி வரும் ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்.
41. நம்மாழ்வார் அவர்கள் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் வேளாண் அறிஞர் இயற்கை விவசாயி நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்படும்.
42. இடுபொருள் மானியம். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்படும்.
43. பண்ணை இயந்திரமயமாக்கல் குறைந்த வாடகையில் உள்ளூரிலேயே பண்ணை இயந்திரங்கள் கூடுதலாக கிடைக்கும் வகையில், பண்ணை இயந்திரமயமாக்கல் ஊக்கப்படுத்தப்படும்.
44. வேளாண் இயந்திரங்களுக்கான தொழிற்கூடங்கள். வேளாண் இயந்திரங்களுக்கான தொழிற்கூடங்கள் டெல்டா மாவட்டங்களில் பிரத்யேகமாக அமைக்கப்படும்.
45. முதல்வர் - விவசாயி வங்கித்திட்டம். வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை விவசாயிகள் எளிதில் பெற்று பயன்படுத்த வசதியாக முதல்வர்-விவசாயி வங்கி திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் 309 தாலுகாக்களிலும் இந்த வங்கி தொடங்கப்படும். இந்த வங்கியின் மூலம் விவசாயத்திற்கு தேவையான டிராக்டர்கள், புல்டோசர்கள், நெல் அறுவடை இயந்திரங்கள், வைக்கோல் கட்டும் இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து வகை உபகரணங்களும் வாடகை முறையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
46. நீலகிரி மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் பதப்படுத்தும் நிலையம் உருவாக்கப்படும். நீலகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் காய்கறி, பழங்கள், பதப்படுத்தும் நிலையம் ஒன்று அங்கு அமைக்கப்படும்.
47. வறண்ட நில விவசாயி ஆராய்ச்சிக்கூடம். தமிழ்நாட்டில் வறண்ட நிலத்தில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இஸ்ரேல் நாட்டு பல்கலைக் கழகங்களுடன் இணைந்து வறண்ட நில விவசாய ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்தப்படும்.
48. தென்னை விவசாயிகளின் நலன். அ. தென்னையிலிருந்து இறக்கப்படும் நீரா பானத்தை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தி, அதனை நாடுமுழுவதும் விற்பனை செய்தும் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கிட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஆ. தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில், தென்னை உற்பத்தியாளர் சங்கங்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்தப்பட்டு தென்னை விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்படும் இ. கொப்பறை தேங்காய் விலை குறையும் போதெல்லாம் தென்னை விவசாயிகளிடம் இருந்து கொப்பறையை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
49. கரிசல் மண் - களிமண் - தூர்வை மண் எடுக்க தடையில்லா அனுமதி. வழக்குகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் போன்ற எவ்வித தடையும் இல்லாமல், கரிசல் மண், களிமண், தூர்வை மண் (மணல் நீங்கலாக) தடையின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.
50. கால்நடை வாரியம் கால்நடைகளின் நலன், உற்பத்தி, சந்தைப்படுத்துதல் போன்ற பணிகளைச் சிறப்பாகச் செயல்படுத்தவும், அதன் மூலம், கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தி, விவசாயிகளின் வாழ்வு சிறக்க, "கால்நடை வாரியம்" அமைக்கப்படும்.
51. புதிய கால்நடை மருத்துவக்கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் தமிழ்நாட்டில் மேலும் ஐந்து புதிய கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் உருவாக்கப்படும்.
52. தென் தமிழ்நாட்டில் உலகத் தரத்திலான கால்நடைப் பூங்கா தென் தமிழ்நாட்டில் உலகத் தரத்திலான கால்நடைப் பூங்கா ஒன்று அமைக்கப்படும்.
53. பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அத்தகைய பாதிப்பிலிருந்து மக்களுக்கு உதவிட பெட்ரோல், டீசல் விலையினை குறைத்திட மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கணிசமாக குறைத்திட மைய அரசை அ.இ. அண்ணா தி.மு.கழகம் வலியுறுத்தும்.
54. மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500-லிருந்து ரூ.2500/- உதவித்தொகை உயர்வு மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார உதவித் தொகை ரூ.1500/-லிருந்து ரூ.2500/-ஆக உயர்த்தப்படும்.
55. 100 நாள் வேலை - 150 நாட்களாக உயர்வு "100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம்" "150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக" விரிவாக்கப்படும். பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட மைய அரசை வலியுறுத்துவோம்.
56. அம்மா பசுமை வீடு திட்ட மானியம் ரூ.3.40 இலட்சமாக உயர்வு அம்மா பசுமை வீடு திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் மானியம் ரூ.2,43,000/-லிருந்து ரூ.3,40,000/- ஆக உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
57. பொங்கல் பண்டிகைக்கு உதவித்தொகை தொடரும். தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை, மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கள் பரிசுப் பொருட்களுடன் உதவித்தொகையும் தொடர்ந்து வழங்கப்படும்.
58. மாதந்தோறும் மின் பயனீட்டு கணக்கீடு இரண்டுமாத கணக்கீட்டிற்கு பதிலாக, மாதந்தோறும் மின் பயனீட்டு கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.
59. 9-10-11-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சத்துணவு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் விரிவுப் படுத்தப்படும்.
60. தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு தனியார் பங்களிப்புடன் காலை சிற்றுண்டி விரிவாக்கம். தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு என தொடங்கப்பட்ட தனியார் பங்களிப்புடன் கூடிய காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், விரிவுப்படுத்தி செயல்படுத்தப்படும்.
61. அரசு பள்ளி சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி அரசு பள்ளியில் படிக்கும் சுயநிதி வகுப்பு மாணாக்கர்களுக்கும் மடிக்கணினி சக மாணவர்களைப் போல வழங்கப்படும்.
62. அங்கன்வாடி குழந்தைகளுக்கும், அனைத்து நிலை பள்ளி மாணாக்கர்களுக்கும் தினந்தோறும் 200 மி.லி. பால் / பால் பவுடர் அங்கன்வாடி குழந்தைகளுக்கும், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என அனைத்து நிலை மாணாக்கர்களுக்கும் தினந்தோறும் 200 மி.லி பால் / பால் பவுடர் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
63. பால் உற்பத்தியாளர் - நுகர்வோர் நலன் அ. பால் உற்பத்தியாளர்களின் உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை ரூ.2/- உயர்த்தி வழங்கப்படும். ஆ. நுகர்வோர்களின் நலன் கருதி பால் விற்பனை விலை ரூ.2/- குறைக்கப்படும்.
64. அம்மா மினி கிளினிக்குக்களுக்கு நவீன மருத்துவ வசதியுடன் கூடிய புதிய கட்டிடங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிந்தனையில் உதித்த அனைவராலும் போற்றப்படுகின்ற அண்மையில் தமிழ்நாடு முழுவாதும் துவக்கப்பட்ட சுமார் 2,000 அம்மா மினி கிளினிக்குக்களுக்கு நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படும். இது தமிழ்நாடு அரசின் சிறப்புத்திட்டமாக செயல்படுத்தப்படும்.
65. புற்றுநோய் சிகிச்சைக்கு முக்கியத்துவம்.
அ. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு டாக்டர். சாந்தா நினைவு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்படும். ஆ. புற்றுநோய் சிகிச்சைக்கு என டுiநேயச ஹஉஉநடநசயவடிச வசதிகள் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்படும். இ. அரசு மற்றும் தனியார் கூட்டுப் பங்களிப்புடன் அனைத்து மாவட்டங்களிலும் புற்று நோய் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும்.
இங்கு ரேடியேசன் மற்றும் கீமோதெரப்பி சிகிச்சைகள் வழங்கப்படும். ஈ. அம்மா தங்க திட்டம் கீழ் நடைபெறும் முழு உடல் பரிசோதனை மற்றும் புற்று நோய் சிகிச்சை அனைத்து மாவட்ட மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் உ. தற்போது குழந்தையில்லாதோர் தனியாரிடம் மிகுந்த செலவில் கருத்தரிப்பு செய்ய வேண்டிய நிலையில், ஏழை மற்றும் எளியோர் பயன்பெறும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரிப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்படும்.
66. மகப்பேறு விடுப்பு, ஒரு வருடமாக உயர்வு பெண் அரசு ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தை வளர்ப்பை கருத்தில் கொண்டு, பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மகப்பேறு விடுப்பு 9 மாத காலத்திலிருந்து ஒரு வருடமாக உயர்த்தப்படும்.
67. மகப்பேறு உதவித்தொகை அதிகரிப்பு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 18,000 ரூபாயிலிருந்து 21,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
68. பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட நிதியுதவி உயர்வு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின், வைப்பு நிதியாக வழங்கப்பட்டு வந்த முதலீட்டுத்தொகை 50,000 ரூபாயிலிருந்து 70,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
69. பெண்களின் பாதுகாப்புக்கு அனைத்து நகரங்களிலும் காவலன் செயலி எந்த நேரத்திலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னையில் செயல்பட்டு வரும் காவலன் செயலி மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
70. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தேவையான கடனுதவி மற்றும் மகளிர் வங்கி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நியாயமான வட்டியில் கடன் வழங்க தனியாக மகளிர் வங்கி உருவாக்கப்பட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தேவையான அளவு கடனுதவி வழங்கப்படும்.
71. சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருளை விற்க மின்னணு வணிக முறை சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்துவதற்கு மின்னணு வணிக முறை ஊக்குவிக்குப்படும்.
72. அம்மா பேங்கிங் கார்டு திட்டம் எழை, எளிய நடுத்தர மக்கள் அனைவரும் நிதிச் சேவைகளை பயன்டுத்தும் வகையில் வழங்கப்படும். இத்திட்டமானது, அதிக வட்டிக்கு தனியாரிடம் பெற்றுள்ள கடன்களை சுலபத்தவணையில் திருப்பி செலுத்தும் வகையில், அவர்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். இத்திட்டம் வங்கிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
73. அனைத்து நகரங்களிலும் அம்மா ரோந்து வாகனங்கள். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட அம்மா ரோந்து வாகனங்கள் மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
74. இரண்டாம் கட்ட நகரங்களில் கண்காணிப்பு உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் கண்காணிப்பில் சென்னை முதலிடம் வகிக்கிறது. சட்டம் ஒழுங்கை மேலும் மேம்படுத்தும் விதமாக, இரண்டாம் கட்ட நகரங்களிலும் உலகத்தரத்திலான கட்டமைப்பு உருவாக்கப்படும்.
75. கட்டணமில்லா வாகன பயிற்சி- ஓட்டுநர் உரிமம் 18 வயது நிரம்பியோர் அனைவருக்கும் கட்டணமில்லா இரு சக்கர வாகன பயிற்சியுடன் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
76. ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.25,000/- மானியத்தில் எம்.ஜி.ஆர் பசுமை ஆட்டோ ஆட்டோ ஓட்டுநர் உரிமம் பெற்ற ஆண், பெண் ஓட்டுநர்களின் வளமான வாழ்விற்கு ரூ.25,000/- மானிய விலையில் "எம்.ஜி.ஆர் பசுமை ஆட்டோ " வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
77. மதுபானக் கடைகள் படிப்படியாக மூடுதல் தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை தீவிரமாக அமல்படுத்தும் நோக்கில் படிப்படியாக மதுபானக் கடைகள் மூடப்படும்.
78. கூட்டுறவு வீட்டு வசதி சங்க கடனை திருப்பி செலுத்துபவர்களுக்கு வட்டி, அபராத வட்டி தள்ளுபடி கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மூலம் கடன் பெற்று வீடுகட்டியவர்களின் நிலுவைக்கடன் மற்றும் அடமானக் கடனை என்ற அடிப்படையில் கடன் தொகையை செலுத்துபவர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
79. மதுரை விமான நிலையத்திற்கு தேசியத்தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டுதல். மதுரை விமான நிலையத்திற்கு தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட உரிய நடவடிக்கைகள் எடுக்க மைய அரசை அதிமுக வலியுறுத்தும்.
80. மைய அரசு புதியதாக அறிமுகப்படுத்தியிருக்கும் குடியுரிமைத் திருத்த தடைச்சட்டத்தை கைவிட வலியுறுத்தல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை அதிமுக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்தும்.
81. கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவரல் பொதுப்பட்டியலில் உள்ள கல்வியினை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர மத்திய அரசினை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
82. அவசியமான இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குதல் அவசியமான இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
83. கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் பெயரில் இஸ்லாமியப் பல்கலைக்கழகம். சிறுபான்மை மக்களின் பெருவாழ்வுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக சென்னை காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரால் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
84. திருக்குர்ஆனை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்த "அல்லாமா ஆ. கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் பெயரில் இஸ்லாமிய இலக்கிய கருவூலம்" உருவாக்கப்படும். திருக்குர்ஆனை தமிழில் மொழிபெயர்த்து தமிழ் முஸ்லிம் சமூதாயத்திற்கான இஸ்லாமிய அறிவுசார் கருத்துக்களை எளிமையாக வழங்கிய அல்லாமா ஆ. கா. அப்துல் ஹமீது பாகவி நினைவைப் போற்றும் விதமாக, இஸ்லாமிய அறிஞர் அல்லாமா ஆ. கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களின் பெரும் பங்களிப்பை நினைவு கூறும் வகையில், தமிழக அரசின் சார்பில் "அல்லாமா ஆ. கா. அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய இலக்கிய கருவூலம்" ஒன்று உருவாக்கப்படும். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் அதற்கென்று தனி உள்அரங்கத்தோடு கூடிய நூலகக்கட்டிடம் உருவாக்கப்படும்.
85. தமிழ் அறிஞர் சீகன் பால்கு அவர்கள் வாழ்ந்த இல்லம் அரசுடமை ஜெர்மானிய தமிழ் அறிஞர் சீகன் பால்கு அவர்களின் நினைவாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அவர் வாழ்ந்த இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டு, அங்கு "பொது நூலகம்" அமைக்கப்படும்.
86. இந்து ஆன்மீகப் பயணச்சலுகைக் கட்டணம் உயர்த்தி வழங்கப்படும். இந்து ஆன்மீகப் பயணம் மேற்கொள்வோருக்கு, கயிலை மலை - மானசரோவர், நேபாள நாட்டின் - முக்திநாத், ஹரித்துவார், ஜம்மு-காத்ரா வைஷ்ணவ தேவி திருக்கோயில் ஆகிய ஆலயங்களுக்கு ஆன்மீகப் பயணம் சென்று வர பயணச்சலுகைக் கட்டணம் உயர்த்தி வழங்கப்படும்.
87. ஹஜ் பயணத்திற்கு செல்ல வழங்கப்படும் தொகை உயர்த்துதல் இஸ்லாமியர்கள் தற்போது ஹஜ் பயணத்திற்கு செல்ல அரசால் வழங்கப்படுகிற மானியம் ரூபாய் 6 கோடியை உயர்த்தி ரூபாய் 10 கோடியாக வழங்கப்படும்.
88. ஜெருசலேம் புனித பயணத்திற்கு சலுகை ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளும் 1000 பேருக்கு ரூ.37,000/- அரசு வழங்கும் திட்டத்தில் யாத்திரிகர்களுக்கு முழு கட்டணத்தையும் அரசே செலுத்தும்.
89. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பணிபுரியும் அடிப்படைப் பணியாளர்களுக்கு நலவாரியம். அனைத்து தேவாலயங்களிலும், பணியாற்றும் அடிப்படைப் பணியாளர்களான ஓசியார், கோயில்பிள்ளை, உபதேசியார் போன்றோரின் நலன் காக்க நலவாரியம் அமைக்கப்படும்.
90. சிறுபான்மையினருக்கு மயான இடம் விலையில்லாமல் வழங்குதல் சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் இயற்கை எய்துகிறபோது அவர்களுடைய உடலை அடக்கம் செய்யப் போதிய இடவசதி இல்லாத நிலை இருந்து வருகிறது. அவர்களுக்கு, அரசு தேவையான இடங்களை கண்டறிந்து போதுமான இடத்தை விலையில்லாமல் அளிக்கும்.
92. கிராமஊர்க்கோயில் பூசாரிகளுக்கு ஊக்க ஊதியம் கிராமஊர்க்கோயில்களில் பூஜை செய்யும் கோயில் பூசாரிகளுக்கு மாத ஊதியமாக ரூ.2,000/- வழங்கப்படும். மேலும், வருமானம் இல்லாத அனைத்து மத கோயில்களுக்கும் இலவச ஒரு விளக்கு திட்டம் அமல்படுத்தப்படும்.
93. திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம் விரிவாக்கம். திருக்கோயில்களில் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் அன்னதானத் திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படும்.
94. தூய்மைப் பணியாளர் ஊதியம் ரூ.6000/- ஆக உயர்வு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் மாதாந்திர ஊதியமாக ரூ.6,000/- வழங்கப்படும்.
95. மதிப்புமிகு முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் அனைத்து மாவட்டத்திலும் "மதிப்புமிகு முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள்" அமைக்கப்படும்.
96. ஆதிதிராவிடர் தாட்கோ-கடன் தள்ளுபடி தாட்கோ மூலம் ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்ட பொருளாதார மேம்பாட்டுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
97. ஆதிதிராவிடருக்கு புதிய தொகுப்பு வீடுகள் ஆதிதிராவிடர் மக்களின் பழுதடைந்த தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிய தொகுப்பு வீடுகள் அரசால் கட்டித்தரப்படும்.
98. மதம் மாறிய ஆதிதிராவிடருக்கு பழைய சலுகையே தொடரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மக்கள் மதம் மாறினால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு அளிக்கும் அனைத்து சலுகைகளையும் தொடர்ந்து அவர்கள் பெற்றிட அ.இ. அண்ணா தி.மு.கழகம் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும்.
99. பழங்குடியினர் பட்டியலில் விடுப்பட்ட இனத்தவரை சேர்த்தல். தமிழ்நாட்டில் படுகர், குருவிக்காரர், லம்பாடி, வேட்டைக்காரர், நரிக்குறவர் போன்ற இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஏற்கனவே மாண்புமிகு அம்மா அவர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கையை நிறைவேற்ற அதிமுக தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும்.
100. தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் ஆணையம் மாநில அளவிலான "தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம்" விரைவில் அமைக்கப்படும்.
101. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிறப்புக்கூறுகள் திட்ட நிதி தனிச்சட்டம் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான சிறப்புக் கூறுகள் திட்ட நிதி, அவர்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில், சிறப்பு தனிச் சட்டம் இயற்றப்படும்.
102. புதிய நிலமெடுப்பு சட்டத்தின்படி உடனடி உரிய இழப்பீடு. புதிய நிலமெடுப்பு சட்டத்தின் படி, உரிய இழப்பீடுகள் அளித்த பின்னரே, வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்த அனுமதிக்கப்படும்.
103. கச்சத்தீவை மீட்க நடவடிக்கை முந்தைய திமுக ஆட்சியில் தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்க மாண்புமிகு அம்மா அவர்களால் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தொடர் சட்டப் போராட்டம் நடத்தி கச்சத்தீவை மீட்போம்.
104. மீனவர் நலன்கள் ( 104 முதல் 118 வரை) உறுதித்தன்மை இல்லாத வீடுகளுக்கு பதிலாக, ஏழை மீனவர்களுக்கு விலையில்லா வீடுகள் கட்டித் தரப்படும்.
105. விசைப்படகு மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலையிலான வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரி எண்ணெய் ஆண்டொன்றுக்கு 18,000- லிருந்து 20,000 லிட்டர் ஆக உயர்த்தி வழங்கப்படும்.
106. நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையிலான வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரி எண்ணெய் ஆண்டொன்றுக்கு 4,000லிட்டரில் இருந்து 5,000லிட்டர் ஆக உயர்த்தி வழங்கப்படும்.
107. நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஆண்டொன்றுக்கு 3,400 லிட்டரிலிருந்து 4,500லிட்டர் ஆக உயர்த்தி வழங்கப்படும்.
108. மீன்பிடி தடை கால நிவாரணமாக மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5,000/-லிருந்து ரூ.7,500/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.
109. மீனவர் மற்றும் மீனவ மகளிருக்கான சேமிப்பு மற்றும் நிவாரணமாக வழங்கப்படும் தொகை ரூ.4,500/-லிருந்து ரூ. 5,500/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.
110. மீனவர்கள் கடன் உதவி பெற ஏதுவாக கூட்டுறவு மீன்வள வங்கி ஏற்படுத்தப்படும்.
111. விபத்தில் இறந்த மீனவர்களுக்கு தமிழ்நாடு மீனவர் நல வாரிய நிதியிலிருந்து வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.2,00,000/-லிருந்து ரூ.5,00,000/-இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
112. கடற்பாசி வளர்ப்பு மற்றும் கடல் மீன்வளர்ப்பு, உள்நாட்டு மீன்வளர்ப்பு ஆகியவற்றை மேற்கொள்ள விரிவான கொள்கை உருவாக்கப்படும்.
113. விவசாயத்திற்கு பயன்படாத கடலோர நிலங்களை கண்டறிந்து அவற்றை கடலோர மீன் வளர்ப்பிற்கு பயன்படும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும்.
114. சென்னையில் உலகத் தரம் வாய்ந்த மொத்த மீன் விற்பனைச் சந்தை ஒன்று ஏற்படுத்தப்படும்.
115. இராமநாதபுரத்திலிருந்து கன்னியாகுமரி வரையிலான பகுதியில் கடல்பொருள் ஏற்றுமதி மண்டலம் உருவாக்கப்படும்.
116. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு, செங்கல்பட்டு மாவட்டம் கோவளம், கொக்கிலமேடு, கடலூர், நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான்பேட்டை, தூத்துக்குடி மாவட்டம் உவரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியில் மீன்பிடித் துறைமுகங்கள் / மீன்பிடி இறங்குதளங்கள் கட்டப்படும். குளச்சல் மீன்பிடித் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படும்.
117. உள்நாட்டு மீனவர்களின் நலன் கருதியும், விவசாயிகளின் நலன் கருதியும் தேவையான இடங்களில் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படும்.
118. கடல் அரிப்பை தடுக்க தடுப்புச்சுவர் பருவகால மாற்றத்தாலும், இயற்கை சீற்றத்தாலும் கடற்கரை ஓர நிலப்பரப்பு கடல் அரிப்பால் குறைந்து கொண்டே வருகிறது. எனவே, மீனவர்கள் குடியிருப்பை காப்பாற்றவும், மீன்பிடித் தொழிலுக்கான இடத்தை காப்பாற்றவும், மொத்தத்தில் கடலோர நிலப்பரப்பை காப்பாற்றவும் கருங்கல் தடுப்புச்சுவர் கடலோரத்தில் அமைக்கப்படும்
119. நெசவாளர்களுக்கு ரூபாய் ஒரு இலட்சம் வரை கடன் தள்ளுபடி கைத்தறி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கு, அவர்கள் பெற்ற கடன் தொகையில் ரூபாய் ஒரு இலட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்.
120. விசைத்தறிகளுக்கு மின்சாரம் 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்டாக உயர்த்தப்படும். விசைத்தறிகளுக்கு விலையில்லா மின்சாரம் 750 யூனிட்டுக்கு பதிலாக 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்.
121. நெசவாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.5,000/- கைத்தறி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் ரூ. 5,000/- வழங்கப்படும்.
122. நூல்விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை பருவகால மாற்றத்தால் தொடர்ந்து நூல் விலை உயர்வை ஜவுளித்துறை சந்தித்து வருகிறது. இதனால், தமிழ்நாடு பஞ்சு கொள்முதல் கழகம் ஏற்படுத்தப்பட்டு தேவையான பஞ்சினை பஞ்சு உற்பத்தி காலத்திலேயே கொள்முதல் செய்து இருப்பு வைப்பதன் மூலம் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
123. கைத்தறிக்கு வரி விலக்கு கைத்தறி ஆடைகளுக்கும் வரி விலக்கு வழங்க மைய அரசை வற்புறுத்துவோம்.
124. நெசவாளர்களுக்கு நியாய விலையில் நூல் உயர்ந்து வரும் நூல் விலையை கட்டுப்படுத்தி - நெசவாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் நூல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
125. நெசவாளர் நல வாரியம் கைத்தறி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்.
126. நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ. 10,000/- வட்டியில்லா சுழல் நிதிக் கடன் நடைபாதை வியாபாரிகளுக்கு உத்திரவாதமின்றி ரூ.10,000/- "வட்டியில்லாமல் வழங்கப்படும் சுழல் நிதிக் கடன் " திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
127. அமைப்புச்சாரா கூலித்தொழிலாளர்களுக்கு ரூ. 10,000/- வட்டியில்லா நுண் கடன் அனைத்து அமைப்புச்சாரா கூலித் தொழிலாளர்களுக்கும் வட்டியில்லா நுண்கடன் ரூ. 10,000/- வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
128. வணிகர் நல நடவடிக்கை அனைத்து வியாபாரிகளையும் வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து, அவர்களின் நலன் காக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.
129. வியாபாரிகளுக்கு தொழில் பாதுகாப்பு வணிகர் நலனை கருத்தில் கொண்டு, வியாபாரிகள் எவ்வித இடையூறுகளுக்கும் ஆளாகாமல் வியாபரம் செய்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
130. அரசு பணிகளுக்கான தேர்வு (Open Competitive Public Exam) TNPSC / TRB / MRB ) மூலமே தொடரும் அரசு பணிகளிலும், உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளிலும் படித்த இளைஞர்களை பணியமர்த்துவதில், பொது போட்டித் தேர்வு (Open Competitive Public Exam) TNPSC / TRB / MRB) ஆகிய தேர்வு மூலம் அவர்கள் பெறும் தகுதியின் அடிப்படையில் பாரபட்சமின்றி பணியமர்த்தப்படும் செயல்முறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.
131. வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை இரட்டிப்பு படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கான வாழ்வாதார ஊக்கத் தொகை இரட்டிப்பாக உயர்த்தி வழங்கப்படும்.
132. அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களுக்கு கல்வித்தகுதிக்கேற்ப அரசுப்பணிகளில் வேலை வாய்ப்பு முன்னுரிமை அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு மையங்கள் ஆகியவற்றில் பணியாற்றிவரும் பணியாளர்கள் மற்றும் அமைப்பாளர்களின் கல்வித்தகுதிக்கேற்ப அனைத்து அரசுப்பணிகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
133. பெண்களுக்கான அரசு வேலை வாய்ப்பு அரசு வேலைகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
134. இளைஞர்களுக்கு குறைந்த வட்டியில் மானியத்துடன் மென்கடன் ஒற்றை சாளர முறையில் ((Single Window System) குறுகிய காலத்தில் அனுமதி தமிழக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இலாபகரமான புதிய தொழில்கள் துவங்க, குறைந்த வட்டியில் மானியத்துடன் மென்கடன் (Start-Up Loan) வழங்கும் திட்டம் தொடங்கப்படும். தொழில் தொடங்க விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஒற்றை சாளர முறையில் ((Single Window System) 30 தினங்களில் தொழில் தொடங்க ஆணை வழங்கப்படும்.
135. உள்ளூர் மக்களுக்கு தனியார் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை தமிழ்நாட்டில் தனியார் துறை தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.
136. விடுபட்ட ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்தவர்கள், அரசு ஆசியர் பயிற்சிப் பள்ளியில் மீண்டும் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவர்களில், விடுபட்டோருக்கு ஆசிரியர் பணி வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும்.
137. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள நிர்ணயம் தனியார் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு கட்டண வசூல் தொகையை அரசு நிர்ணயம் செய்கிறது. அதுபோல அப்பள்ளிகளில் பணி செய்யும் ஆசிரியர்களுக்கும் ஊதியத் தொகையை அரசே நிர்ணயம் செய்யும்.
138. மாவட்டங்கள் தோறும் சிறு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் (Mini IT Park) ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர்களின் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப பூங்கா (Mini IT Park) உருவாக்கப்படும்.
139. அமைப்புச்சாரா ஓட்டுநர்களுக்கு விபத்து காப்பீடு அனைத்து அமைப்புச் சாரா வாகன ஓட்டுநர்களுக்கும் விலையில்லா விபத்துக் காப்பீட்டுத் திட்டம் துவங்கப்படும்.
140. மோட்டார் வாகன வணிக வளாகம் சென்னை புறநகர் பகுதியில் அதிநவீன """"ஒருங்கிணைந்த மோட்டார் வாகன வணிக வளாகம்"" ஏற்படுத்தப்படும்.
141. அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்பேட்டை நிறுவுதல் தொழிற்பேட்டை இல்லாத மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை நிறுவப்படும்.
142. சிறுதொழில் நிறுவனங்களுக்கு மின் சலுகை சிறு தொழில் நிறுவனங்களுக்கு, தற்போது இருக்கும் 200 குதிரை மின்சக்தி திறன் 250 குதிரை மின்சக்தி திறனாக உயர்த்தப்படும்.
143. தொழில்துறைக்கு முன்னுரிமை
அ. வெற்றிகரமான 2015 மற்றும் 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை தொடர்ந்து 3வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2022ஆம் ஆண்டு நடத்தப்படும். ஆ. சென்னையில் மருந்துப் பூங்கா ((Pharmaceutical Park) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இ. தமிழ்நாட்டில் ராணுவத் தளவாடங்கள் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஈ. நாட்டிலேயே சுற்று சூழலுக்கு மாசு ஏற்படாத குறைந்த செலவிலான பொது போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 5000 மின்சார பேருந்துகளும், அரசுக்கு சொந்தமான 5000 மினி பேருந்துகளும் மாநிலத்தின் பொது போக்குவரத்துடன் இணைக்கப்படும்.
144. உப்பளத்தொழிலுக்கு மழைக்கால நிவாரணம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உப்பளத் தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணமாக ரூ.5,000/- வழங்கப்படும்.
145. அ. வெள்ளி ஆபரண தொழில் நல வாரியம் வெள்ளிக் கொலுசு உட்பட பல்வகை ஆபரணங்கள் மற்றும் அளணிகலன்கள் செய்யும் பொற்கொல்லர்கள் நலன் காக்க "வெள்ளிக் கொலுசு ஆபரண தொழில் நல வாரியம்" அமைக்கப்படும். ஆ. வெள்ளி நகை தொழிலுக்கு வரி விலக்கு வெள்ளி கொலுசு உட்பட, வெள்ளி நகைத் தொழிலுக்கு வரியை நீக்கிட மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
146. மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மண்பாண்டத் தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணமாக ரூ.5,000/- வழங்கப்படும்.
147. சுற்றுச்சாலைகள் (Ring Roads) அமைத்தல் அனைத்து மாநகராட்சிகளிலும் சுற்றுச்சாலைகள் அமைக்கப்படும்.
148. சென்னை, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அ கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆ. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை ஏடுக்கப்படும். இ. சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும்.
149. நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்து பன்னாட்டு கடல் வாணிபத்தில் கோலோச்சி இருந்த சோழநாட்டு துறைமுகமான நாகப்பட்டினத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாட்டிற்கு பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் இயங்கி வந்தது. இந்நிலையில் 1984ஆம் ஆண்டிற்கு பிறகு பயணிகள் சேவை நிறுத்தப்பட்டது. மீண்டும் அத்துறைமுகத்தை மேம்படுத்தி, கப்பல் போக்குவரத்தை தொடங்கிட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
150. கோதாவரி-காவிரி இணைப்பு துரித நடவடிக்கைகள் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை துரிதமாக செயல்படுத்திட விரைவு நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் காவிரி வற்றாத ஜீவநதியாக மாறும்.
151. ஆணைமலையாறு-நல்லாறு, பாண்டியாறு-புன்னம்புழா அணைக்கட்டுத் திட்டங்கள் நிறைவேற்றம். பரம்பிக்குளம்-ஆழியார் அணைக்கட்டுத் திட்டத்தில் ஆணைமலையாறு-நல்லாறு திட்டத்தையும் மற்றும் பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தையும் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
152. முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கிவைக்கும் பணி துவக்கம். முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி அளவுக்கு தண்ணீர் தேக்கி வைக்கும் பணி உடனடியாகத் துவங்கப்படும்.
153. நீர் வளங்கள்
அ. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடிகே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசால் துவக்கப்பட்ட நீர்பாசனக் கால்வாய் திட்டங்கள் ஆன அத்திகடவு-அவிநாசி, சரபங்கா, தாமிரபரணி-கருமேனியாறு, காவிரி-குண்டாறு, காவிரி உப வடிநில புனரமைப்பு, கல்லணைக் கால்வாய் புனரமைப்பு, கீழ்பவானிக் கால்வாய் புனரமைப்பு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எண்ணேகோல், ஜெர்தலாவ், அளியாளம் உள்ளிட்ட நீர் பாசனக் கால்வாய் திட்டங்கள் அனைத்தும் விரைந்து நிறைவேற்றப்படும்.
ஆ. மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வு மேற்கொண்டு நீர் மேலாண்மையை உறுதிப்படுத்துகிற வகையில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து, நீர்பாசன வசதிகளையும் குடிநீர் ஆதாரத்தை பெருக்கவும், தேவையான இடங்களில் அணைக்கட்டுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆ. தடுப்பணைகள் மாநிலம் முழுவதும் உள்ள நதி, ஆறு, ஓடை போன்றவற்றில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் அமைத்து நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.
இ. காவிரி நதி மற்றும் அதன் உப நதிகளில் ஏற்படும் மாசுகளை களைய "நடந்தாய் வாழி காவேரி" திட்டம் செயல்படுத்தப்படும்.
ஈ. சென்னை வெள்ள தடுப்புப்பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படும் உ. தென் தமிழகத்தின் நீர் மேலாண்மையை முன்னெடுத்துச் செல்லும் விதமாக தாமிரபரணி ஆற்றின் உபநீரை தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தின் வறண்ட பகுதிகளுக்கு எடுத்துச்சென்று பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும். ஊ. தாமிரபரணி - வைப்பாறு இணைப்பு திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும்
எ. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின்ல் அமைந்துள்ள அனைத்து குளங்களும் புனரமைக்கப்படும். இதன்மூலம் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு கோவில்களின் பண்டைய தன்மை திரும்ப கொண்டுவரப்படும். ஏ. தமிழகத்தின் அனைத்து ஆறுகளும் இணைக்கப்பட்டு 5 இலட்சம் ஏக்கர் பரப்பளவிலான விலை நிலங்கள் பாசன வசதி பெற வழிவகை செய்யப்படும். நீர் மேலாண்மை அ. மாண்புமிகு அம்மா அவர்களின் மழைநீர் சேகரிப்பு திட்டமும், அரசின் நீர் மேலாண்மை திட்டங்களும், மக்கள் இயக்கமாக முன்னெடுத்து சென்று தமிழ்நாட்டை தொடர்ந்து, நீர் மிகை மாநிலமாக தக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆ. பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு தற்போது 42 இலட்சம் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள அனைத்து வீடுகளுக்கும் 2025 ஆம் ஆண்டுக்குள் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும். இ. தேவைப்படும் இடங்களில் புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள், புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டங்கள் ஆகியவை நிறைவேற்றப்படும். ஈ. அனைத்து மாநகராட்சிகளிலும், நீர் மறுசுழற்சி, கழிவுநீர் சுத்திகரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
154. கடல் சுற்றுலா பூங்காக்கள் சென்னை மற்றும் இராமேஸ்வரம்-தனுஷ்கோடி ஆகிய இடங்களில் உலகத்தரத்தில் கடல் சுற்றுலா பூங்காக்கள் அமைக்கப்படும்.
155. சென்னையில் உச்சநீதி மன்ற கிளை மாண்பமை உச்ச நீதிமன்ற கிளையினை சென்னையில் நிறுவிட மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
156. வழக்கறிஞர் சேம நல நிதி உயர்வு தமிழ்நாடு வழக்கறிஞர்களின் நலன் மற்றும் அவர்தம் குடும்பப் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, தற்போது வழங்கப்பட்டு வரும் வழக்கறிஞர் சேமநல நிதியினை ரூ.7.00 இலட்சத்திலிருந்து ரூ.10.00 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
157. போயர் சமுதாய மக்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும். ஏழ்மையிலும், வறுமையிலும் தமிழகத்தில் வாழும் போயர் மக்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்.
158. திருவுருவச் சிலைகள்-மணிமண்டபங்கள் அமைத்தல் அ. சென்னை கiவாணர் அரங்கத்தின் வெளியே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு முழு திருவுருவச் சிலை நிறுவப்படும். ஆ. நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களுக்கு முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.
இ. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் ஈ. சொல் ஆராய்ச்சி வல்லுநர் ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.
உ. சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்களுக்கு முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் ஊ. கீழ்பவானி பாசனத் தந்தை தியாகி அய்யா திரு. ஈஸ்வரன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் நினைவுத்தூண் மற்றும் மணி மண்டபம் அமைக்கப்படும் எ. உப்பு சத்தியாக்கிரக தியாகி சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவர்களுக்கு முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.
ஏ தீரர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும். ஐ. மதுரையில் தீரன் அழகு முத்துகோன் சிலை நிறுவப்படும். ஒ. செஞ்சி தேசிங்கு ராஜா அவர்களுக்கு முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.
ஓ. போயர் சமூகத்தில் கோவை நகரில் பிறந்து மக்களுக்கு பல்வேறு துறைகளில் சிறந்து தொண்டாற்றி மறைந்த சமூகப் பெரியவர் திரு.கிருஷ்ணா போயர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்து தரப்படும்.
159. சூரிய ஒளி மின்சார மானியம் தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளின் மின் தேவைகளுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை தாங்களே தயாரித்து பயன்படுத்துவதை ஊக்குவிக்க மானியம் கூடுதலாக வழங்கப்படும்.
160. அரசு நிர்வாகம் அரசு ஊழியர்கள் நலன் அ. குடும்ப நலநிதி ரூபாய் மூன்று இலட்சத்திலிருந்து ரூபாய் ஐந்து இலட்சமாக உயர்த்தப்படும். ஆ. அரசு ஊழியர்கள் சி மற்றும் டி பிரிவினருக்கு வட்டி மானியத்துடன் கூடிய குறுகிய கால கடன்கள் வழங்கப்படும். இதன்மூலம் ரூ.2.00 இலட்சம் வரை கடன்கள் அளிக்கப்படும். இ. அரசுப்பணியில் சேரும் வயது வரம்பு இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்படும். காவல் துறை காவலர் நலன் அ. காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டு, காப்பீட்டின் மூலம் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
ஆ. காவல்துறை காவலர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வார விடுமுறை வழங்கப்படும். இ. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அனைத்து காவலர்களுக்கும் பதவி உயர்வு அளிக்கப்படும். ஈ. 20 ஆண்டுகாலம் காவலர்களாக பணியாற்றியவர்கள் எஸ்.எஸ்.ஐ ஆக பதவி உயர்வு பெறுவார்கள். 25 ஆண்டுகாலம் ஆன பிறகு எஸ்.ஐ ஆக பதவி உயர்வு பெறுவார்கள்.
பன்னடுக்கு வாகன நிறுத்தகம். சென்னை உள்ளிட்ட முக்கிய மாநகரப் பகுதியில் வாகன நிறுத்த தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் பன்னடுக்கு வாகன நிறுத்த வாகன வளாகங்கள் கூடுதலாக அமைக்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும். வட்ட அலுவலகங்கள் உருவாக்குதல் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் தேவையான பிற மாவட்டங்களிலும் புதிய வட்டாட்சியர் அலுவலகங்கள் அமைக்கப்படும்.
161. நிதி நிர்வாகத்தில் புதிய முயற்சி அ. தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியை பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெறும் வகையில் மத்திய அரசை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தும். ஆ. உள்நாட்டு, வெளிநாட்டு நிதி மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் சேவையை தமிழ்நாட்டில் இருந்து வழங்க சென்னை காவனூரில் 260 ஏக்கர் பரப்பளவில் "நிதி தொழில்நுட்ப நகர்" அமைக்கும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும், இதன் மூலம் 1,28,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
162. நாட்டுப்புறக் கலைஞர்கள் அ. 60 வயதைக் கடந்த அனைத்து நலிந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஆ. நிகழ்ச்சிகள் இல்லாத காலங்களில், நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ரூ.5000/- வருடாந்திர பராமரிப்பு நிவாரணத் தொகை வழங்கபடும்.
163. பத்திரிக்கையாளர் நலன் அ பத்திரிக்கையாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் குடும்ப நிவாரண நிதி உயர்த்தி வழங்கப்படும். ஆ தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு வீடுகட்டி கொள்வதற்கு குடியிருப்பு மனைகள் வழங்கப்படும். இ பத்திரிக்கையாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும். ஈ. சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இடஒதுக்கீடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அம்மாவின் அரசால் ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைத்து சாதிகளுக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும்.
No comments:
Post a Comment