
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிறந்து ஏழு நாளே ஆன பெண் சிசுவை குழந்தையின் பாட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கே.பாறைப்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி - சிவப்பிரியா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஏழு நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கடந்த புதன்கிழமை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் பெண் சிசு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

குழந்தையின் முகத்தில் காயம் இருந்ததை பார்த்த மருத்துவர் சந்தேகம் அடைந்து போலீஸூக்கு தகவல் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
அதில், மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போலீஸார், சிசுவின் பாட்டியை கைது செய்தனர். குழந்தையின் பாட்டி நாகம்மாள் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

மகனுக்கு ஆண் வாரிசு இல்லாத விரக்தியில், ஏழ்மை நிலையில் பெண் பிள்ளையை வளர்ப்பது கஷ்டம் என்பதால் சிசுவின் பெற்றோருக்கு தெரியாமல் கொலை செய்ததாக பாட்டி நாகம்மாள் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மதுரையில் பெண் சிசு கொலை அடிக்கடி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
No comments:
Post a Comment