
மேற்கு வங்கத்தில் அம்மாநில அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.1 குறைத்துள்ளது. இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், நம் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது புதிய உச்சத்தில் உள்ளது. இந்த விலை உயர்வால் சமானிய மக்களால் அதிகம் பாதிக்கப்படுவர். இதனால் மத்திய அரசு எரிபொருள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு, அம்மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.1 குறைத்துள்ளது. இது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இது தொடர்பாக அம்மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா நேற்று கூறியதாவது: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை நள்ளிரவு முதல் ரூ.1 குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது மக்களுக்கு சிறிது நிவாரணம் அளிக்கும் என்று மாநில அரசு நம்புகிறது.

மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.32.90 வரி மற்றும் செஸ் என வசூலிக்கிறது. மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, எரிபொருள் (பெட்ரோல், டீசல்) விலையில் செஸ் அதிகரிப்பது குறித்து ஆன்லைனில் விவாதம் நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விவாதம் நடத்த தயாரா?. மோடி அரசு ஆட்சிக்கு வந்த போது மொத்த வரி வசூலில் செஸ் 8 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது அது 14.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால்தான் வரியை உயர்த்தாமல் செஸ்ஸை ஏன் உயர்த்துகிறீர்கள் என்று மத்திய அரசிடம் சி.ஏ.ஜி. கேள்வி எழுப்பியது. இது கூட்டாட்சி அமைப்பின் மீதான நேரடி தாக்குதல். இது தொடர்பாக மத்திய நிதியமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment