
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய
கடிதம்:எஸ்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், ஊழல் வழக்கில்
உச்ச நீதிமன்றத்தால், 'குற்றவாளி' என தீர்ப்பு அளிக்கப்பட்டவருமான சசிகலா,
நான்காண்டு சிறை தண்டனையை அனுபவித்து, தற்போது வெளியே வந்திருக்கிறார்.
அந்த முன்னாள் குற்றவாளிக்காக, தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள்,
ஊடகங்கள் செய்யும் அலப்பறை, முகத்தைச் சுளிக்க வைக்கிறது.ஊழல் குற்றவாளியான
சசிகலா, பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்தார்.சாலை மார்க்கமாக,
'கார்' மூலம் வந்த மேற்படியாருக்கு, வழியெங்கும் ஆங்காங்கே மேள, தாளங்கள்
முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டது; பட்டாசு வெடித்து, இரு 'கார்'களில்
தீப்பற்றியது.
இந்த அலப்பறையின் முத்தாய்ப்பாக, ஐந்தாறு இடங்களில்,
ஹெலிகாப்டரில் இருந்து, சசிகலாவிற்கு மலர் துாவ, கலெக்டரிடம் அனுமதி
கேட்டுள்ளனர். நல்ல வேளை, அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.இந்த நாடு
சுதந்திரம் பெற, ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய மஹாத்மா காந்தி, நேரு,
படேல், திலகர், சுபாஷ் சந்திர போஸ் போன்றோரைக் கூட, மேள, தாளங்கள் முழங்க,
மலர் துாவி வரவேற்பு கொடுத்ததாக தெரியவில்லை.ஆனால், ஊழல் குற்றவாளி
ஒருவருக்கு, எவ்வளவு ஆடம்பரமாக வரவேற்பு கொடுத்திருக்கின்றனர்.ஊழலில்
குவித்துள்ள சொத்து முழுவதையும், அரசு பறிமுதல் செய்யாமல் விட்டு
வைத்திருப்பது தானே, இவ்வளவு அலப்பறைகளுக்கும் மூல காரணம்? ஊழல்
குற்றவாளியைக் கொண்டாடும் தமிழகம் உருப்படுமா?
No comments:
Post a Comment