
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 44-வது சென்னை புத்தகக் காட்சியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்தார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் சென்னை புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் உலக புத்தகக் காட்சிக்கு இணையாக சென்னை புத்தகக் காட்சி கருதப்படுகிறது. சென்னை புத்தகக் காட்சி வழக்கமாக ஜனவரியில் நடைபெறும். இந்த ஆண்டு கரோனா சூழல் காரணமாக பிப்ரவரிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், 44-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வி கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த புத்தகக் காட்சியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்து அரங்குகளைப் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ``சென்னை புத்தகக் காட்சி ஆண்டுதோறும் சீரிய முறையில் நடைபெற தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. புத்தகங்களைப் படிப்பவர்கள் அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளை நடைமுறை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்'' என்றார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசும்போது, ``சென்னை புத்தகக் காட்சிக்கு துணை முதல்வர், தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார்'' என்றார்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலாளர் எஸ்.கே.முருகன் மற்றும் பபாசி நிர்வாகிகள், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த புத்தகக் காட்சி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம். நுழைவுக் கட்டணம் ரூ.10. 800 அரங்குகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
பபாசி விருதுகள்
தொடக்க விழாவையொட்டி, மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றாண்டு கண்ட பதிப்பாளர் மற்றும் பதிப்பகத்துக்கு விருதுகளும் பபாசி சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் விருதுகளை வழங்கினார்.
சிறந்த பதிப்பாளர் விருது வசந்தா பிரசுரத்துக்கும், சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது ஆறு.அழகப்பனுக்கும், பதிப்பகச் செம்மல் விருது அனுராதா பதிப்பகத்துக்கும் வழங்கப்பட்டது.
குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா விருது எழுத்தாளர் கோ.மா.கொ.இளங்கோவுக்கும், பதிப்புச் செம்மல் க.கணபதி விருது ராஜ்மோகன் பதிப்பகத்துக்கும், அம்சவேணி பெரியண்ணன் விருது கவிஞர் சக்தி ஜோதிக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது ஆத்மா கே.ரவிக்கும் வழங்கப்பட்டன.
`இந்து தமிழ் திசை' அரங்குகள்
சென்னை புத்தகக் காட்சியில் `இந்து தமிழ் திசை' நாளிதழின் அரங்குகளும் (எண் 246 மற்றும் 247) இடம்பெற்றுள்ளன. இந்த அரங்குகளில், `இந்து தமிழ் திசை' பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களை 10 சதவீத சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். மேலும், `இந்து தமிழ் திசை' நாளிதழின் புதிய ஆண்டுச் சந்தாவுக்கும், பழைய சந்தாவை புதுப்பிக்கவும் பதிவு செய்யலாம்.
No comments:
Post a Comment