
புதியம்புத்தூர் அருகே தனியார் அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இயந்திரங்கள் எரிந்து சாம்பலாகின.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே வேலாயுதபுரம் தனியார் அனல் மின் நிலையத்தில் நேற்று காலை 11.30 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சிப்காட் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ மளமளவென பரவி, இயந்திரங்கள் உள்ள அறைக்கு பரவியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது.
இதனால் மின் உற்பத்தி நிலையத்தை சுற்றியுள்ள கீழவேலாயுதபுரம், மேல வேலாயுதபுரம், புதூர்பாண்டியாபுரம் ஆகிய பகுதிகளில் புகை மூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதற்கிடையே, நிறுவன வளாகத்தில் இருந்த அதிக திறன் கொண்ட மின்மாற்றி வெடித்தது. இதையடுத்து, இயந்திரங்களில் தீ பரவியதால், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரத்தில் இருந்து தீயணைப்புவாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீயை அணைக்க தீயணைப்பு படை வீரர்கள் மாலை 6 மணியை கடந்தும் போராடினர்.
புதியம்புத்தூர் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின் உற்பத்தி நிலையத்தில் மின் தடை ஏற்பட்டதால், ஜெனரேட்டரை இயக்க முயன்றுள்ளனர். அப்போது, தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. 3 மாடிகள் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாதனப் பொருட்கள், இயந்திரங்கள் முழுவதுமாக எரிந்து நாசமாகின.
இதே தனியார் மின் உற்பத்தி நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், கன்வேயர் பெல்ட் எரிந்து 7 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு, இந்த மின் உற்பத்தி நிறுவனம் செயல்படவில்லை. இயந்திரங்கள் பராமரிப்பு பணி மட்டும் நடந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment