
சிவகங்கை மாவட்டத்தில், மானா மதுரையை நகராட்சியாக்கத் தகுதி இருந்தும் 7 ஆண்டுகளாக தரம் உயர்த்தாமல் தாமதப்படுத்துகின்றனர். மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி 5.6 சதுர கி.மீ. பரப்பு கொண்டது. மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 32,257 பேர் உள்ளனர். தற்போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
ஆண்டு வருவாய் ரூ.6 கோடியைக் கடந்துவிட்டது. செங்கல் தயாரிப்பு, மண்பாண்டத் தொழிலுக்கு இப்பகுதி சிறப்பு பெற்றது. மேலும் சிப்காட் தொழிற்வளாகத்தில் பிளாஸ்டிக் பைப் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடந்து வருகின்றன. இங்கு ரயில்வே சந்திப்பு உள்ளது. மேலும் மானாமதுரை-தஞ்சை, மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலைகளும் இவ்வழியாகச் செல்கின்றன. இவ்வூரை வைகை ஆறு 2 பகுதி களாகப் பிரிக்கிறது. 2 பகுதிகளும் வேக மாக வளர்ந்துவரும் பகுதியாக உள்ளது. இந்நகருக்கு பல்வேறு காரணங்களுக்காக தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
5 ஆண்டுக்கு முன்பு கருத்துரு
மக்கள் தொகை, ஆண்டு வருவாய் அடிப்படையில் மானாமதுரை பேரூ ராட்சியை நகராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டுமென, கோரிக்கை எழுந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்ட ஆட்சியர் அரசுக்கு கருத்துருவை அனுப்பினார். ஆனால், அரசியல் அழுத்தம் இல்லாததால் அக்கருத்துரு கிடப்பில் உள்ளது. இதனால் மானாமதுரை பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மானாமதுரையைச் சேர்ந்த வியாபாரி பி.கலைச்சந்திரன் கூறியதாவது: மானாமதுரை நாளுக்குநாள் விரிவாக்கம் அடைந்து வருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை. இன்றும் கழிவுநீர், குப்பை வைகை ஆற்றில் தான் கொட்டப் படுகிறது. போதுமான அரசியல் அழுத்தம் இல்லாததால் தரம் உயர்த்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மானாமதுரை நகராட்சியாகத் தரம் உயர்ந்தால் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும். இதன்மூலம் நகரின் அடிப்படை வசதிகள் மேம் படுத்தப்படும் என்றார்.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 12 பேரூராட்சிகளில் மக்கள்தொகை, வருவாய் அடிப்படையில் மானாமதுரையை நகராட்சியாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான கோப்புகளை தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பி விட்டோம். அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.
No comments:
Post a Comment