
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி. மதுசூதன்ரெட்டி உத்தரவையடுத்து, காளையார்கோவில் அருகே மாணவர் களின் குடியிருப்புகளுக்குச் சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இதற்கு பெற்றோர் வரவேற்பு தெரிவித் துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவாமல் இருக்க 9 மாதங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மட்டும் சுழற்சி முறையில் பள்ளிகளுக்குச் சென்று வந்தனர். 10-வது, பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஆன்லைன்' முறையில் பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தன. மற்ற வகுப்புகளுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டுமென ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர்கள், தற்போது ஆட்சியரின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகின்றனர்.
காளையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மரக்கத்தூர், ஊத்துப்பட்டி, காளையார்கோவில், அரியநாச்சி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களின் வீடுகள், கோயில்கள், சமுதாயக் கூடங்களில் பாடம் நடத்தி வருகின்றனர். சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து மாண வர்கள் கற்கின்றனர். இது பெற்றோர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டிலேயே அடைந்து கிடந்த மாணவர்களும் ஆர்வமுடன் கல்வி கற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment