
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசை மோசமாக விமர்சித்த சிப்பாய் தற்போது பணியில் இல்லை. அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அங்கீகரிக்கப்படாத ராணுவச் சீருடை அணிந்த சிப்பாய், விவசாயிகள் நடத்திய போராட்டம் குறித்து ஆதரித்து, மத்திய அரசை மோசமான வார்த்தைகளில் விமர்சித்து வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அவர் 2018 ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வு பெற்றதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பரில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அம்மாநிலத்தின் உத்தரப் பிரதேசம், ஹரியாணா மற்றும் பஞ்சாப் எல்லைகளில் இந்தப் போராட்டம் 46-வது நாளாகத் தொடர்கிறது.
விவசாயிகளின் போராட்டத்திற்கு பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் அங்கீகரிக்கப்படாத ராணுவச் சீருடை அணிந்து மத்திய அரசை விமர்சித்துப் பேசியிருப்பது சர்ச்சைக்குள்ளானது.
அந்த வீடியோவில் ராணுவ வீரர் தீபக் குமார் என்பவர் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவளித்துப் பேசுகிறார். அதேவேளையில் மத்திய அரசுக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைக் காண முடிந்தது.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:
"இந்த வீடியோவில் ஓய்வுபெற்ற சிப்பாய் லான்ஸ் நாயக் தீபக் குமார் அங்கீகரிக்கப்படாத ராணுவச் சீருடை அணிந்து விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக மிகவும் மோசமான வார்த்தைகளில் பேசியுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அவர் தற்போது பணியில் இல்லை. 2018 ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வு பெற்றுவிட்டார்''.
இவ்வாறு ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment