
தேர்தலில் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரத்தை எதிர்கொள்ள வழக்கறிஞர் அணியினர் தொய்வின்றி உழைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக சட்டத் துறை சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் சட்ட மற்றும் அரசியல் கருத்தரங்கம் நேற்று நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக சட்டத் துறை செயலாளர் ஆர்.சண்முகசுந்தரம், செயலாளர் இரா.கிரிராஜன், மாநிலங்களவை உறுப்பினர்கள் பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் ஸ்டாலின் பேசியதாவது:
வழக்கறிஞர்கள் இல்லாமல் எந்தக் கட்சியையும் நடத்த முடியாது. அந்த அளவுக்கு வழக்கறிஞர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.
திமுகவின் துணை அமைப்பு என்று வழக்கறிஞர் அணியை குறிப்பிடுகிறோம். ஆனால், திமுகவுக்கு துணிச்சல் தரும் அமைப்பாக வழக்கறிஞர் அணி உள்ளது. தான் மறைந்ததும் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் கருணாநிதியின் கடைசி ஆசையாக இருந்தது.
அந்த ஆசையை நிறைவேற்றுவதில் தடை ஏற்பட்டது. தடையை மீறி கருணாநிதி உடலை அடக்கம் செய்ய நினைத்தேன். அதனால் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை நினைத்தும் கவலைப்பட்டேன். ஆனால், வழக்கறிஞர் அணியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 12 மணி நேரத்தில் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகில் அடக்கம் செய்ய அனுமதி பெற்றுத் தந்தனர். இந்தத் தீர்ப்பை எனது வாழ்நாளில் மறக்க மாட்டேன். அதற்காக பி.வில்சன், ஆர்.சண்முகசுந்தரம், விடுதலை உள்ளிட்ட சட்டத் துறை வழக்கறிஞர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக சட்டத் துறையின் சாதனைக்கு மகுடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு. இந்த வழக்கில் அவர்களுக்கு தண்டனை கிடைக்க திமுக சட்டத் துறை பணியாற்றியது. சென்னை தனி நீதி மன்றங்கள், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், பெங்களூர் தனி நீதிமன்றம் என்று அனைத்து நீதிமன்றங்களிலும் வாதாடியது. கண்கொத்தி பாம்பாக திமுக சட்டத் துறை இருந்ததால்தான் அவர்களுக்கு தண்டனை கிடைத்தது.
திமுகவை அழிக்க சிலரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதான் 2ஜி அலைக்கற்றை வழக்கு. இந்த வழக்கால் ஆ.ராசா மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டது. ஆ.ராசாவும், கனிமொழியும் சிறைக்கு செல்ல நேரிட்டது. அந்த வழக்கிலிருந்து திமுக விடுபட ஆ.ராசாவும், திமுக சட்டத் துறையின் பணியே காரணம். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் என்பது மிக மிக முக்கியமானது. இந்தத் தேர்தலில் வென்று திமுக தான் ஆட்சி அமைக்கப் போகிறது. தேர்தலில் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரத்தை எதிர்கொள்ள வழக்கறிஞர் அணியினர் தொய்வின்றி உழைக்க வேண்டும். மாவட்டங்கள் தோறும் வழக்கறிஞர் அணியின் 'வார் ரூம்' அமைக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment