
லக்னோ:
உத்திரபிரதேச மாநிலத்தில், படான் பகுதியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மாலையில் வெளியே செல்லாமல் இருந்திருந்தால், இந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்று தேசிய மகளிர் ஆணையத்தின் (என்.சி.டபிள்யூ) உறுப்பினரான சந்திரமுகி தேவி தெரிவித்துள்ளார்.
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவுக்கு அருகே படான் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க, அங்கன்வாடி பணியாளர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தனது கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுள்ளார். அதன்பிறகு வெகு நேரம் ஆகியும், அவர் வராததால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், அவரை பெண்மணியை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கும் அவர் கிடைக்கவில்லை. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது காவலர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் என்ன செய்வது என்று என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தபோது, இரவு 11:30 மணியளவில், காரில் வந்த மூன்று ஆண்கள், காணாமல்போன பெண்ணை அரை நிர்வாண கோலத்தில் வீட்டில் வாசலில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதில் அந்த பெண்ணின் உடலில், அதிக ரத்த காயங்கள் இருந்துள்ளது. மேலும் அவரது பிறப்புறுப்பில் அதிகமான இரத்தபோக்கு ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக இருக்கும், பாபா சத்யநாரைன் தாஸ் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளான வேத் ராம் மற்றும் டிரைவர் யஷ்பால் ஆகியோர் தான் இந்த பெண்மணியை நாசம் செய்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரவித்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, மீதமிருந்த இரண்டு குற்றவாளிகளும் புதன்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இறந்தவர், ஐந்து குழந்தைகளுக்கு தாய், மற்றும் அவரது குடும்பத்தில் வருமானம் ஈட்டிய ஒரே நபர் இவர்தான். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் அருகிலுள்ள கோவிலில் பிரார்த்தனை செய்ய வீட்டில் இருந்து சென்றுள்ளார். நள்ளிரவில், பூசாரி, சத்தியநாரைன் தாஸ், வேத்ரம், மற்றும் யஷ்பால் ஆகிய மூன்று ஆண்கள் ஒரு காரில் வந்து அவரது உடலை வீட்டின் முன் விட்டுவிட்டனர். கோயிலில் அவருக்கு மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் 'என் அம்மா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரது உடலில் அதிகமாக ரத்த காயங்கள் இருந்தது. அவர் மீது உடைகள் இல்லை' என்று அவரது மகன் தெரிவித்துள்ள நிலையில், மறுநாள் காலை, அவர்கள் புகார் அளிக்க உள்ளூர் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, 'அவர்கள் எங்களை இரண்டு முறை திருப்பி அனுப்பிவிட்டார்கள். அதன்பிறகு நாங்கள் 112 ஐ அழைத்த்தை தொடர்ந்து, பிற்பகல் 2-3 மணியளவில் போலீசார் வந்தார்கள்,' என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் உடலில் பெருமளவில் இரத்தப்போக்கு இருப்பதாகவும், குற்றவாளிகள் அவரை வீட்டில் விட்டுச் சென்ற சில நிமிடங்களில் அவது இறந்துவிட்டதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் நடந்த உடனேயே, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையீட்டு நடவடிக்கை எடுக்குமாறு என்.சி.டபிள்யூ தலைவர் ரேகா சர்மா உ.பி. டி.ஜி.பிக்கு கடிதம் எழுதினார். இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் அலச்சியத்துடன் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்திருக்கு ஆறுதல் கூறும் நோக்கில், வியாழக்கிழமை (நேற்று) அப்பகுதிக்கு சென்ற தேசிய மகளிர் ஆணையத்தின் (என்.சி.டபிள்யூ) உறுப்பினரான சந்திரமுகி தேவி, பாதிக்கப்பட்டவர் மாலையில் வெளியே வராமல் இருந்திருந்தால் இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று கூறி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், 'ஒரு பெண் எப்போதுமே நேரத்தை கவனத்தில் வைத்திருக்க வேண்டும், யார் என்ன சொன்னாலும் தாமதமாக வெளியேறக்கூடாது. பாதிக்கப்பட்டவர் மாலையில் தனியாக வெளியே சென்றது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவருடன் ஒரு குடும்ப உறுப்பினர் சென்றிருந்தால் இந்த சம்பவத்தில் இருந்து அவரை காப்பாற்றியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த கருத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள, என்.சி.டபிள்யூ உறுப்பினர் ரேகா சர்மா, சந்திரமுகி தேவியின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர் ஏன் இத்தகைய கருத்தை கூறினார் என்பது எனக்குத் தெரியாது, 'பெண்கள் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தங்கள் விருப்பப்படி செல்ல அனைத்து உரிமையும் உண்டு'. பெண்கள் செல்லும் இடங்களை பாதுகாப்பாக வைப்பது சமூகம் மற்றும் அரசின் கடமை என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்த பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மேந்திர யாதவ் தலைமையிலான குழு அந்த இடத்தை பார்வையிட்டு சம்பவம் குறித்து 'விசாரணை' செய்யும் என்று எஸ்பி செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் கோரப்பட்டுள்து. மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ .50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
No comments:
Post a Comment