
மக்கள் நீதி மய்யமும் ஆன்மிக அரசியலும் ஒன்றாகக் களமிறங்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு கமல் பதிலளித்துள்ளார்.
2021-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காகப் பல்வேறு கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன.
'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (டிசம்பர் 13) மதுரையில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். இதற்காக சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் சென்றார் கமல்ஹாசன். மதுரையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:
"இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் தொடங்கிய கட்சி 'மக்கள் நீதி மய்யம்'. பிரச்சாரத்தை இங்கிருந்து தொடங்குவதுதான் சரியாக இருக்கும் என்பதால் இங்கு தொடங்குகிறோம். கடைசி நிமிடத்தில் சில அனுமதிகள் மறுக்கப்பட்டாலும், நான் ஏற்கெனவே சொன்னதுபோல் பொங்கி வரும் புது வெள்ளத்துக்கு முன்னால் சிறு மடைகள் தடை ஆகமாட்டா.
நாங்கள் சட்டத்துக்கு உட்பட்டு எப்படியெல்லாம் பிரச்சாரத்துக்குத் திட்டமிட்டு இருந்தோமோ, அதன்படியே எங்கள் பிரச்சாரம் இருக்கும். சில இடங்களில் மட்டுமே தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. எங்களுக்குத் தடைகள் புதிதல்ல.

அரசியலுக்கு வருவதற்கு முன்பே தடை வைப்பார்கள். எங்களுக்கு அதெல்லாம் பழக்கம். அனுபவம் இருக்கிறது. ஒத்திகையும் பார்த்துவிட்டோம் என்பதனால் எங்களுக்குப் பதற்றமில்லை. மக்களைச் சென்றடைய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
சட்டத்துக்கு உட்பட்டு, விதிகளுக்கு உட்பட்டுதான் செயல்படுவதாக இருக்கிறோம். அதை மீறும் எண்ணம் எங்களுக்கு இல்லை. யாருக்கெல்லாம் எங்களது கருத்து குத்தலாக இருக்கிறதோ அவர்கள் தடை செய்வார்கள்".
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள், "மக்கள் நீதி மய்யமும், ஆன்மிக அரசியலும் ஒன்றாகக் களமிறங்க வாய்ப்பு உள்ளதா?' என்ற கேள்வியை முன்வைத்தனர்.
அதற்குக் கமல் பதில் அளிக்கையில், "முன்பே சொல்லியிருக்கிறேன். அணிகள் பிளவுபடும், அணிகள் கூடும். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்" என்று தெரிவித்தார்.
"உங்கள் தலைமையில் 3-வது அணி அமையும் என்று சொல்கிறார்களே. அது எந்த அளவுக்குச் சாத்தியம்?" என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "சாத்தியம். அது எப்போது சாத்தியம் என்பதை இப்போது சொல்ல முடியாது' என்று கமல் பதில் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு கமல் கேள்வி
டெல்லியில் புதிதாக 971 கோடி ரூபாய் செலவில் நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதனை தனது ட்விட்டர் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார் கமல்.
இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் கமல் கூறியிருப்பதாவது:
"சீனப் பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில் ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக் காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே...."
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment