
திருப்பத்தூர் மாவட்டம் கவுதமபேட்டை பகுதியில் ஆசிரியை ஆனந்தி (54) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரிடம் வேலூர் கொசப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
அப்போது, அந்த ஆசிரியரிடம் உங்கள் மகளுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கிக் தருவதாக வேலூர் கொசப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் அனுகியதாக கூறப்படுகிறது. வெங்கடேசன் வேலூர் நகர பாமக முன்னாள் செயலாளர் ஆவார்.
இதை நம்பி கடந்த 2015ஆம் ஆண்டு வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே வைத்து வெங்கடேசனிடம் ரூ.5 லட்சம் பணத்தை ஆனந்தி கொடுத்துள்ளார். ஆனால் அவர் கூறியபடி தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

மேலும், அந்தாண்டுக்கான மருத்துவப்படிப்பு சேர்க்கை முடிந்ததால் வாங்கிய பணத்தை ஆனந்தி திரும்பக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் தனது கட்சியின் பெயரையும் கூறி ஆனந்தியை மிரட்டியதாக சொல்லப்படுகிறது. அதேபோல், வேலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடமும் 5 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு சீட் வாங்கிக் கொடுப்பதாக கூறி ஏமாற்றியது தெரியவந்தது.
இதனையடுத்து இது தொடர்பாக ஆனந்தி, சதீஷ்குமார் ஆகியோர் வேலூர் மாவட்டக் குற்றப் பிரிவில் புகார் மனு அளித்தனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது தான் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். கடந்த 18ஆம் தேதி அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே விசாரணையில் மேலும் பலரிடம் இதுபோன்று வெங்கடேசன் மோசடி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
newstm.in
No comments:
Post a Comment