
மன்னார்குடி நகராட்சியில் தனியார் நிறுவனத்தின் தற்காலிக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், உயர்த்தப்ப்பட்ட ஊதியத்தை வழங்கிட கோரி, வேலைநிறுத்தப் போராட்டத்தின் 6 ஆம் நாளான புதன்கிழமை காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
மன்னார்குடி நகராட்சியில் 15 ஆண்டுக்கு மேலாக தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களை நிமித்து, நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுப்படுத்தி வருகிறது. இதில், 80 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கான ஊதியத்தை, ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்யும் தொகை வழங்கப்பட்டு வந்தது. நிகழாண்டுக்கு, நாள் ஒன்றுக்கு ஊதியத்தை ரூ.385 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டும், நகராட்சி நிர்வாகம் பழைய ஊதியமான 291ஐ வழங்கி வந்தது. இதற்காக, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பல கட்டப் போராட்டம் நடத்தியும் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து,நகராட்சி தனியார் நிறுவன தற்காலிக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் சங்கம்(சிஐடியு),சென்ற நவ.27 ஆம் தேதி முதல்,கோரிக்கை நிறைவேறும் வரையிலான காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
போராட்டத்தின்,6-ஆம் நாளான,புதன்கிழமை நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் சங்க கிளைத் தலைவர் கே.திருநாவுக்கரசு தலைமையில், நகராட்சி வளாகத்தினுள் கொட்டும் மழையிலும் நனைந்தப்படி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் மற்றும் என்எம்ஆர் ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் நா.பாலசுப்ரமணியன், சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.மாலதி, துணைத் தலைவர் ஜி.ரெகுபதி, ஒன்றியத் தலைவர் ஏ.பி.தனுஷ்கோடி உள்ளிட்டோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment