
நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்க உள்ள நிலையில், அவரது கட்சிக்கு எதிராக புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆன்மிக அரசியல் என்ற புதிய பாதையில் நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கு எதிராக 'அரசியலில் ஏன் ஆன்மிகம்' என்ற பெயரில் புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.வீரபாண்டியன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, சமூகநீதியை அடிப்படையாக கொண்டு அரசியல் இயங்கி வருகிறது. சமூகநீதிக்கு கேடு விளைவிக்கும் வகையில், அரசியலை அகற்றி விட்டு மதவாத அரசியலை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன.
அந்த அடிப்படையில்தான் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் என்று அறிவித்துள்ளார். அந்த கொள்கையை முன்வைத்து கட்சி தொடங்க உள்ளார். ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சி, புதிய கட்சி அல்ல. அது பாஜகவின் ஒரு கிளை தான். இது சிறு குழந்தைகளுக்குகூடத் தெரியும். எனவே, ஆன்மிகமும், அரசியலும் வேறு என்ற கருத்தை பொதுமக்களுக்கு புரிய வைக்கும் வகையில் இந்த புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய இயக்கத்தில், திராவிட இயக்க தமிழர் பேரவை, ஆதித்தமிழர் பேரவை, திராவிட தமிழர் கட்சி, புதிய குரல், பெரியார் சிந்தனையாளர் இயக்கம், இளைஞர் இயக்கம், தமிழ்நாடு திராவிடர் கழகம், திராவிடன் சமூகப்பணிகள் இயக்கம் உள்ளிட்டவை இணைந்து செயல்படும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment