Latest News

எங்கள் மீது பழி சுமத்துவதும் வசைபாடுவதுமே ஸ்டாலினின் வாழ்க்கையாக இருக்கிறது: மதுரையில் பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்தைத் தொடங்கிவைத்து முதல்வர் பழனிசாமி பேச்சு

எங்கள் மீது பழி சுமத்துவதும் வசைபாடுவதுமே ஸ்டாலினின் வாழ்க்கையாக இருக்கிறது என மதுரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

மதுரை மக்களின் கால் நூற்றாண்டு கனவு திட்டமான ரூ.1,295 கோடி முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தை, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இதே டிசம்பர் மாதத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவித்தார்.

தற்போது இந்தத் திட்டம் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படவுள்ளது. முதல்வர் கே.பழனிசாமி, இன்று இந்த திட்டத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் போல் பிரம்மாண்ட குடிநீர் திட்டமாகும். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் மதுரையில் 24 மணி நேரமும் மக்களுக்கு மாநகராட்சியால் குடிநீர் வழங்க முடியும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய முதல்வர் கூறியதாவது:

மதுரை மக்களின் கனவு நனவாகியுள்ளது. மதுரை மாநகர மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் தொடர் கோரிக்கையை முன்வைத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்று ரூ.1,295 கோடி செலவில் இத் திட்டம் தொடங்கப்படுகிறது. பெரியார் லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரைக்கு 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக அரசு மக்கள் மனதில் நிலைக்கும் அரசு. காரணம் வாக்குறுதியாக வழங்கிய நலத்திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு வருகின்றனர்.

2011-ல் ஜெயலலிதா முதல்வரானபோது தமிழகத்தில் நாளொன்றுக்கு 4900 எம்.எல்.டி. குடிநீர் வழங்கப்பட்டது. அவரது வழியில் நடக்கும் ஆட்சியின் கீழ் தற்போது தமிழகத்தில் நாளொன்றுக்கு 7700 எம்.எல்.டி குடிநீர் மக்களுக்கு வழங்குகிறோம். தடையில்லாமல் குடிதண்ணீர் வழங்குகிறோம். அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 76 கூட்டுக் குடிநீர் திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

கிராமப்புற மக்களுக்கும் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்குகிறோம். தமிழகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதே எங்களின் லட்சியம்.

மதுரைக்கென அதிமுக அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இப்போதுகூட மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் மதுரை மேம்படுத்தப்படுகிறது.

ஆனால், எங்கள் மீது பழி சுமத்துவதே ஸ்டாலினின் வாழ்க்கையாக உள்ளது. அரசாங்கம் நல்லது செய்தாலும் கூட அதைப் பாராட்டும் குணம் அவருக்குக் கிடையாது. தேசிய அளவில் அதிகளவு விருது பெற்ற அரசாக தமிழக அரசு உள்ளது.
தமிழக அரசு நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளித்ததன் காரணமாக இந்தாண்டு 313 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இணைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் தரமான சாலைகள் சிறக்கப்பட்டுள்ளது. தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறது. ஆனால், ஸ்டாலின் தேர்தலை மையமாக வைத்து எங்களை வசைபாடாத நாளே கிடையாது. அவர் அறையில் இருந்து பேசுகிறார். நாங்கள் மக்களை நேரில் சந்தித்துப் பேசி வருகிறோம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.